தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம்: 111:4
அவர் தம்முடைய அதிசயமான கிரியைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் உள்ளவர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
இஸ்ரவேலுக்கு இரங்குகிற தேவன்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் தேவனுக்கு சவுல் கீழ்ப்படியாததினால் தேவன் அவன் ராஜ்யபாரத்தை எடுத்துப் போடுகிறார். மேலும் சவுலின் மேல் பொல்லாத ஆவியை தேவன் அனுப்புகிறார். இந்த காரியங்கள் குறித்து வரும் நாட்களில் தியானிப்போம்.மேலும் சாமுவேலிடம் கர்த்தர் சவுலை வைத்து செய்ய சொன்ன காரியத்தை சவுல் செய்யவில்லை, ஆனால் சாமுவேல் அதை செய்து முடிக்கிறான்.
ஆனால் கர்த்தர் தாம் அபிஷேகம் பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதின் கருத்து இன்னதென்று நமக்கு விளங்குகிறது.
இஸ்ரவேல் சபை, ரெவிதீமீலே அமலேக்கியரை மேற்கொண்ட பிறகு அங்கிருந்து சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள். இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராக பாளயமிறங்கினார்கள் ஆனால் மோசே தேவனிடத்திற்குப் ஏறிப்போனான். தேவன் இருந்தது சீனாய் மலை. கர்த்தர் மலையிலிருந்து மோசேயை கூப்பிட்டு நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்,
யாத்திராகமம்: 19:4-6
நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து, உங்களை என்னன்டையிலே சேர்த்துக் கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார்.
அதுபோல மோசே இஸ்ரவேல் மூப்பர் எல்லோரையும் அழைத்து கர்த்தர் சொன்னதை சொன்னபோது இஸ்ரவேலர் எல்லோரும் கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். இந்த வார்த்தையை மோசே கர்த்தரிடத்தில் அறிவித்தான்.
யாத்திராகமம்: 19:9-11
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து,
மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய் மலையின்மேல் இறங்குவார்.
பிரியமானவர்களே, அமலேக்கியரின் முதல் தரம்,
இரண்டாம் தரம் முக்கியமானவைகளை எல்லாம் அழிக்க கர்த்தர் சொன்ன காரணமென்னவென்றால் நம் உள்ளத்தில் அப்பேற்பட்டவைகள் இருந்தால் சீனாய் மலையினிடத்தில் வரமுடியாது. சீனாய் மலை என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
இஸ்ரவேலர் அமலேக்கியரை மேற்கொண்ட பிறகு தான் ரெவிதீமிலிருந்து புறப்பட்டு சீனாய் மலையின் வனாந்தரத்தில் வந்து சேர்ந்தார்கள். அங்கு பாளயமிறங்கினார்கள் ஆனால் மோசே மட்டும் தான் மலையில் ஏறினான்.
நம்மை பாவத்தினின்று நம் தேவன் விடுதலையாக்கி நம்மை அனுதினம் கழுகுகளின் செட்டைகளின் மேல் சுமந்து வருவது போல் எகிப்திற்கு ஒப்புக்கொடுக்காதபடி தேவன் நம்மை சுமந்து கொண்டு வந்து சொல்கிறார் நீங்கள் என் வாக்கின்படி உடன்படிக்கையை கை கொள்வீர்களானால் என் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் என்கிறார். நாம் ஒவ்வொருவரும் அவருடைய சம்பத்து என்று சொல்கிறார். என்னவென்றால் அவர் சொல்கிறார் என் உடன்படிக்கையை கைக்கொள்ள வேண்டும். அந்த உடன்படிக்கை நோவா காலத்திலிருந்தே தேவன் உடன்படிக்கை செய்கிறார். என்னவெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக அவர் இரத்தத்ததால் நம் வஸ்திரங்கள் தோய்க்கப்பட வேண்டும் என்பதை இங்கு தெளிவாக திருஷ்டாந்தப் படுத்துகிறார்.
யாத்திராகமம்: 19:14-17
மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.
அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
சீனாய் மலையில் சம்பவித்த காரியம் கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தபடுத்துகிறது. எல்லோரும் கிறிஸ்துவுக்கு கீழ் வஸ்திரத்தை தோய்த்தவர்களாக வந்து சேர வேண்டும் என்றும் அவர் நம் ஆத்துமாவை உயிர்ப்பிப்பார் என்றும் அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்றும் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி அந்த உடன்படிக்கையை கைக்கொண்டால் என் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் என்றும் தேவன் மோசேயை வைத்து நம்மோடு சொல்கிறார். அவ்விதம் உள்ளவர்கள் ஆசாரியராகவும்,
ராஜாக்களாவும், பரிசுத்த ஜாதியாயும் இருப்பீர்கள் என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். அதைத்தான்,
I பேதுரு: 2:9,10
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.
பிரியமானவர்களே நம் மேல் தேவன் இரக்கம் வைத்ததால் சீனாய் மலையில் எழுந்தருளின தேவன், தம்முடைய குமாரனை இவ்வுலகில் நமக்கு தந்து நம் மேல் இரக்கம் காட்டி கொண்டிருக்கிறார்.அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. நாம் இந்த இரக்கம் பெற காத்திருப்போம். ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.