தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சகரியா 2:5 

நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

மணவாட்டி சபையை விசுவாச யாத்திரையில் கர்த்தர் பாதுகாக்கும் விதம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தர் மோசேயை வைத்து ஆசரிப்பு கூடாரத்தின் வாசஸ்தலத்தை நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி மகிமையான மணவாட்டி சபையாகிய பரிசுத்த ஆவியானவர் எப்படி  நம்முடைய உள்ளத்தில் மகிமைபடுகிறார் என்பதனை தியானித்தோம்.  இந்த காரியங்கள் மோசே செய்து முடிக்க சரியாக ஒரு வருஷம் ஆகிவிடுகிறது. ஏனென்றால் நம்முடைய ஆத்துமா சரியாக சீர்பட்டு வருவதற்கும், நம்முடைய உள்ளத்தில் இருக்கிற எல்லாப்  பொல்லாத கிரியைகளும் ஒரே நாளிலோ, இரண்டு நாளிலோ முழுமையாக மாறுவது மிக கடினம்.  ஆனால் ஒரே நாளில் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்தில் மகிமைப்படவேண்டுமானால், நாம் அனுதினம் தேவனுடைய சத்தம் கேட்டு கீழ்ப்படிந்து நடப்போமானால் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் நம்முடைய உள்ளத்தில், கர்த்தரின் சித்தம் செய்வார். 

யாத்திராகமம் 40:18-21

மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,

வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.

பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,

பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் நம்மை அவருடைய  கூடாரத்தின் மறைவில் மறைத்து, அவருடைய சிறகுகளின் கீழ் நம்மை மறைக்கிறார் என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அல்லாமலும் கர்த்தர் மோசேக்கு கற்பித்ததின் பிரகாரம் ஆசரிப்புக் கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய் மேஜையை திரைக்குப் புறம்பாக வைத்து, அதின் மேல் அப்பத்தை வரிசையாக அடுக்கி வைத்தான். 

பிரியமானவர்களே ஆசரிப்புக் கூடாரமும் அதில் வாசஸ்தலமும் கர்த்தர் ஜனங்கள் நடுவில் வாசம்பண்ணும் பொருட்டு மோசேயினிடத்தில் அமைக்க சொல்கிறார்.  அப்போது மோசே தீர்க்கதரிசியாக இருந்தான்.  அப்பொழுது லேவிக்கோத்திரத்தில் ஆரோனையும் அவன் குமாரரையும் மோசேயை வைத்து ஆசாரியனாக அபிஷேகம் பண்ணி ஆராதனைக்குரிய பரிசுத்த வஸ்திரங்களை உண்டுப்பண்ணி உடுத்துவிக்கிறார்.  பின்பு யோசுவா வரையிலும் ஆசாரிய ஊழியம் நடந்துக்கொண்டிருந்தது. அதற்குபின் நியாயாதிபதிகளை நியமிக்கிறார்.  ஆனால் ஜனங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக்கேளாமல் அந்நிய தேவர்களை சேவித்து சோரம் போனார்கள்.  

ஆதலால் நியாயாதிபதிகள் 2:16-23

கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.

அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.

கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.

நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்துகொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,

யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.

அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.

அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.

பின்பு ஜனங்கள் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று சாமுவேல் தீர்க்க்தரிசியிடம் கேட்டார்கள். அது சாமுவேல் தீர்க்கதரிசியின் பார்வைக்கு தகாததாய் காணப்பட்டதால் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். ஆனால் கர்த்தர் சாமுவேலிடம் சொல்கிறார், நீ ஜனங்கள் சொல்வதை கேள், ஏனென்றால் அவர்கள் உன்னை தள்ளவில்லை, நான் ஆளாமல் இருக்கும்படி என்னைத் தான் தள்ளினார்கள்.  

ஆனாலும் 1சாமுவேல் 8:9

இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.

  இப்படி அவன் கர்த்தர் சொன்ன காரியங்களை எடுத்து சொல்லியும் அவர்கள் கேளாததினால் அவர்களை ஆளும்படி ராஜாக்களை ஏற்ப்படுத்தினார். அவ்விதம் ராஜாக்கள் ஆளுகைச் செய்துக் கொண்டிருக்கும் போது கர்த்தர், தாவீது இஸ்ரவேலை ஆளும் போது கர்த்தர் தாவீதினிடத்தில் நான் உலாவுகிறதற்க்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும். ஆனால் நீயல்ல, உன் கர்ப்பப்பிறப்பாய் இருக்கிற சாலொமோன் அந்த ஆலயத்தை கட்டுவான் என்றார்.  அப்படியே சாலொமோனை வைத்து கர்த்தர் ஆலயத்தை கட்டி முடித்தார். பின்பு ஆலயம் அருவருப்புகளால் நிறையப்பட்டதால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், நான் இதனை மூன்று நாளைக்குள்ளாக எழுப்புவேன் என்று சொல்கிறார். அவர் தம்முடைய சரீரத்தை குறித்து சொல்கிறதை பார்க்கிறோம். மேலும் மனுஷனுடைய கைகளால் கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்ட  ஆலயத்தில் இனி நான் வாசம்பண்ணுவதில்லை என்று சொல்லி, கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் என்றென்றும் பிழைத்திருக்கும்படியாக அவர் நம்முடைய உள்ளத்தில் ஆலயமாக எழும்புகிறார். அதனால் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தின் பணிகள் எல்லாம் நம் உள்ளத்தில் நடக்கிறது. 

மேலும் நாம் பார்க்கும் போது மேஜையின் மேல் அப்பம் கர்த்தருடைய சமூகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்றால், அப்பம் தேவனுடைய வசனம், மேஜை என்பது கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம். அதுதான் இயேசு கிறிஸ்து சொல்கிறார்,  ஜீவ அப்பம் நானே.  இவ்விதமாக கர்த்தர் கற்ப்பித்த காரியங்களும், அவர் திருஷ்டாந்தப்படுத்திய காரியங்களிலும் நாம் கீழ்படிந்து, நம்மை சீர்ப்படுத்திக்கொண்டு, தேவன் பேரில் மாத்திரம், நம்பிக்கையும், வைப்போமானால் 

யாத்திராகமம் 40:34-38  

அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.

மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக்கூடாமல் இருந்தது.

வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்.

மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள்.

இஸ்ரவேல் வம்சத்தார் பண்ணும் எல்லாப் பிரயாணங்களிலும் அவர்களெல்லாருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாகப் பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தது.

மேற்க்கூறப்படுகிற தேவனுடைய வார்த்தைகள் பிரகாரம் நம்மை அவருடைய மேகத்திலும்,அவருடைய அக்கினியாலும் மறைத்து, எந்த சத்துருவும் நம்மை தொடாதபடி, சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்து, நம்மை அவருடைய மகிமையால் ஆசீர்வதித்து நம்முடைய விசுவாச ஓட்டம் வெற்றியோடு ஓடி நமக்காக தேவன் வைத்திருக்கிற பந்தயப் பொருள் பெற்றுக்கொள்ள கிருபை தருவார். இவ்விதமாக நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம். ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.