தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர்: 3:31
அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
பிரகாசிக்கும் கிருபை :- திருஷ்டாந்தம்:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் கிருபையில் சேரும் சிலாக்கியம் நமக்கு விசுவாசத்தினால் எப்படி கிடைத்தது என்பதை குறித்து தியானித்தோம். பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் இளங் காளை, வெள்ளாட்டு கடா இவைகளின் இரத்தம் ஆசாரியன் மூலம் செலுத்தினார்கள்.
எபிரெயர்: 9:18-21
அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டை பண்ணப்படவில்லை.
எப்படியெனில், மோசே நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார் மேலும் தெளித்து:
தேவன் உங்களுக்குக், கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமூட்டுகளிள்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
இதுவே நமக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்தி இரத்தஞ் சிந்தலில்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது என்பதை விளக்கிக் காட்டுகிறார்.
இவ்வித இரத்தத்தின் மூலம் ஆசாரியன் தவிர யாரும் கிருபாசனத்தண்டை பிரவேசிக்க முடியாது. அவற்றை தான் நமக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் தம்முடைய சொந்த இரத்தத்தினால் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து நித்திய மீட்பை உண்டு பண்ணினான்.
எபிரெயர்: 9:11, 12
கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார்.
பிரியமானவர்களே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நித்திய மீட்பை நமக்கு உண்டு பண்ணுகிறாரென்றால் கையினால் செய்யப்பட்ட கூடாரத்தில் தேவன் வாசம் பண்ணுவதில்லை என்பதை விளக்கி காட்டும்படியாகவே திருஷ்டாந்தப் படுத்தியிருக்கிறார்.
நம்முடைய சரீரமாகிய கூடாரத்தில் தேவன் வாசம் பண்ணி நாம் ஆத்தும மீட்பை தரும் படியாகவே தான் தேவன் திருஷ்டாந்தபடுத்தி முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலம் உண்டாயிருந்தது.
முதலாம் கூடாரம் அதில் வைக்கப்பட்ட குத்துவிளக்கும், மேஜையும் தேவ சமூகத்தப்பங்களும், பரிசுத்த ஸ்தலத்திற்கும் திருஷ்டாந்தம் (கிறிஸ்து).
இரண்டாம் திரைக்குள்ளாக மகா பரிசுத்த ஸ்தலம் என்னபட்ட கூடாரம் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு திருஷ்டாந்தம்.
இரண்டாம் திரைக்குள்ளாக பொன்னால் செய்த தூபகலசமும், பொற்தகடு பொதிந்திருந்த உடன்படிக்கை பெட்டி, அந்த பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும் உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தது.
இத்தனைக்கும் மேலே மகிமையுள்ள கேரூபீன்கள் வைக்கப்பட்டு கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன.
இவையெல்லாம் ஒரு சீர்திருத்தல் வரும் வரை நடந்தது. ஆனால் இது சரீரத்திற்கு ஏற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.
கிறிஸ்து வர போகிற நன்மைக்குரிய பிரதான ஆசாரியரால் வெளிப்படும் வரையிலும் நடந்தது. கிறிஸ்து வெளிப்பட்ட பிறகு உத்தமமான கூடாரத்தின் வழியாய் கிருபையில் பிரவேசிக்கிறார். அப்பொழுது பழைய காரியங்கள் கையில் செய்யப்பட்டவைகள் எல்லாம் மாற்றப்படுகிறது.
மேலும் பிரியமானவர்களே நாம் தேவனுடைய வார்த்தைகள் வாசிக்கும் போது மிகவும் தியானித்து வாசிக்க வேண்டும். நமக்கு பரிசுத்தப்படுவதற்கு மிக முக்கியமான நியாயபிரமாண புஸ்தகம் தள்ளி விடாதபடி நாம் நம்மை காத்துக் கொள்ள வேண்டும். தேவன் வாசம் பண்ணும் படியாக வாசஸ்தலம் அமைக்க சொல்கிறார். அந்த வாசஸ்தலமானது அநேக பணிமுட்டுகளால் நிறைய பட்டதாக இருக்கிறது. அந்த பணிமுட்டுகள் எல்லாம் பொன், வெள்ளி, வெண்கலமாயிருக்க வேண்டுமென்று தேவன் சொல்கிறார். வெள்ளியானது தேவனுடைய வசனமாகவும், பொன்னானது கிருபையில் குறையாதவர்களாகவும், வெண்கலமானது சத்தியத்தில் நிற்கிறவர்களாகவும் இருக்க வேண்டுமென்று விளக்கி காட்டுகிறது.
இதில் பிரகாரம் என்று சொல்வது பரிசுத்த ஆவியானவர் உலாவுகிற இடம்.
யாத்திராகமம்: 27:16,17
பிராகாரத்தின் வாசலுக்கு இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல் வேலையாய்ச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்குதிரையும் அதற்கு நாலு தூண்களும் அவைகளுக்கு நாலு பாதங்களும் இருக்கவேண்டும்.
சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் தேவன் சொல்கிறார் நம் உள்ளார சரீரம் சத்திய வசனத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
வாசஸ்தலம் சத்திய வார்த்தைகளால் சகல காரியங்களும் நிறைந்திருக்க வேண்டும்.
யாத்திராகமம்: 27:20,21
குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.
ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம் மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரிய வைக்கக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.
பிரியமானவர்களே இஸ்ரவேல் புத்திரராகிய நாம் எல்லோரும் அனுதினம் தேவனுடைய கட்டளை, கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து நம் ஆத்துமா நித்திய மீட்பை சுதந்தரித்து கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வசனத்தால் நிறைந்தும் அவருடைய ஆவியின் அபிஷேகமும், அக்கினியின் அபிஷேகமும் பெற்று கொண்டு தினமும் மங்கியெரியாத விளக்காக நாம் அனுதினம் பிரகாசிக்க வேண்டும் என்பதை தேவன் நமக்கு நித்திய கட்டளையாக கொடுக்கிறார்.
இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் அனுதினம் பிரகாசிக்கும் படியாக நம்மை தாழ்த்தி ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.