Sep 14, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

யோவான்: 7:38

வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.         

அல்லேலூயா.

இஸ்ரவேல் சபைக்கு தேவன் தாகம் தீர்க்குதல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் ஏலீமில் பன்னிரண்டு நீரூற்றுகளும், எழுபது பேரீச்ச மரங்களும் இஸ்ரவேல் வம்சத்தார் பாளையமிறங்கிய இடத்தில் இருந்ததை நாம் தியானித்தோம்.      அது என்னவெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மனைவியாகிய மணவாட்டியானவராகிய பரிசுத்த ஆவியானவரின் அனுபவம் நம்மளில் வருவதையும் மேலும் ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்ட எழுபது மூப்பர்களையும், பேரீச்ச மரத்திற்கு ஒப்பாகவும், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையை பெற்று கொண்ட எழுபது சீஷர்களுக்காக பழைய ஏற்பாட்டில் அந்த எழுபது மூப்பர்களை திருஷ்டாந்தபடுத்தியிருக்கிறது ஆனால் பன்னிரண்டு ஊற்றாகிய சீஷர்கள் கிறிஸ்துவோடு நிலைத்தார்கள் என்பது தெரிய வருகிறது.      இது நம் நடுவில் கட்டி எழுப்புகிற சீயோன் நகரத்தின் அனுபவத்தை குறித்ததான தேவ செயல் என்பது கழிந்த நாளுக்கு முந்தின நாளில் நாம் தியானித்தோம்.

ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்கிற வேத வாக்கியமானது இஸ்ரவேல் சபை கர்த்தரின் கட்டளை பிரகாரம் சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது அதனால் ஜனங்கள் மோசேயோடே வாதாடினார்கள். அதற்கு மோசே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீச்சை பார்க்கிறீர்கள் என்றான்.

அதற்கு ஜனங்கள் தண்ணீர் தாகமாயிருந்ததினால், எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும் எகிப்திலிருந்து ஏன் கொன்றுபோட கொண்டு வந்தீர் என்றும் கேட்க மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்னை கல்லெறிய பார்க்கிறார்கள் என்றான்.

யாத்திராகமம்: 17:5-8

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.

அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.

இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.

அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்.

பிரியமானவர்களே ரெவீதீமிலே பாளயறங்கிய போது தண்ணீர் இல்லாமல் இருந்ததினால் கர்த்தரை அவர்கள் பரீட்சை பார்க்கிறார்கள், வாதாடுகிறார்கள், வாதாடினிமித்தம் அந்த இடம் மாசா என்றும் மேரிபா என்று பெயரிட்டு கர்த்தர் அமலேக்கியர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணுவதற்கு விட்டு விட்டார்.

அதற்கு முன்பு மோசேயிடம் உன் கையிலிருக்கிற கோலை கொண்டு கன்மலையை அடி என்றார்.      அப்பொழுது தண்ணீர் புறப்படும் என்றார்.      அப்படியே மோசே செய்தான் காரணம் தண்ணீர் (திருஷ்டாந்தம் ஜீவ தண்ணீர்) அடிக்கடி குறைவுப்படுவதால், குறைவுபடாமல் தண்ணீர் வர வேண்டுமானால் கன்மலையில் தான் இருக்கிறது அந்த கன்மலை கிறிஸ்து.

தேவன் சொல்கிறார் நான் கன்மலையின் மேல் நிற்பேன் அவ்விதம் சொல்வது தேவன் என்றால் வார்த்தை.      கன்மலை வார்த்தையால் நிறையப்பட்டிருக்கிறது.

அது அடிக்கப்பட்டால் வார்த்தையானது நதியாக ஓடிக் கொண்டிருக்கும் அது வற்றி போகாது.      வற்றாத ஜீவ நதியாக நம் வாழ்க்கையில் எப்போதானாலும் யாரானாலும் தேவைக்கு குடிக்கலாம்.      ஒரு போதும் அவர்களுக்கு தாகமாயிருக்காது.      இதற்கு தான் பிதாவாகிய தேவன் கிறிஸ்துவை உலகத்தில் அனுப்பி இவ்விதம் செய்யப்போகிறார் என்று திருஷ்டாந்தப்படுத்துகிறார் 

அவற்றை எவ்விதம் தேவன் செயல்படுத்துகிறார் என்றால் தன் ஒரேபேறான குமாரனை இவ்வுலகில் அனுப்பி அவரை சிலுவையில் ஒப்புக் கொடுத்தது விலாவில் ஈட்டியால் குத்தும் போது இரத்தமும், தண்ணீரும் ஆறாய் ஓடியது.      காரணம் என்றென்றைக்கும் தாகம் தீர்க்கிற ஜீவ தண்ணீராக நம் உள்ளத்தில் அனுப்புகிறார்.      மேலும் அந்த இரத்தத்தால் சபையை சம்பாதிக்கிறார்.

மேலும் தேவனை பரீட்சை பார்த்ததினால் தலைமுறைதோறும் நம் ஆத்துமாவில் யுத்தத்தை ஏற்படுத்தினார்.      முதன்முதலாக இஸ்ரவேல் வம்சத்தாரோடு அமலேக்கியர் யுத்தம் பண்ணுகிறதை பார்க்கிறோம். காரணம் இஸ்ரவேல் புத்திரர் மீட்பு பெற வேண்டுமானால் எல்லா ஜாதிகளையும் ஜெயித்து (உலகத்தை) வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரை (கிறிஸ்துவை) சிலுவையில் ஒப்புக் கொடுத்தார்.     அந்த இரத்தத்தால் தான் மீட்பு உண்டு என்பதைக் காட்டுகிறார் மேலும் அவருடைய திருவசனத்தால் தான் நாம் ஜீவனை அடைய முடியும் என்பதை நமக்கு விளக்கிக் காட்டுகிறார். அதற்கு

யாத்திராகமம்: 17:9-13

அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம் பண்ணினான்.      மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.

மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.

மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.

யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.

இஸ்ரவேல் வம்சத்தாருக்கு  அமலேக்கோடே யுத்தம் நடக்கிற காரணம் என்னவென்றால் இஸ்ரவேல் சபை தேவன் செய்த நன்மையை மறந்து அவரை பரீட்சைப்பார்த்ததால் தான்  தேவன் அமலேக்கை அனுப்பி விடுகிறார்.

மேலும் கிறிஸ்து ஜனங்களுக்காக மரிக்க வேண்டும் என்று சித்தம் தேவனுக்கு இருந்ததால் தான், மாம்சத்தை ஜெயிக்க, ஆவி வேண்டும்.      அதனால் தேவன் சில காரியங்களை முன் குறித்து செய்கிறார். தேவனுடைய ஆவியை எல்லா மனுஷருடைய இருதயத்திலும் அனுப்பும் படியாக முகாந்தரத்தை ஒருக்குகிறார்.      அதற்கு முன் கூட்டி திருஷ்டாந்தபடுத்த மோசே கையில் கோல் ( கிறிஸ்து) தேவனுடைய வார்த்தை இருக்கிறது.

கையானது உயரும் போது இஸ்ரவேலர் மேற்கொள்கிறார்கள் என்னவென்றால் நம் வாழ்க்கையில் நமக்கு விரோதமாக எழும்பும் அமலேக்கின் யுத்தம் ஜெயிக்க தேவனுடைய வார்த்தையாகிய கோல் (கிறிஸ்து) உண்டாயிருக்க வேண்டும்.     ஆனால் கிறிஸ்து அடிக்கப்பட்ட அனுபவத்தில் நாம் பாவத்துக்கு மரித்து நீதிக்கு பிழைத்திருக்க வேண்டும்.      அப்போது தான் அமலேக்கு ஜாதியை நம் உள்ளத்தில் அழிக்க முடியும்.     அதற்கு தான்,

யாத்திராகமம்: 17:14-16

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.

மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,

அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

இதனை முன் கருதி தான்,

யாத்திராகமம்: 16:33,34

மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.

இவ்விதமாக சொன்னது தலை முறை தலைமுறை அமலேக்கின் யுத்தம் உண்டு.      அதற்கு கிறிஸ்துவாகிய ஜீவ அப்பம் தான்,  வெற்றி எடுக்க முடியும்.   மேலும் கிறிஸ்துவின் சிங்காசனத்திற்கு எதிரான யுத்தம் அமலேக்கு; அந்த இடத்தில் தேவனுடைய வார்த்தையாகிய மகிமையின் ராஜா தேவனும் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருடைய (கன்மலையை அடித்தது) சிங்காசனத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் புறப்பட்டு வருகிறதை பார்க்கிறோம்.

இவ்விதமாக இஸ்ரவேலுடைய தாகத்தை தீர்த்து, ஜாதிகளின் கிரியைகளை அழித்து கிறிஸ்து ஜெய வீரராக திகழ்கிறார்.      கர்த்தர் நாம் யாவரையும் இவ்விதமாக ஆசீர்வதிக்க ஒப்புக் கொடுப்போம். 

ஜெபிப்போம்.                       

-தொடர்ச்சி நாளை.