தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 8: 51
ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
பிதாவின் சித்தம் அறிய நாம் என்ன செய்ய வேணடும்?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தர் நம்மை நினைத்தால் மட்டுமே நம்முடைய விசுவாச யாத்திரையில் அவர் சமூகம் நமக்கு முன்பாக செல்லும். அப்படி நமக்கு முன்பாகச் செல்ல கர்த்தருடைய கண்களில் நமக்கு கிருபை கிடைக்க வேண்டும். அவ்விதம் கிருபைப் பெற்றுக்கொள்வதற்கு, அவர் வழியில் நடக்க வேண்டும். அவர் வழியில் நாம் நடக்க, கிறிஸ்து நடந்த மாதிரி பிதாவின் சித்தம் நாம் செய்யவேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் யோவான் 14:6-ல் இயேசு சொல்கிறார்.
அதனால் நாம் இயேசு கிறிஸ்து நடந்து காட்டிய மாதிரி நாம் நடந்தால் மட்டுமே நாம் பிதாவின் சித்தம் செய்கிறோம். பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். பிதாவின் சித்தம் நாம் எப்படி செய்வோமென்றால்
யோவான் 5:19-24
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இதிலிருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால், நம்முடைய பிதா எல்லா அதிகாரத்தையும் குமாரனுக்குக் கொடுத்திருக்கிறார். பிதா செய்கிறது எதுவோ அதையே குமாரன் செய்கிறார், அல்லாமல் குமாரனாக தானாக ஒன்றும் செய்கிறதில்லை என்று பார்க்கிறோம். எப்படியெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்
யோவான் 14:12
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
என்னை கண்டவன் பிதாவை கண்டான், ஆதலால் அன்பானவர்களே பிதாவின் சித்தம் என்பது இயேசு செய்த கிரியைத் தான் பிதா செய்த கிரியை. அதைத்தான் இயேசு சொல்கிறார் நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள். இல்லாவிட்டால் என் கிரியைகளினிமித்தம் நம்புங்கள் என்று சொல்கிறார். அதைத்தான் பழைய ஏற்ப்பாட்டின் பகுதியில் இஸ்ரவேல் ஜனங்கள் விக்கிரகத்தை செய்ய வைத்து பாவம் செய்து மரணத்துக்கேதுவாக நிர்வாணிகளாயிருந்ததை தேவன் கண்டு, அவர்கள் நிர்மூலமாகிறதை விரும்பாமல், அவர்கள் ஆத்துமா கிறிஸ்துவினால் பிழைக்க வேண்டும் என்ற கருத்தோடு, மோசயிடம் நீ ஜனங்களை நான் சொல்லியிருந்த தேசத்திற்கு அழைத்துக் கொண்டு போ. என் தூதனை உங்களக்கு முன்பாக அனுப்புவேன் என்று கர்த்தராகிய கிறிஸ்துவை குறித்து நம்முடைய தேவன் சொல்லுகிறதை தியானித்தோம். அவற்றின் கருத்துத்தான் இயேசு கிறிஸ்துச் சொல்கிறார், நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம், நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி யில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது நம்புங்கள் என்று சொல்கிறார். இதனை நாம் தியானிக்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் நம்மை பாவம், மரணம் என்பவற்றிலிருந்து, விடுதலை பணணும் படியாகவே நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஏனென்றால் அவர் சமூகம் நமக்கு முன்பாக செல்லா விட்டால், நம்முடைய விசுவாச ஓட்டம் ஓடி பந்தயப் பொருள் பெற்றுக்கொள்ள முடியாமல் அதனை இழந்து விடுவோம். அதனால் எல்லாவற்றிலும் தேவனுக்கு கீழ்ப்படிந்து பயத்தோடும், நடுக்கத்தோடும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னவென்றால் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன் என்று ஏசாயா தீர்க்கத்தரிசி புஸ்தகத்தில் கர்த்தர் சொல்லுகிறார். மேலும் நாம் தியானிக்கும் போது மோசே கர்த்தரிடத்தில் தேவ கிருபைக் கேட்டு பெற்றுக்கொள்கிறான்.
யாத்திராகமம் 33:18-23
அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்.
பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.
இதனை நாம் தியானிக்கும் போது மோசே கர்த்தரிடத்தில் அவருடைய மகிமையை காண்பிக்கும்படி கேட்கிறான். அதற்கு கர்த்தர் என்னுடைய தயை எல்லாம் உனக்கு முன்பாக கடந்து போகப்பண்ணி கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாக கூறுவேன், ஆனால் என் முகத்தை காணமாட்டாய், எந்த ஒரு மனுஷனும் அவர் மகிமைக்கு முன்பாக நிற்க கூடாது. காரணம் என்னவெனில் அவர் மிகுந் வல்லமையுள்ளவர்.
அவர் அக்கினியானவர் ஏசாயா 10:17,18
இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜுவாலையுமாகி, ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,
அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். தயை என்பது அவருடைய சத்திய உபதேசம்.
இந்த சத்திய உபதேசத்தை குறித்து கரத்தர் மோசேயிடம் சொல்கிறார் இதோ என்னண்டையில் ஓர் இடம் உண்டு, நீ அங்கே கன்மலையில் நில்லு. அந்த கன்மலைத் தான் கிறிஸ்து. அந்த கன்மலையின் மேல் மோசேயிடம், நிற்கச் சொல்கிறார். இதுதான் அவர் தான் கிறிஸ்து என்றும், அவர் தான் சத்திய பாதை காட்டுவார் எனறும் நமக்கு மோசே மூலம் திருஷ்டாந்தப்படுத்துகிறார். அதனால் தான் யோவான் சுவிசேஷப் பகுதியில் கிறிஸ்து சொல்கிறார் நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள் என்று சொல்கிறார். அதுதான் இயேச கிறிஸ்து சொல்கிறார்
யோவான் 5:23—25
குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கர்த்தராகிய இயேசுவின் சத்தம் கேட்டு கீழ்படிந்தால் அவர் கிருபை நம்மேல் விளங்கும் அவருடைய மகிமையினால் நாம் நிரப்பப்படுவோம், அப்போது அவரோடு பிழைத்திருப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.