தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா: 21:37,38

அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.         

ல்லேலூயா.

காலையிலும் மாலையிலும் தேவனுக்கு ஆராதனை:- (கிறிஸ்து மேகத்தில் வெளிப்படுதல்)

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் தினந்தோறும் தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்றும், தினந்தோறும் தேவனிடத்திலிருந்து அப்பமாகிய ஆகாரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தியானித்தோம்.

பழைய ஏற்பாட்டு பகுதியை நாம் தியானிக்கும் போது நம் முற்பிதாக்கள் மன்னாவை புசித்தார்கள் ஆனால் அவர்கள் மரித்தார்கள். ஆனால்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் நானே ஜீவ அப்பம் என்னை புசிக்கிறவன் என்றைக்கும் மரிப்பதில்லை என்கிறார். அதைத்தான்,

யோவான்: 6:54-58

என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.

என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.                                                                                                   

ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினது போலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.

வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

பிரியமானவர்களே வானத்திலிருந்து இறங்கின அப்பம் கிறிஸ்து தான் அதுதான் அவர் சொல்கிறார்.

யோவான்: 6:48

ஜீவ அப்பம் நானே.

மேலும் இஸ்ரவேலர்,  சமுத்திரம் கடந்து ஏலீமுக்கு வந்தார்கள்.      அங்கு பன்னிரண்டு நீருற்றுகளும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தது.     (இதன் விளக்கம் அடுத்த நாட்களில் கர்த்தருக்கு சித்தமானால் தியானிப்போம்).

ஆனால் சீன் வனாந்தரத்தில் அவர்கள் ஆகாரம் குறைவுப் பட்டதால் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுக்கிறார்கள் மற்றும் விட்டு வந்த எகிப்தை நினைக்கிறார்கள்.      அதனை கேட்ட கர்த்தர் மோசேயிடம் சொல்கிறார்.      நான் உங்களுக்கு வனாந்தரத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்.      ஒவ்வொரு நாளிலும் வேண்டியதை சேர்த்துக் கொள்ளுங்கள்.     அதினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தின் படி நடப்பார்களோ, நடக்க மாட்டார்களோ என்று சோதிப்பேன்.

ஆறாம் நாளில் அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைக் காட்டிலும் இரண்டந்தனையாய் சேர்த்து, அதை ஆயத்தம் பண்ண கடவர்கள் என்றார்.

மோசேயும், ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதை சாயங்காலத்தில் அறிவீர்கள்.      விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையை காண்பீர்கள்.      கர்த்தர் உங்கள் முறுமுறுப்புகளை கேட்டார்.      நீங்கள் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.

பின்னும் மோசே சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்கு உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் உங்களுக்கு விளங்கும்.      கர்த்தருக்கு விரோதமாய்ப் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை கர்த்தர் கேட்டார்.      உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கு விரோதமாக இருக்கிறது.

பின்பு மோசே ஆரோனை நோக்கி நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரை நோக்கி: எல்லாரும் கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள்; அவர் உங்கள் முறுமுறுப்புகளை கேட்டார் என்று சொல்.

ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கு இதை சொல்லும் போது அவர்கள் எல்லோரும் வனாந்திர திசையாய் திரும்பி பார்த்தார்கள்.      அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.

கர்த்தர் மோசேயை நோக்கி இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளை கேட்டிருக்கிறேன்.     நீ அவர்களோடே பேசி சாயங்காலத்தில் இறைச்சியை புசித்து, விடியற் காலத்தில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

பிரியமானவர்களே, இதில் எழுதியிருக்கிற ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையும் நாம் ஒவ்வொருவருக்கும் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.     கர்த்தர் இஸ்ரவேலை பார்வோனிடத்திலிருந்து மீட்கும் போது இனி இஸ்ரவேலர் எகிப்தை நினைக்க கூடாது என்று அநேக அற்புதங்களை அவருடைய வல்லமையின் செங்கோலினால் செய்து காட்டினார் என்பது இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கண்ட செயல்.      ஆனால் யாத்திரையில் கொஞ்சம் கஷ்டம் வந்தவுடனே அவர்கள் எகிப்தில் பட்ட கஷ்டத்தை நினையாமல் அங்கு இறைச்சி சாப்பிட்டோம் என்றும் மற்றும் பல பல வார்த்தைகளால் தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்கிறதை பார்க்கிறோம்.

ஆனாலும் தேவன் தம்முடைய வல்லமையை இங்கு விளக்கப் பண்ணுகிறதை பார்க்கிறோம்.      நம்மளிலும் அநேகம்பேர் குறிப்பாக கர்த்தரின் ஊழியக்காரர்கள் தங்கள் சுகபோகம், சாப்பாடு குறைவுபட்டவுடனே வாய்க்கு வந்ததெல்லாம் பேசி முறுமுறுக்கிறார்கள்.      விடுவித்த இரட்சகரை நினையாமல் தேவனுக்கு விரோதமாக சுகபோக இன்பங்களுக்காக முறுமுறுக்கிறார்கள்.

பிரிய ஜனமே நம் முறுமுறுப்பை கேட்டு நம்மை திருப்தியாக்கியது போல் ஆக்கி நிச்சயம்  தேவன் நம்மை தண்டிக்கிறார்.      நம் முறுமுறுப்பை அவர் எண்ணிக்கையில் வைக்கிறார் சிந்தித்துக் கொள்ளுங்கள்.      எத்தனை தடவை இதுவரை விசுவாச யாத்திரை துவங்கியது முதல் முறுமுறுத்தோம் என்று நினைத்துப் பாருங்கள்.     நாம் நம்மை நடத்தி வந்த தேவன்; ஊழியக்காரர் மூலம் நடத்தி வரும் போது நாம் கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு விரோதமாக பேசுகிறோம் என்று சர்வசாதாரணமாக நாம் பேசி விடுகிறோம்.      அது தேவனுக்கு விரோதமாக நாம் முறுமுறுக்கிறது நினைத்துக் கொள்ள வேண்டும்.

முறுமுறுப்புகளை கேட்ட தேவன் கர்த்தரின் மகிமை மேகத்திலே காண செய்தார்.      கர்த்தரின் மகிமை என்பது கிறிஸ்து.      அன்று பழைய ஏற்பாட்டின் பகுதியிலும் கிறிஸ்து மேகத்தில் வெளிப்படுகிறார் இன்று நம் உள்ளம் ஆகாசமும் (மேகம்) அதில் வெளிப்படுகிறார்.

மேலும் சாயங்காலத்தில் இறைச்சியையும் விடியற் காலத்தில் அப்பமும் கொடுத்து திருப்தியாக்கி நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்றார்.     இதிலிருந்து தெரியவருகிறது விடியற்காலமும் சாயங்காலமும் தேவ சந்நிதியில் வரவேண்டும் வந்து தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.

யாத்திராகமம்: 16:13-15

சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது.      விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.

பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.

இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.

இந்த அப்பம் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்தியது இது கிடந்த இடம் தரை.       இந்த தரை நம்முடைய உலகமாகிய உள்ளம்.      இது என்னது என்று யாருக்கும் தெரியாமல் நம் உள்ளத்தில் உறைந்த பனிக்கட்டி பொடியத்தனையாய் இந்த அப்பம் நம் உள்ளத்தில் உண்டாயிருக்கிறது.      இதுதான் தேவனுடைய வார்த்தையாகிய கிறிஸ்து (கர்த்தரின் மகிமை) அது தான் இருந்தவரும் இருக்கிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவன் என்று எழுதப்பட்டிருக்கிறது இது எப்பொழுது நம் உள்ளத்தில் வருகிறது என்றால் தேவன் நம்மை சிருஷ்டித்து, அவர் தம்முடைய ஜீவசுவாசத்தை நாசியிலே ஊதும் போதே மனுஷன் ஜீவாத்துமாவானான் என்று எழுதப்பட்டிருக்கிறதே.      அவர் நம்மை உருவாக்கும் போதே இந்த வார்த்தையாகிய கிறிஸ்து நம் உள்ளத்தில் உண்டு ஆனால் பாவஞ் செய்து நம் ஆத்துமா கெட்டுப் போகிறதினால் கிறிஸ்துவின் மகிமை பிரகாசிக்க முடியாத படி இப்பிரபஞ்சத்தின் அதிபதி மனகண்களை குருடாக்கி வைத்திருக்கிறான்.

பிரியமானவர்களே அதைத்தான் தேவனுடைய வார்த்தை,

உபாகமம்: 30:11-14

நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.

நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் அவர் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;

நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;

நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.

பிரியமானவர்களே இவ்விதமாக கர்த்தர் நம்மை சிருஷ்டித்து வைத்திருக்கும் போது நாம் பயப்பட வேண்டிய காரணமென்ன ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்.  எல்லாம் நம் உள்ளம் திறந்தால் நன்மையை காணமுடியும்.         

ஜெபிப்போம்.         

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                       

-தொடர்ச்சி நாளை.