தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம்: 119:135
உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென். அல்லேலூயா.
பலிபீடமும், காணிக்கையும்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் தியானித்த வேதப் பகுதியில் இஸ்ரவேலர் நடுவில் (நம் உள்ளத்தில்) எவ்விதம் உயிர்த்தெழுந்த கிறிஸ்து எழுந்தருளி வருகிறார் என்பதை சீனாய் மலையின் திருஷ்டாந்தத்தில் கூட வாசித்து தியானித்தோம். மேலும் இந்த நாளில் நாம் எப்படி பலிபீடம் உண்டாக்க வேண்டும் என்றும் அந்த பலிபீடம் தேவனுடைய பிரமாணங்களால் நிறையப்பட வேண்டும் என்றும் தியானிக்கிறோம்.
பழைய ஏற்பாட்டின் பகுதியை நாம் வாசிக்கும் போது பலிபீடம் மண்ணாலோ, கல்லாலோ உண்டாக்கப்படுகிறது. புதிய ஏற்பாடு ஆகும் போது அந்த பலிபீடம் கிறிஸ்து (நம் இருதயம்) அவ்விதம் கிறிஸ்து போல் மாற வேண்டும் என்று தேவன் நமக்கு போதிக்கிறார்.
யாத்திராகமம்: 20:22-24
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.
நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.
மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
இதிலிருந்து நமக்கு தெரிய வருவது வெள்ளியும் பொன்னும் தேவனுக்கு அருவருப்பானது. அதனால் தேவன் மனுஷனை மண்ணினாலே உருவாக்கி, அவர் தமது ஜீவசுவாசத்தை ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான்.
பிரியமானவர்களே நாம் தான் அந்த பலிபீடம் என்பதை திருஷ்டாந்தப் படுத்தவே இஸ்ரவேலிடம் இவ்விதம் கூறுகிறதை பார்க்கிறோம். அதனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனுஷர் சாயலாகவே இப்பூமிக்கு வந்தார். அவர் தான் பலிபீடம் நாம் அவரோடு சேர்வோமானால் நாமே (நம் இருதயம்பலிபீடம்)
மேலும் தேவன் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்குவதை குறித்து சொல்கிறார்.
யாத்திராகமம்: 20:25,26
எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய்.
என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.
பிரியமானவர்களே எனக்கு கல்லினால் பலிபீடத்தை உண்டாக்க வேண்டுமானால் அதை வெட்டின கல்லால் கட்ட வேண்டாம் என்று எழுதப்பட்டது.
கல் என்பது கிறிஸ்து, அவர் சீயோனில் வைக்கப்பட்ட கல், அவர் தான் பலிபீடம் என்பதை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார், ஏனென்றால் அவருக்கு ஒரு எலும்பும் முறிக்கப்படுவதில்லை என்பதை பழைய ஏற்பாட்டில் பலிபீடத்திற்கு திருஷ்டாந்தப்படுகிறார். அதனால் தான் வெட்டின கற்களால் கட்ட வேண்டாம் என்றும், அதில் உளி பட்டால் அது அசுசிபடும் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
மேலும் சீயோனில் வைக்கப்பட்ட கல்லோடு சேர்த்து நாமும் கல்லாக ஆலயம் பணியப்படுகிறது. அதனால் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்.
மத்தேயு: 23:19
மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையில் பலிபீடமாக இருப்பார். அப்போது நம் இருதயம் பலிபீடம். பலிபீடம் என்றால் தேவனுக்கு பலி செலுத்துகிற இடம் அதனால் நம் உள்ளத்தில் இருந்து தான் கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு மகிமை செலுத்துகிறோம். அதைத் தான் ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான். தன் வழியே செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை காண்பிப்பேன் என்று சொல்லுகிறார்.
இதிலிருந்து பிரியமானவர்களே நாம் எல்லோரும் நம் வழியை செவ்வைப்படுத்தி, நம் இருதயம் தேவனுக்கு மகிமை செலுத்துகிற பலிபீடமாக மாற்றப்பட வேண்டியது முக்கியமான காரியம், அதனால் தான் மதிகேடரே, குருடரே எது முக்கியம், காணிக்கையோ, காணிக்கையை பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ என்று நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கேட்கிறார். அதனால் பிரியமானவர்களே முதலில் நம் இருதயம் புது இருதயமாக மாற்றப்பட்டு (கிறிஸ்து பலிபீடம்) அதில் நம்மை முழுமையும் நம்மை காணிக்கையாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
அல்லாமல் நாம் ஏதோ வாயால் ஓப்பக் கொடுத்தால் பிரயோஜனமில்லை. ஆனால் அநேகர் தேவனுக்கென்று பலிபீடம் அமைக்காமல் காணிக்கை கொடுப்பார்கள். அதனை தேவன் பலிபீடம் இல்லாமல் வருகிற காணிக்கையை எப்படி அங்கீகரிப்பார். அவை வெறுமையாக இருக்கும் பிரயோஜனமிராது அவர்களை தேவன் மாயக்காரர் என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம் என்னவென்றால்,
மத்தேயு: 23:23
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும்.
பிரியமானவர்களே பலிபீடம் இருந்தால் தான் காணிக்கை படைக்க முடியும். அதனால் முதலில் பலிபீடமும், காணிக்கையும் மிகவும் அவசியம்தான் அதனால் முதலில் பலிபீடம் பரிசுத்தப்படுத்தி, அதன் பின்பு தான் தேவன் காணிக்கையை பரிசுத்தபடுத்துகிறார். பரிசுத்தப்பட்டவைகளை மட்டும் தான் தேவன் அங்கீகரிப்பார். உண்மையாக தேவனுக்கு பிரியமான பலிபீடம், காணிக்கை தேவன் ஆசீர்வதிப்பார்.
மேலும் பலிபீடத்தில் படிகளால் அதின் மேல் ஏற வேண்டாம் என்று சொல்லுவது நிர்வாணம் இருக்கக்கூடாது. தேவனுடைய பிரமாணம் எல்லாம் நமக்கு முக்கிய கட்டளையாயிருக்கிறது. நாம் தேவனுக்கு எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்று தேவன் நமக்கு பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்களை திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் இப்போது கிறிஸ்து உயிர்த்தெழுந்து அவரே ஆசாரியரும், பிரதான ஆசாரியருமாயிருக்கிறார். அவர் நமக்குள்ளே இருப்பதால் அவரே ராஜாக்களும் ஆசாரியருமாயிருக்கிறார்.
யாத்திராகமம்: 28:42,43
அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத் தொடங்கி முழங்கால் மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக.
ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.
பிரியமானவர்களே நித்திய கட்டளை என்பது தலைமுறை தோறும் உள்ள கட்டளை. இவற்றை சாதாரணமாக விட்டு விடக்கூடாது. உள் ஆடை தரிக்காதவர்கள் அருவருப்பானவர்கள் அவர்கள் அக்கிரமம் சுமக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. நாமெல்லாம் கர்த்தரின் ஊழியக்காரர்கள் நிச்சயமாக இவ்வித நீதி, நியாயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். கர்த்தர் நம்மை கண்ணோக்குகிறார். இந்த வார்த்தைகளுக்கு யாவரும் ஒப்பு கொடுப்போமா? ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.