தேவனுக்கே மகிமையுண்டாவதாக
I சாமுவேல்: 15:29
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
தேவனுக்கு கீழ்படிதல்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் கர்த்தர் அமலேக்கியனை முழுமையும் அழிக்க வேண்டும் என்ற சித்தமுடையவராக சாமுவேல் மூலமாக சவுலை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார். அவ்விதம் ராஜாவாக்கி அமலேக்குடைய சிறுது முதல் பெரியவை மட்டும் அழிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார். அவ்விதம் சாமுவேல் சவுலோடே சொல்ல, சவுல் அதற்கு ஒத்தவனாக போய் அவனுடைய எல்லா ஜனங்களையும் தொகைப் பார்த்து முதல் தரமானதும், இரண்டாம் தரமானதும் ஒன்றும் அழிக்காமல் அற்பமானதும் உதவாதவைகளான எல்லாவற்றையும் அழித்து விட்டான். இவை எதற்கு திருஷ்டாந்தப்படுத்தியது என்று முந்தின நாளில் தியானித்தோம்.
ஆனால் எல்லாவற்றையும் அழிக்கவில்லை என்று பார்த்த கர்த்தர் சாமுவேலிடம் சவுலை ராஜாவாக அபிஷேகம் பண்ணினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். அதிகாலையில் சாமுவேல் சவுலிடம் போகிறான் அப்பொழுது சவுல் கார்மேலுக்கு வந்து தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்கு போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. சவுல் சாமுவேலிடம் கர்த்தரின் வார்த்தையை நிறைவேற்றினேன் என்கிறான் இப்படித்தான் நம்மிலும் அநேகர் ஜெயஸ்தம்பம் என்ன என்று தெரியாமலே ஜெயஸ்தம்பம் நாட்டுகிறார்கள். தங்களில் உள்ள எந்த அருவருப்புகளையும் மாற்றாமல் ஜெயம் பெற்றோம். நித்திய ஜீவனை அடையும்படி ஓடுகிறோம் என்றெல்லாம் சொல்லுகிறதை பார்க்கிறோம். ஆனால் சில பேர் ஏதோ பெரிதாக உலகுக்கு தெரியாதவைகளை தங்களை விட்டு மாற்றிக்கொண்டு சூழ்நிலை வரும்போது அதையும் சரி என்று எண்ணி விட்ட பழக்கத்தை திரும்ப கையில் எடுத்துக் கொண்டு ஏதோ சாதித்தோம் என்று சொல்கிறோம். பிரியமானவர்களே சவுல் என்ன செய்தான் என்பதை கர்த்தர் கவனித்துக் கொண்டார். நம்மையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
சவுல் சாமுவேலிடம் கர்த்தரின் வார்த்தையை நிறைவேற்றினேன் என்று சொல்லும் போது,
I சாமுவேல்: 15:14-18
அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.
அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.
அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.
பிரியமானவர்களே இவைகள் எதற்கு நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் நம்மை ராஜாவாக, ஆசாரியராக மெல்கிசேதேக்கின் முறைமையின் படி தேவன் நம்மை அபிஷேகம் பண்ணியிருக்கும் போது நமக்குள் அபிஷேகம் பண்ணப்பட்டவராக யூதருடைய ராஜாவாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆளுகை செய்கிறார். எதற்கென்றால் நமக்குள் இருக்கிற ஒரு கூட்டம் பாவிகள் நிர்மூலமாகு மட்டும் தேவன் நம்மளில் இருந்து அந்நிய கிரியை நிர்மூலமாக்கி கொண்டிருப்பார். இதற்கு நம்மை ஒப்புக்கொடுக்காமல் நம் உலகக் காரியங்கள் உள்ளத்தில் பெரிதென்று நினைத்து அவைகளை அழிக்காமல் இருப்போமானால் கர்த்தருடைய பார்வைக்கு நாம் பொல்லாப்பு செய்கிறோம், என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
I சாமுவேல்: 15:19-21
இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக் கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான்.
சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்.
ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.
பிரியமானவர்களே இவ்விதம் தான் நாமும் பாவத்தை விட்டோயாதபடி பழைய வாழ்க்கையை நம் உள்ளத்தில் செயல்படும் படியாக புரட்டுகிறோம்.
புரட்டு வாயை தேவன் வெறுக்கிறார். ஆகாமியம் அவருக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. அப்பொழுது,
I சாமுவேல்: 15:22-23
அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
நாம் தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருந்தால் தேவன் நம்மையும் புறக்கணிப்பார்.
ஆனால் சவுல் சாமுவேலை பார்த்து நான் தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருந்ததினால் பாவஞ் செய்தேன், கர்த்தருடைய கட்டளைகளையும், உம்முடைய வார்த்தைகளையும் மீறினேன். நான் ஜனங்களுக்கு பயந்து அவர்கள் சொல்லை கேட்டேன். இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரை பணிந்து கொள்ளும்படி நீர் என்னோடே வாரும் என்றான். ஆனால் சாமுவேல் சவுலை பார்த்து நான் உம்மோடே திரும்பி வருவதில்லை, கர்த்தருடைய வார்த்தையை புறக்கணித்த படியினால் நீர் இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிராத படி புறக்கணித்து தள்ளினார் என்றான். போகும்படி சாமுவேல் திரும்புகிற போது சவுல் சாமுவேலின் சால்வையின் தொங்கலை பிடித்துக் கொண்டான். அது கிழிந்து போயிற்று.
இது தான் ராஜ்யபாரம் தேவன் சவுலின் கையிலிருந்து கிழித்து போடுகிறார்.
I சாமுவேல்: 15:28
அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப் பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.
சவுல் மன்னிப்பு எடுத்தான், ஆனால் தேவன் அவனை மன்னிக்கவில்லை என்றால் அவன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டு தேவ ஆசீர்வாதத்தை அனுபவித்தான்.
மேலும் அவன் மீண்டும் தேவனிடத்தில் நான் பாவஞ் செய்தேன் இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னை கனம் பண்ணி; நான் கர்த்தரை பணிந்து கொள்ளும் படிக்கு என்னோடே திரும்பி வாரும் என்றான்.
ஆனால் சவுல் அழைத்ததற்கு சாமுவேல் திரும்பி அவனோடே போனான்.
I சாமுவேல்: 15:32
பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.
சாமுவேல் ஆகாகை கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக துண்டித்து போட்டான்.
சவுல் மரணமடையும் நாள் மட்டும் பின்பு சாமுவேல் சவுலை கண்டு பேசவில்லை. ஆனால் இஸ்ரவேலின் மேல் ராஜாவாக சவுலை அபிஷேகம் பண்ணினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம் சாமுவேல் சவுலுக்காக துக்கித்துக் கொண்டிருந்தான்.
சவுலை கர்த்தர் மன்னிக்கவில்லை. ஏனென்றால் மனுஷருக்கு பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும் தேவ வசனம் எழுதப்பட்டிருக்கிறது.
எபிரெயர்: 6:4-6
ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
எபிரெயர்: 10:26,27
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
ஆதலால் நாம் தேவனுடைய கோபாக்கினைக்கு தப்பித்துக்கொள்ள எப்போதும் நாம் தேவ சத்தத்துக்கு கீழ்படிவோமானால் கர்த்தர் நம் ஜெபத்தை நிச்சயம் கேட்பார். என்றென்றெக்கும் நம்மோடு நிலைத்திருப்பார். யாவரும் ஒப்புக்கொடுப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக. ஜெபிப்போம்.
-தொடர்ச்சி நாளை.