சபைக்கு பன்னிரண்டு தூண்கள்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Oct 03, 2020

சபைக்கு பன்னிரண்டு தூண்கள்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்ததான வேதப் பகுதியில் தேவன், அவருக்கு செவிக் கொடுக்கிறவர்களை ஆசீர்வதிக்கிறதையும், செவிக் கொடாதவர்களை பாழாக்குகிறதையும் நாம் தியானித்தோம்.     மேலும் நம் வாழ்க்கை ஆவிக்குரிய அனுபவத்தில் வளர தேவன், தம்முடைய பரிசுத்த தூதர்களோடு சேர்ந்து, பாபிலோன் வலுசர்ப்பம் மிருகம் அதை சார்ந்தவர்களோடு யுத்தம் செய்து கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமாயிருக்கிற படியால் அவர்களை ஜெயிக்கிறார்.     அவ்விதமாக ஆட்டுக்குட்டியானவராகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜெயித்து நம் ஆத்துமா சிங்கங்களின் வாயில் (துர் உபதேசம், உலகம், மாமிசம், பிசாசு) இவைகளில் சிக்கிக் கிடந்ததை தேவன் இரட்சித்து எடுக்கிறார்.      அவ்விதமாக ஒரு இரட்சிப்பை பெற்ற நாம் அனுதினமும் தேவனுடைய உபதேசத்துக்கு செவிகொடுத்து கீழ்ப்படிவோமானால் கர்த்தர் நம்மை எல்லாவித ஆசீர்வாதங்கள் (கர்ப்பத்தின் கனி) ஆத்துமாவின் பெருக்கம் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி, பரலோக நன்மையாகிய கிருபை வரங்கள் மேலும் பரிசுத்தம் தந்து நம்மை அனுதினம் ஆசீர்வதிப்பார்.     இல்லையென்றால் துஷ்ட மிருகங்கள், பாபிலோன் வலுசர்ப்பம் இவைகளின் கையில் ஒப்புக்கொடுப்பார்.     இவ்விதம் ஒப்புக் கொடுத்தால் கழிந்த நாளில் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடாமற் போனால் தேவன் தருகிற தண்டனையை தியானித்தோம்.      அதே காரியங்கள் நம் வாழ்விலும் நடக்கும் நாம் பாதாள அறைக்குள் கிடந்து மரண அறைக்கு நேராக சென்று விடுவோம்.                                                                 அதனால் நாம் எப்போதும் தேவனுக்கு செவிகொடுத்து, அவருடைய நல் ஆலோசனைக்கு காத்திருந்து, அவரோடே சஞ்சரித்து தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்று கொள்ள வேண்டும்.

அடுத்தப்படியாக நாம் தியானிக்கிற வேத வசனம் மோசேயிடத்தில் கர்த்தர் சொல்கிறார்: நீயும் ஆரோனும், நாதாபூம், அபியூவும் இஸ்ரவேல் மூப்பரிலே எழுபது பேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து தூரத்திலே பணிந்து கொள்ளுங்கள்.

மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம் மற்றவர்கள் சமீபித்து வரலாகாது.     ஜனங்கள் அவனோடே ஏறி வர வேண்டாம் என்றார்.

மலை என்பது நாம் முன்பில் தியானித்த சீனாய் மலை.     (அது கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம்) பழைய ஏற்பாட்டில் நன்றாக முழுமையும் பரிசுத்தம் உள்ளவர்கள் தான் கிருபாசனத்தண்டை நெருங்கி வர முடியும்.     மற்றவர்கள் பரிசுத்தவான்கள் மூலம் தான் தேவனிடத்தில் சேரமுடியும்.      அதனை பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவை உலகத்தில் அனுப்பி, பின்பு நம் உள்ளத்தில் உயிர்த்தெழுந்த கிறிஸ்து பரிசுத்த ஆவியானவராக நம் உள்ளத்தில் வந்து தங்கி, ஆத்துமாவை உயிர்ப்பித்து, நம்மை அவரோடே நேராக ஐக்கியப்படுத்தி, நடுவில் இருந்த தடுப்பு சுவரை உடைத்து நாம் தேவனிடத்தில் இயேசு கிறிஸ்து மூலமாய் சேரும் சிலாக்கியத்தை தந்திருக்கிறார்.

அன்றைக்கு மோசே கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்.     அப்போது ஜனங்கள் எல்லாரும் ஏக சத்தமாய் கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின் படியும் நடப்போம் என்றார்கள்.

அவ்விதமாக அவர்கள் ஒப்புக் கொடுத்தாலும் வழியிலே யாத்திரையில் அநேகம் பேர் மாண்டு போகிறதை பார்க்கிறோம்.     காரணம், அவர்கள் விசுவாசித்து நடந்தார்கள்.

விசுவாசித்தவர்களில் இரண்டு பேர் மாத்திரம் சேர்ந்தார்கள். மற்றவர்களில் கீழ்படிந்தவர்கள் கிறிஸ்து மரித்த போது, அவர்கள் கல்லறையை விட்டு எழுந்திருந்து அநேகம் பேருக்கு காணப்பட்டு பின் அவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவோடு பரலோகத்தில் அவரோடு சேர்ந்தார்கள்.

இவ்விதமாக நமக்கு இனி மரித்த பிறகு வாழ்வு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு சம்பவித்தது போல் சம்பவிக்காது.     ஏனென்றால் அவர்கள் வாழும் போது ஆத்ம உயிர்ப்பு எல்லாருக்கும் இல்லாதிருந்தது. ஆனால் நமக்கோ தேவன் விசுவாசித்து மட்டும் நடவாமல், விசுவாசத்தோடு கூட தரிசித்து நடக்கும் படியாக பரிசுத்த ஆவியானவரை நம் உள்ளத்தில் தந்து, தேவனோடு பேசவும், பழகவும் செய்து நாம் நேராக அவரோடு ஐக்கியப்படவும் மற்றும் இவ்வுலகில் வைத்தே நமக்கு ஒரு மறுபிறப்பையும் தந்து, மற்றும் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையாக நம் உள்ளத்தில் நாமம் தரித்து கொள்ளும் படியாக, இவ்வித எல்லாவித பரலோக ஐசுவரியங்களை நமக்கு தந்து, அன்றன்று நம்மை நியாயந்தீர்த்து, பரிசுத்தபடுத்தி, பரிசுத்தவான்களோடு உள்ள ஐக்கியதையாக கிறிஸ்து வரும் போதெல்லாம், பரிசுத்தவான்களோடு நம்மிடத்தில் வந்து நாம் ஏக இருதயமாக கிறிஸ்துவோடு இணைந்து தேவனை தொழுது கொள்ளவே எல்லா ஆசீர்வாதத்தையும் தந்து எப்போதும் நாம் அவரோடும் அவர் நம்மோடும் உறவாடும் படியாக நம் மேல் கிருபை பொழிந்து கொண்டிருக்கிறார்.

யாத்திராகமம் 24: 4

மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.

இவை மலை கிறிஸ்து அவர் தான் நம்முடைய பலிபீடம் என்றும் அதற்கு பன்னிரண்டு தூண்கள் இருக்கிறது என்பதையும் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

இதன் விளக்கம் என்ன என்றால் சபைக்கு பன்னிரண்டு தூண்கள் வேண்டும் என்றால் சபை திடப்படும் என்பதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து (திருஷ்டாந்தப்படுத்தி) பன்னிரண்டு சீஷர்களை தேவன் தெரிந்து கொள்ளுகிறதை பார்க்கிறோம்.

மேலும் இஸ்ரவேல் சபைக்கும் பன்னிரண்டு தூண்களாக பன்னிரண்டு பிதாக்கள் எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் மோசே இஸ்ரவேல் புத்திரரில் வாலிபரை அனுப்பினான் அவர்கள் சர்வாங்க தகனபலிகளை செலுத்தி, கர்த்தருக்குச் சமாதான பலிகளாக காளைகளை பலியிட்டார்கள்.

அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் வார்த்து, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து,

உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து ஜனங்களின் காது கேட்க வாசித்தான்.     அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.

அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து ஜனங்களின் மேல் தெளித்து இந்த வார்த்தைகள் யாவையும் குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.

மோசே வாலிபரை பலி செலுத்துகிறதற்கு அனுப்பினான்; மேலும் காளை அல்லது ஆட்டுக்கடாக்களின் இரத்தம் பாத்திரங்களில் வார்த்து பலிபீடத்தின் மேல் தெளித்து, உடன்படிக்கையின் புஸ்தகம் வாசிக்கப்படுகிறது என்றால் கிறிஸ்துவின் இரத்தத்திற்கு திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது.     அந்த கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் மீட்கப்படும் போது நம் ஆத்துமா வாலிபனாக விளங்கும்.     அந்த வாலிபன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவர் தான் உடன்படிக்கையின் புஸ்தகம் இந்த புஸ்தகம் வாசிக்கப்படும் போது (தேவ வசனம்) ஜனங்கள் எல்லோரும் கீழ்ப்படிகிறார்கள்.     அதைத்தான்,

ஏசாயா 65: 20

அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயது சென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

கிறிஸ்துவுக்குள் மரித்து (ஜல ஸ்தானம்) ஆவியில் உயிர்ப்பிக்கபட்டவர்கள் எல்லோரும் வாலிபர்கள்.  அதைத்தான்,

சங்கீதம் 119: 9

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால் தானே.

அதைத்தான் 

கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது என்று எழுதப்பட்டிருக்கிறது.    இவ்விதமாக இஸ்ரவேல் மூப்பர்கள் தேவனை தரிசித்தார்கள்.

யாத்திராகமம்: 24: 10 ,11                                                                                        

இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள்.      அவருடைய பாதத்தின் கீழே நீலக் கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.

அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.

மேலும் நாம் பார்க்கும் போது பன்னிரண்டு தூண்கள் நிறுத்தியிருந்த பலிபீடம் தான் தேவனுடைய பாதம் (கிறிஸ்து) அது மகிமையாய் பிரகாசித்தது.     பின்பு தான் அவர்கள் புசித்து, குடித்தார்கள் தேவன் அவர்கள் மேல் கை நீட்டவில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து நாம் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய காரியம் கிறிஸ்துவின் சபை பன்னிரண்டு தூண்கள் (சீஷர்கள்) குறையாமல் இருக்க வேண்டும்.     அப்படி நிறைவாயிருந்து தான் கர்த்தருடைய பந்தி புசித்து குடித்து தேவனில் மகிழ்ந்திருக்க வேண்டும்.     நாம் யாவரும் தியானித்து நம்மை ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.                                                       

   -தொடர்ச்சி நாளை.