கிறிஸ்து நம் மனதை திறப்பார்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Sep 11, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

யோவான்: 6:51

நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.       

ல்லேலூயா.

கிறிஸ்து நம் மனதை திறப்பார்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் வாசித்து தியானித்த வேத பகுதியில் நம் தேவன் நம்மை காலையும், மாலையும் களிகூர பண்ணுகிறதையும் நமக்கு புசிக்க அப்பம் தந்து திருப்தியாக்குகிறதையும் நாம் ஒருபோதும் விட்டு வந்த எகிப்தை (பாவத்தை) திரும்பி பார்க்கக் கூடாது என்றும் மேகத்தில் (உள்ளத்தில்) கிறிஸ்து வெளிப்படுகிறார் என்பதையும், இஸ்ரவேல் சபை முறுமுறுத்தது தேவனுக்கு விரோதமாக இருந்தது என்பதையும், இனி நாம் நடக்க வேண்டிய வழியை இஸ்ரவேல் சபையை வைத்து நமக்கு தெளிவான திருஷ்டாந்தங்களால் விளக்கிக் காட்டுகிறார்.     மேலும் நாம் நியாயப்பிரமாணத்தின் படி நடக்க வேண்டும்.     அவர் தருகிற கற்பனை, கட்டளை இவையெல்லாவற்றின் படியும் நாம் நடக்க வேண்டும் என்றும் நாம் நடக்கவேண்டிய கற்பனைகள் எல்லாம் தூரமாக போய் சேர்த்துக் கொள்ள வேண்டாம், எல்லாம் நம் இருதயத்திலும், வாயிலும் இருக்கிறது என்பதை குறித்த தேவ வசனத்தை நாம் கழிந்த நாளில் தியானித்தோம். இருதயமும், நாவும் என்பது ஆரோக்கியமான நாவு ஜீவ விருட்சம் அவற்றில் நாம் தேவனுடைய கட்டளைகள் இருக்கிறது என்பதை தேவன் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.     கிறிஸ்து நம் இருதயத்தில் பிரகாசிக்க முடியாமல் உலகமாகிய மரக்காலால், மறைத்து வைத்து வைத்திருக்கிறோம். (இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகிய பிசாசானவன், தன் இச்சைகளின் படி செய்கிறதினால் கிறிஸ்து பிரகாசிக்கவில்லை) அதைத்தான் இயேசு கிறிஸ்து சொல்கிறார்.

மத்தேயு: 5:14-16

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.            விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.                                                                                                                    இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

II கொரிந்தியர்: 4:4

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

பிரியமானவர்களே நம் எல்லோருக்குள்ளும் இந்த சுவிசேஷத்தின் மகிமையின் ஒளி உண்டு.     ஆனால் நாம் தேவனை விசுவாசியாமல், உலகமே முக்கியம் என்று இருக்கிறவர்களை இப்பிரபஞ்சத்து தேவனானவன் மனதை குருடாக்கி வைத்திருக்கிறான்.

நம்முடைய மனக்கண்கள் பிரகாசிக்கும் படியாக தான் தேவன் தம்முடைய குமாரனை ஒப்புக்கொடுத்தார்.      நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து தம்முடைய சீஷர்களுக்கு தன்னை காண்பித்தார்.     அப்போது அவர்கள் பொரித்த மீன் கண்டத்தையும், தேன்கூட்டு துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.     அவைகளை அவர் வாங்கி புசித்து அவர் சொன்னது மோசேயின் நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும், சங்கீதங்களிலும் என்னை குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியது என்று நான் உங்களோடிருந்த போது உங்களுக்கு சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

லூக்கா: 24:45,46

அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;

இவ்விதமாக சீஷர்களோடு உயிர்த்தெழுந்த நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறதை பார்க்கிறோம்.

பிரியமானவர்களே நாம் (ஆத்துமா) உயிர்பிக்கபட்டால் மாத்திரமே நம் மனக்கண்கள் கிறிஸ்து திறப்பார் என்பதில் சந்தேகமில்லை.

எப்படியெனில் நம் முற்பிதாக்கள் (இஸ்ரவேல் சபை) க்கு தேவன் வானத்திலிருந்து கொடுத்த அப்பம் தரையில் விழுந்தது.     இஸ்ரவேல் வம்சத்தார் அதற்குப் போட்ட பெயர் மன்னா என்று, அது தரையில் கிடந்தது காரணம் அவர்களுள்ளால் ஆத்துமா மண்ணோடு மண்ணு ஒட்டியிருந்ததால் அவர்களுக்குள் ஆத்துமா உயிர்ப்பு இல்லாதிருந்தது.     ஆனால் நாமோ கிறிஸ்துவினால் நம்முடைய ஆத்துமா உயிர்பிக்கபடுகிறது.      அந்த ஆத்மாவின் உயிர்ப்பு உள்ளவர்களுடைய மனதை தேவன் வேத வாக்கியங்களின் ரகசியங்களை அறிந்துக் கொள்ளும்படி திறக்கிறார்.

அப்போது இப்பிரபஞ்சத்து அதிபதியை அழித்து நம் கிறிஸ்து நம்மளில் இருந்து வெற்றி  சிறக்கிறார்.     அதன் பின்பு நமக்கு வாக்கியங்களின் ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் வானத்திலிருந்து பொழிந்த மன்னா கொத்துமல்லி அளவாயும் வெண்மை நிறமாயும் இருந்தது அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.

யாத்திராகமம்: 16:32-36

அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும் படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.

மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.

இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.

ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.

பிரியமானவர்களே நம் பிதாக்கள் வனாந்தரத்திலே அப்பத்தை புசித்தார்கள் ஆனால் அவர்கள் எல்லோரும் மரித்தார்கள்.     ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் நானே ஜீவ அப்பம் என்னை புசிக்கிறவன் என்றென்றைக்கும் மரிக்காமல் இருப்பான் என்று.     அதனால் நாம் யாவரும் மரிக்காமல் காக்கபடும் படியாக ஜீவ அப்பம் புசிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.      நம் ஆயுசு பரம கானானண்டை சேரும் வரையிலும் புசிக்கவேண்டும்.       

ஜெபிப்போம்.     

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.