தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 31:20 

எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

மணவாட்டி சபை மகிமையை இழந்து போகாமல் இருக்க எப்படி ஆவிக்குரிய வழியில் நடக்க வேண்டும் ?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நம்முடைய விசுவாச யாத்திரையில் மணவாட்டி சபையை, கர்த்தர் எவ்விதம் பாதுகாக்கிறார் என்பதனை கர்த்தர் மோசேயை வைத்து நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி, அல்லாமலும் மணவாட்டி சபை என்பது, நம்முடைய ஆத்துமா ஜீவன் பெற்று தேவச் சாயல் அடைந்து, பின் ஒவ்வொரு நாளிலும் தேவச்சமுகத்தில் தேவனுடைய வார்த்தைக்கு காத்திருந்து, தேவபெலனடைந்து பரிசத்தத்தோடு எழும்புவது தான் ஜீவயாத்திரை. 

இவ்வித ஜீவ யாத்திரை நாம் செய்யும் போது அனுதினம் கவனத்தோடும், எச்சரிப்போடும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். என்னவெனில் நம்முடைய இருதயத்தை சத்துருவானவன் பல உபாய தந்திரங்களை கொண்டுப்போட்டு, தேவனை விட்டு தூரமாக்கி விடுவான். அப்படிப்பட்ட கண்ணியில் நாம் விழாதபடி ஜாக்கிரையாக நாம் காணப்பட வேண்டும். சத்துருவின் கண்ணியில் நாம் சிக்கிக் கொள்வோமானால் நம்மிடத்தில் உள்ள மகிமை நம்மை விட்டு எடுபட்டு போகும்.  அதன் உதாரணம் தான் பெலிஸ்தர் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை கைப்பற்றியதால் இஸ்ரவேலருடைய மகிமை இஸ்ரவேலை விட்டு எடுபட்டு போனது.  

குறிப்பாக பிரியமானவர்களே நாம் கர்த்தருக்கு பிரியமில்லாத பாதையில் நடப்போமானால், உலக மோக இன்பங்களில் சிக்கி, சிற்றின்பத்தில் மயங்கி ஜீவிப்போமானால் ஒருபோதும் நாம் கர்த்தருடைய மகிமை நம்மளில் தங்காது. மேலும் இஸ்ரவேலராகிய எப்பிராயீமை நாம் பார்க்கும் போது திருப்பிப்போடாத அப்பம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் முழுமையும் கர்த்தருக்கென்று தங்களை ஒப்புக்கொடாதவர்கள்.  மேலும் எப்பிராயீமைக் குறித்து தேவன்  சொல்லுகிறது என்னவென்றால் 

ஓசியா 9:8-11  

எப்பிராயீமின் காவற்காரர் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவி பிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான்.

கிபியாவின் நாட்களில் நடந்ததுபோல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.

 வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.

 எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோம்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை. 

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது வனாந்தரத்தில் திராட்ச குலைகளை கண்டுப்பிடிப்பது போல் நான் அவர்களை கண்டுப்பிடித்தேன். அத்திமரத்தில் முதல் பழுத்த  பழங்களைப் போல நான் அவர்களை கண்டு பிடித்தேன்.  ஆனால் அவர்கள் பாகால்பேயர் அண்டைக்கு போய் இலச்சையானதர்க்கு தங்களை ஒபபுக்கொடுத்து தாங்களும் அருவருப்புகளானார்கள்.  அதனால் அவர்களுடைய மகிமை ஒரு பறவையைப் போல் பறந்து போம்.  அதைத்தான் 

ஓசியா 9:11

எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோம்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை 

பிரியமானவர்களே தேவனுடைய வசனங்களை நாம் தியானிக்கையில் நாம் சிந்தித்துக்கொள்ள வேண்டிய முக்கிய காரியம் என்னவென்றால் நாம் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவின் மகிமையில் நாம் பிரவேசித்த பிறகு, நம்முடைய உள்ளத்திற்க்குள் ஏதாவது  விக்கிரக எண்ணங்கள்  முதற்பலனாக வைத்திருப்போமானால், நமக்குள் தேவமகிமை நிலைத்திராது. அந்த விக்கிரக எண்ணங்கள் என்னவென்று சிலதை மாத்திரம் இப்போது தியானிப்போமாகில், நம்மளில் அநேகம் பேர், தங்கள் தொழில், உத்தியோகம், குடும்பம், புருஷன், மனைவி, பிள்ளைகள், படிப்பு, உற்றார் உறவினர், சொந்தக்காரர்கள், தங்கள் சொத்து சம்பாத்தியங்கள் இவையெல்லாவற்றையும் தங்கள் தெய்வம் என்று எண்ணிக்கொண்டு, வெளி உலகத்திற்கு தாங்கள் இரட்சிக்கப்பட்டோம் என்று சொல்லிக்கொண்டு  தேவனுடைய பிள்ளைகளைப் போல நடித்து வேஷம் அணிந்து காட்டுவார்கள். இவர்களை குறித்து தேவன் எப்பிராயீமர் என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.   

ஆனால் நம்முடைய முதற் பலன் கிறிஸ்து என்பதை நாம் ஒவ்வொருவரும் கருத்தாக கைக்கொள்ள வேண்டும். அவ்விதமாக நாம் தேவனிடத்தில் பற்றுதலோடு இருப்போமாகில் தேவமகிமை நம்மை விட்டு மாறிப்போகாதப்படி நம்முடைய விசுவாச ஜீவ யாத்திரையை இஸ்ரவேலரை மேகத்தின் மறைவுக்குள் மகிமையாய் நடத்தி சென்றது போல நம்மையும் ஆசீர்வாதத்தோடு நடத்தி செல்வார். 

பிரியமானவர்களே இந்த கருத்துக்களை வாசிக்கிறதில் யாராவது தேவமகிமையை இழந்து, சந்தோஷம், சமாதானம் இல்லாமல் காணப்படுவீர்களானால் இப்போதே கேட்ட, வாசித்த சத்திய வார்ததைகளுக்கு கீழ்ப்படிந்து, நம்முடைய பாவம், அக்கிரமம், துணிவோடு செய்த மீறுதல்கள் இவற்றிற்காக அழுகையோடும், கண்ணீரோடும்  தேவசமூகத்தில் ஒப்புக்கொடுப்போம்.  

அதனைக்குறித்து எரேமியா 31:7-14

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள்.

இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத் தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.

அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.

ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.

கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.

அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.

ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் நம்மை தேவச்சமூகத்தில் உண்மையாக உள்ளம் தாழ்த்தி ஒப்புக்கொடுப்போமானால், நம்மை அவ்விதமே எல்லா நன்மைகளாலும் ஆசீர்வதிப்பார்.  மேலும் மணவாட்டி சபையாகிய நாம் மகிமை மேல் மகிமை பெற்று, மேகத்தின் மறைவுக்குள்ளே  எப்பொழுதும் காக்கப்படும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.