தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ஏசாயா: 52:2

தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப் போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.    அல்லேலூயா.

மகா பாபிலோன் வேசியிடத்திலிருந்து தப்புவிக்கப் படுதல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நாம் மனந்திரும்பும் போது மகா பாபிலோன் வேசியின் நகரமாகாமல், எவ்விதத்தில் சீயோனாக கட்ட நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று தியானித்தோம்.      நம்மிடத்தில் இருக்கிற உலகம், மாமிசம், பிசாசு இவற்றின் கிரியைகளை கர்த்தர் எவ்விதத்தில் அகற்றுகிறார் என்றும், நாம் உலகம் இல்லாத உள்ளமாக ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் சிங்காசனம் மட்டும் நம்மளில் இருந்து ஆளுகை செய்து, நாம் பரிசுத்தமாக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் பாபிலோன் (வலுசர்ப்பம்) மகா யுத்தத்தை நடப்பிக்கிறது அதில் நாம் தேவனோடு ஐக்கியப்படாமல் உலகத்தோடு ஐக்கியப்பட்டு உள்ளத்தில் இடம் கொடுத்தால் நம்மை பாபிலோன் மகா வேசியுடைய கரத்தில் பிதாவாகிய தேவனால் கிறிஸ்துவைக் கொண்டு நாம் கொடுக்கப்படுகிறோம்.     பின்பு நாமும் பாபிலோன் மகா வேசியோடு இசைந்திருந்து அவளுக்குரிய காரியங்களில் நம் ஆத்துமா இசைந்து கடைசியில் அது மாண்டு அழிந்து போகிறது.

இவ்விதமாக பத்மூ தீவில் கர்த்தருடைய தூதன் யோவானுக்கு தரிசனத்தில் நம் இரட்சிப்பை பற்றிய காரியங்களை எல்லாம் வெளிப்படுத்துகிறார்.

மேலும் அந்த மகா யுத்தம் நடந்த பிறகு அங்கு தீவுகள், பர்வதங்கள் எல்லாம் காணப்படாமற் போயிற்று.     இது உள்ளத்தில் இருக்கிற சில பாரம்பரிய செயல்பாடுகள் எல்லாம் மாற்றப்பட்டது.

வெளிப்படுத்தல்: 16:21

தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர் மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள் அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.

பிரியமானவர்களே பரிசுத்த ஆவியானவர், அவருடைய அபிஷேகத்தை தருவது தான் மழை.     இந்த மழை தேவ கிருபையும் அதில் நிறைந்த ஆசீர்வாதமான வசனமும், வரங்களும் அது யாருக்கு கிடைக்கிறது என்றால் இருதயம் சுத்தம் செய்து, தேவனுக்கு தங்களை முழுமையும் ஒப்புக்கொடுத்தவர்கள் மேல் கர்த்தர் அவ்விதமான மழையை வருஷிக்க பண்ணுகிறார்.     இல்லையென்றால் உலகமும் வேண்டும் பரலோகமும் வேண்டுமென்றவர்கள் மேல் பெய்வது தான் கல்மழை. இது ஒரு வாதை,.தேவ கோபம் அவர்கள் மேல் பொழியப்படுகிறது.     அது அவர்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறது. ஆனால் மனிதர்கள் தாங்கள் செய்கிற தவறை உணராமல் தேவனை தூஷிக்கிறார்கள்.     அதனால் கர்த்தர் கொடிய வாதையை மனுஷர்களுக்குள் அனுப்புகிறார்.

மேலும் நாம் வாசிக்கும்போது மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய பாத்திரம் கொடுக்கப்படுகிறது என்று நாம் பார்க்கிறோம்.     அது என்னவெனில் தேவன் நம்மை ஆராய்ந்து அறியும் போது நம் உள்ளத்தில் அதிகமாக இருப்பது உலகம் (துன்மார்க்கம்) இதனை தேவன் மது என்று சொல்கிறார்.     தேவனுடைய உக்கிர கோபம் என்றால் நம் உள்ளத்தில் மது இருந்தால்  கோபத்தோடு அதிகமாக வார்க்கிறார்.     அதென்னவெனில் ஒரு மனுஷன் வஞ்சிக்கப்பட்டு விட்டால் தேவன் கொடிய வஞ்சிக்கிற ஆவியை அவர்களுக்குள் அனுப்புகிறார்.      அது அவருடைய கோபம் ஆனால் அது அவனுக்கு தெரியாதபடி, உணர்வடையாத படி அவனுடைய உள்ளான கண்கள் அடைக்கப்பட்டிருக்கிறது.   அதனால் நாம் எப்போதும் தேவனுக்கு பயந்து சத்தியத்தை கைக்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும்.

மது பாத்திரத்தில் மது வார்க்கிறது தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சங்கீதம்: 75:2-5

நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.

பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன் (சேலா).  வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.

உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள், இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.

இவையெல்லாம் பாபிலோனுடைய செயல் அதனால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு நம் ஆத்துமாவில்,  நம் வாழ்க்கையில் தேவன் செய்கிறார்.

சங்கீதம்: 75:6-8

கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது.

தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

பிரியமானவர்களே தேவ வசனமாகிய சத்தத்தை கைக்கொண்டு சத்திய ஆவியால் நடத்தப்படுவோமானால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

ஆனால் சத்தியத்தைக் கைக் கொள்ளாமல் தன் இஷ்ட பிரகாரம் இவ்வுலக வழக்கத்திற்கேற்ற பிரகாரம் நடந்து தேவனை ஆராதிப்போமானால் நமக்கு நியாயத்தீர்ப்பு கடினமாயிருக்கும். அதனால்,

சங்கீதம்: 75:10

துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப் போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

அன்பானவர்களே இதனை நாம் நன்றாக சிந்தித்து, தியானித்து தேவனை கீர்த்தனம் பண்ண வேண்டும்.     அதைத்தான்,

சங்கீதம்: 75:9

நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

இவ்விதம் பரிசுத்த பாதையில் நாம் அனுதினம் வளராமல் இருந்தால் நாம் மகா பாபிலோன் வேசியினிடத்தில் விற்கப்படுகிறோம்.     அதை

ஏசாயா: 52:3

விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இதனை குறித்து,

வெளிப்படுத்தல்: 17:1

ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;

இவ்விதமாக மகா பாபிலோன் அநேக திரளான ஜனங்கள் மேல் உட்கார்ந்திருக்கிறாள். அதனால் நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே சோதித்து இவ்விதமாக சிக்கிக் கொள்ளாதபடி தேவன் அவருடைய கரத்தில் நம்மை வைத்து ஆசீர்வதிக்கும் படியாக யாவரும் ஒப்புக்கொடுப்போம்.      ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.                     

-தொடர்ச்சி நாளை.