தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

எபிரெயர்: 3:6

கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

சிநேயார் தேசத்தில் வீடு கட்டாத படி நாம் தேவனுடைய நித்திய மகிமையால் நிறைவோம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நாம் எவ்விதம் மேகத்தின் மறைவில் வசிக்க வேண்டும்,      அப்படி மேகத்தின் மறைவில் வசிக்க விடாதபடி தடை செய்கிறது யார்? என்பதை பற்றிய விளக்கங்களை தியானித்துக் கொண்டிருக்கிறோம்.

எப்படியென்றால் இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் எகிப்தின் அடிமையிலிருந்து மீட்டுக் கொண்டு, கானான் தேசத்தை சுதந்தரிக்கும் படியாக விசுவாசத்தோடே யாத்திரையை ஆரம்பிக்க வைக்கிறார்.     ஆனால் அவர்களுடைய யாத்திரையில் பல பல காரியங்கள் சம்பவிக்கிறதை நாம் தியானித்தோம்.     இன்னமும் தியானித்துக் கொண்டிருக்கிறோம்.     மேலும் அவர்களுக்கு முன்பாக மேகம் போய் கொண்டிருக்கும் போது அவர்கள் யாத்திரையில் இருப்பார்கள்.     மேகம் நிற்கும் போது யாத்திரையை நிறுத்துவார்கள்.     இவ்விதம் அவர்களுக்கு பாதுகாவலாக பகல் மேகஸ்தம்பமும் இரவில் அக்கினி ஸ்தம்பமும் உண்டாயிருந்தது.

மேற்குறிப்பிட்ட காரியங்கள் இஸ்ரவேல் கோத்திரத்தாருடைய தலைமுறைகளாகிய நமக்கு தேவன் அவர்களை வைத்து தெளிவான திருஷ்டாந்தகளால் விளக்கிக் காட்டுகிறார்.     நம் பாவ வாழ்க்கையாகிய பாரம்பரிய வாழ்க்கை, உலக இன்ப சிற்றின்ப மோகம், துர் இச்சை இவையெல்லாம் எகிப்து.     இந்த பாவ வாழ்க்கையிலிருந்து நமக்கு ஒரு மீட்பை நம் தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஒரேபேறான குமாரனை நம் உள்ளத்தில் உயிர்ப்பித்து, பழைய வாழ்க்கையை அவரோடு மரிக்கவும், அவருடைய ஆவியினால் புதிய வாழ்க்கையாக நம்மை அவரோடே உயிர்ப்பிக்கிறார்.     இதற்காகவே தேவன் குமாரனை இவ்வுலகில் நமக்கு திருஷ்டாந்தத்துக்கு தந்தார்.     பின்பு குமாரனுடைய ஆவியை நமக்குள் அனுப்புகிறார்.     அவ்விதம் நாம் தேவசாயலை அடைந்து, மகிமையில் பிரவேசிக்கும் போது தேவன் தம்முடைய வார்த்தைகளை நமக்கு பரிசுத்த ஆவியானவரால் போதித்து மகிமையை நம் மேல் விளங்க செய்கிறார்.     அவ்விதம் விளங்கச் செய்யும் போது அவருடைய மேகம் நம் மேல் நிழலிடுகிறது.      அவர் நமக்கு பாதுகாவலும், அரணும், கோட்டையும், துருகமுமாக காணப்படுகிறார். இவ்விதமாக உலக வாழ்க்கையை விட்டு விட்டு மேலோக வாழ்க்கையை நாம் தேடிக் கொள்ளும் போது இரட்சிப்பு நமக்கு கிடைத்தது.     அந்த இரட்சிப்பு தான் கிறிஸ்து.     அவர் தான் நம்முடைய வஸ்திரம்.     அந்த வஸ்திரம் தான் எப்போதும் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.     அவ்விதமான பரிசுத்தம் நமக்கு காணப்படுமானால் அவருடைய மேகத்தின் மறைவில் வசிப்போம்.     அது தான் இரட்சிப்பின் வஸ்திரம்.

பிரியமானவர்களே இஸ்ரவேல் மக்களின் யாத்திரையில் சீனாய் மலையில் மோசே மட்டும் எறுகிறதை பார்க்கிறோம்.

யாத்திராகமம்: 24:15-18

மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.

கர்த்தருடைய மகிமை சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறு நாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.

மலையின் கொடு முடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப் போல் இருந்தது.

மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின் மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பது நாள் மலையில் இருந்தான்.

கழிந்த நாட்களில் தியானித்தோம் மலை கிறிஸ்து மோசே மலையின் மேல் ஏறின போது மேகம் மலையை மூடுகிறது.    கர்த்தருடைய மகிமை சீனாய் மேல் தங்கியிருந்தது.     இதிலிருந்து நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வசனத்திற்கு கீழ்படிகிறவர்கள் அவர்கள் பேரில் விசுவாசமாகயிருந்து, கிரியைகளை நடப்பிக்கிறவர்கள் மேல் அந்த மேகம் நிழலிடுகிறது.

மேலும் மேகத்தின் மறைவில் நம்மை வசிக்க விடாதபடி தடை செய்கிறது யார் என்பதை பற்றி தியானிப்போம்.     என்னவென்றால் கர்த்தர் சகரியாவுக்கு கொடுத்த தரிசனம் ஒரு மரக்கால் புறப்பட்டு வருகிறதை காண்கிறான்.     இது பூமியெங்கும் மக்களுடைய கண்ணோக்கம் இது தான் என்று தேவதூதன் சொல்கிறதை பார்க்கிறோம்.

பிரியமானவர்களே இது எவ்வளவு உண்மை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.     மரக்கால் என்பது உலகமாகிய பாவ பழக்க வழக்கங்கள் இவற்றில் தான் எல்லா ஜனங்களுடைய கண்ணோட்டமும் இருக்கிறது.    குறிப்பாக நாம் சொல்வோமானால் வேத வசனம் பேசுகிறவர்கள் உலகத்தையும் அதின் ஆசீர்வாதங்களையும் குறித்து மட்டுமே பேசுகிற திரள் கூட்டம். இதனை பற்றி,

சகரியா: 5:7-9

இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.

அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.

அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக் கொண்டு போனார்கள்.

பிரியமானவர்களே உலகமும் அதின் ஆசீர்வாதங்களும் பற்றி அநேகர் உபதேசிக்கிறார்கள்.     அந்த உபதேசம் என்ன என்று நாம் நன்றாக விவேகம் உடையவர்களாகயிருக்க வேண்டும்.     எப்படியென்றால் தரிசனத்தில் சகரியாவுக்கு புறப்பட்டு வருகிற மரக்காலும் அந்த மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருக்கிறதையும் அவள் தான் அக்கிரமகாரி, நம் உள்ளத்தை முழு உலகமாக்கி, உலகத்தின் பெருமைகளையும், உலக இன்பங்களையும், உலக ஐசுவரியத்தையும் தந்து நம் உள்ளத்தில் அவள் அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தை நம் மேல் தந்து நாமும் அக்கிரமம் செய்து கெட்டுப் போய்க் கொண்டிருக்கும் போது, அவள் வாயில்  ஈயக்கட்டியை போட்டு தேவன் அடைக்கிறாரென்றால் எதனால் என்று நாம் சிந்திப்போம், நாம் அவள் வழியில் சாய்ந்தால் தேவன் அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தை சுமத்துகிறதை பார்க்கிறோம்.

பின்பு இரண்டு ஸ்திரீகள் இந்த மரக்காலை பூமிக்கும், வானத்துக்கும் நடுவாக தூக்கிக் கொண்டு போகிறார்கள்.     அவர்களுக்கு நாரையின் செட்டைகளுள்ள செட்டைகள் இருந்தது.     அந்த ஸ்திரீகள் இரண்டு வித உலக சபையை காட்டுகிறது.      இரண்டு ஸ்திரீகளை பற்றிய விளக்கங்களை அடுத்த நாளில் தியானிப்போம்.

ஆனால் அந்த ஸ்திரீகள் இந்த மரக்காலை சிநேயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டை கட்டும் படி கொண்டு போகிறார்கள்.     அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு தன் நிலையிலே வைக்கப்படும் என்று கர்த்தர் சொல்கிறார்.     இவள் தேவனுடைய மேகத்திற்கு மாறாக செயல்படுவாள்.

பிரியமானவர்களே இந்த அக்கிரமக்காரி தான் பாபிலோன் ஸ்திரீ அவள் தேசம் தான் சிநேயார் தேசம்.     நம் உள்ளத்தில் அவள் தேசம் அவள் வீடு கட்டாதபடி  நம்மை பாதுகாத்துக் கொள்ளும் படி கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுப்போம்.     ஒப்புக் கொடுப்போம்.            ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                                                                                 

    -தொடர்ச்சி நாளை.