தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

நீதிமொழிகள்: 31:3

ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     

அல்லேலூயா.

பாபிலோன் வேசியோடு இசைந்திருந்தால் நமக்கு வரும் தேவனுடைய தீர்ப்பு:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நம் உள்ளத்திலிருந்து பாபிலோன் மகா வேசிக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்து அவள் செயல்களை அழித்து விடுவதையும், கர்த்தர் நம் நடுவில் வாசம் பண்ணி வாசஸ்தலமாக்குவதையும் குறித்து தியானித்தோம்.      அவளுடைய கிரியைகள் நம்மை‌ மரண அறைக்கு கொண்டு போய் விடும்.       அதனால் நாம் பாபிலோன் மகா வேசியோடு இசைந்து அவளுக்கேற்ற தந்திர செயல்களை செய்யாமல் மிகுந்த தெய்வீக ஞானத்தோடும், தேவனுடைய சத்தியத்தை தேவனிடத்திலிருந்து கேட்டறிந்து நாம் வாழ்வில் நடந்து கொள்வோமானால் தப்புவிக்கப்படுவோம் இல்லாவிடில் அவள் உலக இச்சைகளை காட்டி மரண அறைக்கு நம்மை கொண்டு சென்று விடுவாள்.      இவை தான் ஏதேன் தோட்டத்தில் நடந்தது.      தேவனுடைய நல் உபதேசத்திற்கு மாறாக நம் இருதயமாகிய ஏதேன் தோட்டத்தில் அவள் விதை விதைப்பாள்.      அப்படி அந்த விதை விழாதபடி நம் தேவனுடைய தோட்டத்தில் தேவனுடைய வசனமாகிய சத்திய வார்த்தைகளை கேட்டு நம் இருதயத்திற்கு வேலி அடைக்க வேண்டும்.     இல்லாவிடில் ஆதாம், ஏவாளிடத்தில் விழுந்த வித்தை போல நம் உள்ளத்தில் விதை விதைக்கும் போது அது நம் பார்வைக்கு அழகாகவும், புசிப்பதற்கு இன்பமாகவும் இருக்கும்.     நாம் செய்யக் கூடாத காரியங்களை செய்து விடுவோம் அப்போது நம் இரட்சிப்பு இழந்து நிர்வாணிகளாகி விடுவோம்.      அதைத்தான்,

வெளிப்படுத்தல்: 16:15

இதோ, திருடனைப்போல் வருகிறேன்.      தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

பிரியமானவர்களே உலகத்துக்கு ஏற்றப்பிரகாரம் நாம் இச்சைக்கேற்ற இன்பங்களில் நாம் நடப்போமானால் நம்மை தேவன் நிர்வாணிகள் என்று சொல்லுகிறார்.      அவர் நமக்கு தந்த இரட்சிப்பின் வஸ்திரத்தை உரிந்து போடுவார்.      காரணம்,

ஏசாயா: 3:8-10

ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாகத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.

அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக் கொள்ளுகிறார்கள்.

உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

தேவனுக்கு விரோதமான செயல்களைக் குறித்து குறிப்பாக வஸ்திரம் காத்துக் கொள்ளாதவர்களை குறித்து சொல்லுகிறது என்னவென்றால்,

ஏசாயா: 3:11-17

துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

பிள்ளைகள் என் ஜனங்களை ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்; ஸ்திரீகள் அவர்களை ஆளுகிறார்கள்.      என் ஜனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.

கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.

கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.                                                                     

நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.

ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.

பிரியமானவர்களே மேற்கூறிய நடத்தைகள் எல்லாமே தேவனுக்கு விரோதமான பரஸ்திரீயாகிய பாபிலோன் மகா வேசியோடு இசைந்திருக்கிறவர்கள் இவ்விதம் நடப்பார்கள்.      தேவன் அவர்களை நியாயந் தீர்க்கிறார்.

தேவன் அவர்களை நியாயந் தீர்ப்பது எப்படியென்றால் சீயோன் குமாரத்தியானவள்  தங்கள் வாழ்க்கையில் மேற்கூறப்பட்ட நடத்தைகளோடு நடந்தால் தேவன் கொடுத்த தாலந்தாகிய கிருபைகளை எடுத்து போடுகிறார்.

எப்படியென்றால்,

ஏசாயா: 3:18-26

அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,

ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,

சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும், தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும், விநோத வஸ்திரங்களையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும், கண்ணாடிகளையும் சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துபோடுவார்.

அப்பொழுது, சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தமும் கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப்பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.

உன் புருஷர் கட்கத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.

அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.

பிரியமானவர்களே மேலே கூறப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் என்னவென்றால் தேவனுடைய தோட்டத்தில் தேவன் உலாவுகிறதற்கு பதிலாக வலுசர்ப்பமாகிய பரஸ்திரீயாகிய பாபிலோன் மகா வேசியோடு (உலக அந்தஸ்து) இசைந்திருக்கிறவர்களுக்கு தேவன் கொடுத்த பரலோக ஐசுவரியத்தை உரிந்து விட்டு வேசியை நிர்வாணமாக்கி நம் ஆத்துமா புழுதியில் உட்காரும்படி செய்கிறார்.

தேவனுடைய தீர்ப்பு இவ்விதமாக ஜனங்களுக்கு உண்டாகும்.

காரணம் இவள் திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிறாள். இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் தேவ வசனம் காத்துக்கொண்டு ஜாக்கிரதையாக இருந்து விசுவாசத்தில் நிலைத்தி ருப்போம்.      ஒப்புக் கொடுப்போம்.      ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.                      

-தொடர்ச்சி நாளை.