தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 22: 17 

ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

மணவாட்டி சபை எங்கு காணப்படுகிறது? நம்முடைய உள்ளத்தில்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை எப்படி தேவனை  ஆராதிக்க வேண்டும் என்றும், அவர்கள் பாரம்பரியம் எல்லாம் விட்டு விட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டும் சொந்த இரட்சகராக உள்ளத்தில் ஏந்தினவர்களாக இருக்க வேண்டும் என்றும் தியானித்தோம்.  இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தர் மோசேயோடு பேசி, எழுதச் சொல்கிறார்.  

யாத்திராகமம் 34:27-35

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.

அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.

மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான்.

பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய்மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.

மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.

மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது,

இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

பின்பு கர்த்தர் மோசேயோடும், இஸ்ரவேலோடும் உடன்படிக்கை பண்ணுகிறார்.  ஆனால் மலையின் மேல் மோசே நாற்பது நாள் புசியாமலும், குடியாமலும் இருந்து பத்து கற்பனைகளை உடன்படிக்கை பலகையில் எழுதி, பின்பு இரண்டு சாட்சிப் பலகைகளை எடுத்துக்கொண்டு சீனாய் மலையிலிருந்து இறங்கி வருகிறான்.   அவ்விதம் மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வருகிறப்போது, கர்த்தர் அவனோடு பேசினதினாலே அவன் முகம் பிரகாசித்ததை அவன் அறியாதிருந்தான்.    ஆனால் இஸ்ரவேல் புத்திரர் பார்க்கும் போது அவன் முகம் பிரகாசித்திருந்ததை கண்டு அவனிடம் சேரப் பயந்தார்கள.  

பிரியமானவர்களே, கர்த்தர் இந்த காரியத்தை திருஷ்டாந்தப்படுத்தியதின் காரணம் என்னவென்றால், சீனாய் மலை கிறிஸ்து என்பதும், நாம் உபவாசத்தோடும், ஜெபத்தோடும் நாற்பது நாள் தரித்திருந்து அவருடைய கற்பனைகளை, பாரம்பரிய வாழ்க்கையை விட்டவர்களாக, நம்முடைய சதையாகிய இருதயத்தில் எழுதினவர்களாக காணப்படவேண்டும்.  இவ்வாறு உபவாசமும், ஜெபமும் நம்முடைய வாழ்வில் இருந்தால் மட்டுமே நாம் கர்த்தரிடத்திலிருந்து கேட்க்கிற அவருடைய வார்த்தைகள் நம் உள்ளத்தில் ஆவியில் பதிக்க  முடியும்.  அதனால் நிச்சயமாகவே நாம் தேவனுடைய சந்நிதியில் காத்திருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  பெற்றுக்கொண்டவர்கள் அதனை அனுதினம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.  

ஏசாயா 40: 28 – 31

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

இதனை வாசிக்கிற அன்பானவர்களே, நாம் தேவச் சமூகத்தில் காத்திருந்தால், அவர் அநாதி தேவன், அவர் சோர்ந்து போகாதப்படி இரவும் பகலும் நம்மை பாதுக்காத்து, நமக்கு பரலோக போஜனமும் தந்து, நாம் நடந்துக் கொள்ள வேண்டிய பாதையை நமக்கு காட்டி, நம்மை அனுதினம் வழிநடத்தி, அவர் சோர்ந்து போகாமல் சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுத்து,சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணுகிறவராயிருக்கிறார்.  நாம் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்தால் மட்டுமே புதுப்பெலன் பெற்றுக் கொள்ள முடியும்.    இளைப்படையாமல், சோர்ந்துப் போகாமல் எத்துன்பங்கள் வந்தாலும் நாம் அதனை சந்தித்து கர்த்தரோடிசைந்து கிருபைப்பெற்று வாழ முடியும்.  

அதனைக் குறித்து II பேதுரு 3:12-14

தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.

அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கையில் தேவனுடைய நாள் சீக்கிரமாய்  வரும்படிக்கு ஆவலோடே காத்திருங்கள் என்று சொல்கிறார் என்றால், அப்போது தான் நம்முடைய பாரம்பரியம், பாவப்பழக்கவழக்கங்கள் நம்மிடத்தில் மீண்டும் இடம் பெறாதப்படி நம்மை காத்துக்கொள்ள முடியும். மேலும் கர்ததருடைய நாள் வரும் போது நம்முடைய பழைய பாரம்பரிய பாவம், அக்கிரமம், மீறுதல் இவற்றை எல்லாம் தேவன் அக்கினியால் சுட்டெரித்து நம்மை சுத்தம் செய்யும்படியாக நம்முடைய உள்ளத்தில் பட்சிக்கிற அக்கினியாக இறங்குகிறார்.  அதைக்குறித்து தேவ வசனமானது அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அப்போது கர்த்தருடைய வாக்குத்தத்தமாகிய நீதி வாசமாயிருக்கும்.  இவை பரிசுத்த ஆவியின் பெலன் பெற்றுக்கொள்வதை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் அநேகம் பேர் வேறுவிதமாய் உபதேசிக்கிறதை நீங்கள் கேட்டிருக்கலாம். அதனால் அதனை நீங்கள் ஒன்றுகூட அலசி ஆராய்ந்து செயல்படுங்கள்.  

II பேதுரு 3:16-18

எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.

ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

ஆதலால் மேற்க்கூறப்பட்ட வசனங்களை தியானித்து அக்கிரமக்காரருடைய வஞ்சகத்தில் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதப்படிக்கு எச்சரிக்கையாயிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் நாம் யாவரும் வளருவோம். அப்படி நாம் வளர்ந்து 

II பேதுரு 3:14

ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

இவ்வித மணவாட்டி சபையாக நாம்  ஒருக்கப்பட்டு மணவாளன் நம்மை சேர்க்கும்படி  வர காத்திருக்கிற நாமெல்லாரும் கறையற்றவர்களும், பிழையில்லாதவர்களுமாய் அவர் சந்நிதியில் காணப்படும்படியாக ஜாக்கிரதையாக இருந்து பெற்றுக்கொள்வோம்.  அதனை கர்ததர் மோசேயை  வைத்து நமக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறரர். அந்த நாளில் மோசேயின் முகத்தில் இருந்த பிரகாசத்தினால் யாரும் பக்கத்தில் போக முடியவில்லை. அதனால் இஸ்ரவேலரிடம் கர்த்தர் சொன்ன யாவற்றையும் மோசே சொல்லும்போது தன் முகத்தின் மேல் முக்காடு போட்டுக்கொள்வான்.  ஆனால் இந்த முக்காடு கிறிஸ்துவினால் நீக்கப்படுகிறது. அதைக்குறித்து 

II கொரிந்தியர் 3:14-18

அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.

மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.

அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம்.

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

கர்த்தரிடத்தில் மனந்திரும்பும் போது அந்த முக்காடு எடுபட்டுப் போகும்.  அதனால் தான் இயேசு கிறிஸ்து சொல்கிறார் மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபமாயிருக்கிறது.  அந்த நாளில் வெளியில் பிரகாசம், இந்த நாட்களில் நம் மனதில் பிரகாசம், இவ்விதம் நம்முடைய உள்ளம் மணவட்டி சபையாக ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.


 -தொடர்ச்சி நாளை.