தேவனுக்கே மகிமையுண்டாவதாக
வெளிப்படுத்தல்: 22:5
அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா.
எழுபது பேரீச்சமரங்கள் [தீர்க்கதரிசிகள்]
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் ஏலீமில் பன்னிரண்டு நீரூற்றுகள் கிறிஸ்துவின் மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவர் பன்னிரண்டு வித கனிகளை தரும் விருட்சமாக நம் உள்ளத்தில் இருக்கிறதை நாம் தியானித்தோம். இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் ஆரோக்கியமடைவார்கள் என்றும் அவர்களில் எந்த சாபமிராது தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும் என்றும் தியானித்தோம். இதனை வாசித்த தேவனுடைய பிள்ளைகள் யாவரும் ஒப்புக் கொடுத்திருப்பீர்கள் என்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம். அனுதினம் வாசித்து தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக இந்த நாளில் நாம் தியானிக்கிற வேத வசனம் எழுபது பேரீச்சமரங்கள் ஏலீமில் இருந்து என்று வாசிக்கிறோம். அந்த இடத்தில் இஸ்ரவேல் சபை பாளயமிறங்கியது. பாளயமிறங்கியது என்று எழுதப்பட்டிருக்கிறது என்றால் இஸ்ரவேல் சபை கானான் யாத்திரையில் அங்கங்கே பாளயமிறங்குகிறது. அவர்கள் அந்த இடங்களில் சபை கூடுகிறார்கள். அப்போது ஏலீமில் பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தது. இவை கர்த்தராகிய இயேசுவுக்கு முன் திருஷ்டாந்தப்படுத்தியது.
ஏனென்றால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை அனுதினம் குறைவில்லாமல் மன்னாவினால் போஷித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள். இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது நமக்கு இறைச்சியைப் புசிக்க கொடுப்பவர் யார்?
எண்ணாகமம்: 11:5-8
நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.
இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத்தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.
அந்த மன்னா கொத்துமல்லி விதையம் மாத்திரமும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது.
ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டுவந்து, ஏந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.
பிரியமானவர்களே தேவன் இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த இந்த ருசியுள்ள மன்னா தேவனுடைய வசனம் (கிறிஸ்துவுக்கு)
திருஷ்டாந்தப்படுத்தியது. ஆனால் அவர்கள் கண்கள் பிரகாசிக்காததால் அதன் ருசியை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அந்த ஆகாரத்தை அற்பமாக நினைத்து விட்டு எகிப்தில் சாப்பிட்ட ஆகாரத்தைக் விசேஷமாக எண்ணி அழுகிறார்கள்.
மேலும் அவர்கள் இறைச்சி சாப்பிடுவதற்கு இச்சையுள்ளவர்களாகுகிறார்கள். அவர்கள் கூடாரவாசல் நின்று அழுகிறதை மோசே கேட்டான் கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது.
இவ்விதமாக தான் நம்மளில் அநேகம் பேர் கர்த்தர் நம்மை எவ்விதம் திருப்தியாக நடத்தி வந்தாலும், தேவ வசனம் தந்து ஆறுதல்படுத்தினாலும், நம்முடைய உள்ளில் இருக்கிற அந்நிய ஜாதிகளின் இச்சைகளின் படி நடக்க கர்த்தர் தருணம் கொடுக்காவிட்டால் நாமும் இவ்விதம் இஸ்ரவேல் சபை அழுதது போல் தினமும் சுகபோகம், சாப்பாடு, அந்தஸ்து இவைகளுக்காக அழுகிறோம். ஆனால் இதனை பார்க்கிற தேவன் இஸ்ரவேல் சபையிடம் கோபப்பட்டது போல் நம்மிடமும் கோபம் கொள்வார் என்பதில் மாற்றமில்லை. அதைத்தான்,
யாக்கோபு: 4:1-3
உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?
நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியில், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
நாம் அந்நிய ஜாதிகளின் கிரியைகள் நம் உள்ளத்தில் விரும்புகிற காரியங்களின் படி நமக்கு இச்சைகள் வந்தால் அதனை நிறைவேற்ற தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினால் அந்த விண்ணப்பத்தை தேவன் கேட்க மாட்டார் என்பது இந்த வசனத்தின் கூட விளங்குகிறது. அப்போது இஸ்ரவேலர் அழுதது போல் நாமும் அழுகிறோம் தேவனுக்கு கோபம் நம் மேல் பெரிதாகிக் கொண்டேயிருக்கும்
இஸ்ரவேல் அழுகிறதினால் மோசே வருத்தத்தோடே சில காரியங்களை கர்த்தரிடத்தில் சொல்லிவிட்டு,
எண்ணாகமம்: 11:14-16
இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய்.
மேலும் ஜனங்களை நாளைக்காக உங்களை பரிசுத்தம் பண்ணுங்கள் நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள் கர்த்தர் உங்களுக்கு இறைச்சிக் கொடுப்பார் ஒரு நாள், இரண்டு நாள், ஐந்து நாள், பத்து நாள்,
இருபது நாள் மாத்திரமல்ல ஒரு மாதம் வரைக்கும் புசிப்பீர்கள். உங்கள் மூக்காலே புறப்பட்டு தெவிட்டி போகும் மட்டும் புசிப்பீர்கள். உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டை பண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அழுதீர்களே என்று சொல் என்றார்.
அப்பொழுது மோசே என்னோடிருக்கிற காலாட்கள் ஆறு லட்சம் பேர் ஒருமாதம் வரையும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே,
ஆடு, மாடுகளையெல்லாம் அடித்தாலும் மேலும் சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா? என்று கர்த்தரிடத்தில் சொன்னான்.
எண்ணாகமம்: 11:23-25
அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.
கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார் அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
பிரியமானவர்களே கர்த்தர் மோசேயிடம் ஜனங்களிடம் சொல்ல சொன்னதில் உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டை பண்ணி என்று எழுதப்பட்டிருக்கிறதை பார்க்கிறோம். அதுதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்தி வானத்திலிருந்து இறங்கி கொடுத்த அந்த அப்பம்.
அந்த அப்பம் புசித்தவர்கள் இறைச்சி மேல் இச்சை கொள்கிறதினால் கர்த்தரை அசட்டை பண்ணுகிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது காரணம் அந்த நாள் கிறிஸ்து பாடுபடவோ, மரிக்கவோ, உயிர்க்கவோ இல்லை. அதனால் ஆத்துமா மீட்பு இல்லாதிருந்தது. கண்கள் மறைக்கப்பட்டிருந்து ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேகத்தில் வருவதையும் இயேசு கிறிஸ்துவின் எழுபது சீஷர்கள் முதலில் இருந்ததை எழுபது மூப்பர்கள் மேல் தீர்க்கதரிசன ஆவி இறங்கி அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி, ஓய்ந்தார்கள் என்றும் திருஷ்டாந்தப்பட்டிருக்கிறது அந்த எழுபதும் பன்னிரண்டு நீரூற்றுகளோடு நின்ற எழுபது பேரீச்ச மரத்துக்கு தேவன் ஒப்பிடுகிறார்.
இதிலிருந்து தெரியவருகிறது பிதாவாகிய தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியை நமக்குள் அனுப்பி தீர்க்கதரிசனம் சொல்லுகிறார். ஆனால் இங்கு பார்க்கும்போது எழுபது பேரும் தீர்க்கதரிசனம் சொல்லி ஓய்ந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் எழுபது சீஷர்கள், ஆவிகள் தங்களுக்கு கீழ்படிந்ததினால் சந்தோஷப்பட்டு இயேசுவினிடத்தில் வந்து சொல்லுகிறதை பார்க்கிறோம். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார். ஆவிகள் உங்களுக்கு கீழ்ப்படிகிறதற்காக சந்தோஷப்படாமல் உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள் என்கிறார். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை கேட்டவர்கள் இது கடின உபதேசம் யார் நிலைத்திருக்க முடியும் என்று சொல்லி போய் விட்டார்கள். ஆனால் பன்னிரண்டு சீஷர்கள் மாத்திரம் நின்றார்கள். (பன்னிரண்டு ஜீவ ஊற்றுகள்) பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நம்மில் காக்கபட்டால் மாத்திரமே நாம் கிறிஸ்துவில் நிலை நிற்க முடியும். மீதிபகுதி அடுத்த நாளில் தியானிப்போம்.
கர்த்தர் யாவரையும் பன்னிரண்டு விதமான கனிகளை தரும் ஜீவ விருட்சத்தால் ஆசிர்வதிப்பாராக.
ஜெபிப்போம் .
-தொடர்ச்சி நாளை.