தேவனுக்கே மகிமையுண்டாவதாக
வெளிப்படுத்தல்: 7:17
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் தண்ணீர் குறைவுபடுவதுமில்லை:- மதுரமான வாழ்க்கை உண்டாகும்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் மீட்கப்பட்ட நாம் (எகிப்தின் அடிமையில்) எப்படி பிதாவாகிய தேவனுக்கும், ஆட்டுகுட்டியானவருக்கும் ஆராதனை செய்வோம் என்பதைக் குறித்து பத்மூ தீவில் யோவானுக்கு வெளிப்படுத்துகிறதை பார்க்கிறோம்.
மேலும் எகிப்திலிருந்து விடுதலையான இஸ்ரவேலர்கள் தேவனை புகழ்ந்து பாடுகிறதை வாசிக்கிறோம்.
யாத்திராகமம்: 15:22-24
பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.
அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.
அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.
நாம் தேவ வசனத்தை நன்றாக சிந்திக்க வேண்டும். இஸ்ரவேல் சபை சிவந்த சமுத்திரத்திலிருந்து யாத்திரை புறப்பட்டு சூர் வனாந்தரம் போய் மூன்று நாள் தண்ணீர் கிடையாமல் இருந்தார்கள். பின்பு மாராவிலே வந்தார்கள். மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்தது. அது குடிக்க கூடாதிருந்தது. அப்பொழுது அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து என்னத்தை குடிப்போம் என்றார்கள்.
இஸ்ரவேல் சபை யாத்திரையில் தண்ணீர் கிடையாமல் இருந்தது, இது ஜீவ தண்ணீருக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். அந்த இடம் சூர் வனாந்தரம்.
யாத்திராகமம்: 15:25,26
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
தண்ணீர் கிடையாமல் இருந்த போது மாராவில் வந்தார்கள். அங்குள்ள தண்ணீர் கசப்பாகயிருந்தது. மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறான். அப்போது கர்த்தர் ஒரு மரத்தை காண்ப்பிக்கிறார். அந்த மரம் தான் ஜீவ விருட்சமாகிய கிறிஸ்து. அந்த மரத்தை தண்ணீரில் போட்டவுடனே அது மதுரமாயிற்று. இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கிறிஸ்து நம் வாழ்வில் வந்து விட்டால் வாழ்க்கை மதுரமாகிவிடும்.
அநேகர் சொல்வார்கள் தேவனை ஏற்றுக் கொண்டால் முடிவு காலம் மட்டும் கசப்பு தான் என்று. ஆனால் நாம் ஒன்று சிந்திக்க வேண்டும். கசப்பான வாழ்க்கையை மாற்றும் படியாகவே கிறிஸ்து இவ்வுலகத்தில் வந்தார். பாவம், சாபம், மீறுதல், அக்கிரமம், கீழ்படியாமை, இப்படி போன்ற செயல்கள் நம்மில் இருக்குமானால் நமக்கு கசப்புத்தான்.
எரேமியா: 9:13-16
நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும், தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,
அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மத்தேயு: 27:33,34
கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது,
கசப்புக் கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
பிரியமானவர்களே நம் வாழ்க்கையில் இருக்கிற கசப்புகளை மாற்றும் படியாகவே கிறிஸ்து நமக்காக பாடுபட்டார். பாவம், சாபம், அக்கிரமம் இவற்றை நிவிர்த்தி செய்யும் படியாக கல்வாரி சிலுவையில் அடிக்கப்பட்டார். அப்போது அங்கு போகும் வழியில் கசப்பு கலந்த காடியை ருசிபார்த்து குடிக்க மனதில்லாதிருந்தார். அதனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாரா அனுபவத்தை தருகிறவர் அல்ல அவர் ருசி பார்த்தார் ஆனால் குடிக்கவில்லை.
பிரியமானவர்களே நாமும் வாழ்க்கை கசப்பாக இருக்கிறது என்று இருந்தால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டால் மாராவின் கசப்பை மாற்றின தேவன் நம் வாழ்க்கையும் மதுரமாக மாற்றுவார். அவர் சொற்படி கீழ்படிந்து நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
அதனால் தான் மோசே அந்த மரத்தை தண்ணீரில் போட்டான்
தண்ணீர் மதுரமாயிற்று தேவன் அவர்களுக்கு நியமத்தையும், நியாயத்தையும் கட்டளையிட்டு சோதிக்கிறார்.
அது போல் நாமும் அவர் சொற்படி நடக்கிறோமா என்று சோதித்து நம் வாழ்க்கையை மதுரமாக மாற்றுவார். மதுரமாக மாற்றுவது கிறிஸ்து (வசனம்) நாம் அவருடைய பார்வைக்கு செம்மையான பிரகாரம் நடக்க வேண்டும். அவருடைய கட்டளைக்கு நியமங்கள் யாவையும் கைக்கொண்டால் எகிப்தியரின் வியாதிகளில் ஒன்றும் வருவதில்லை என்று சொல்கிறார்.
நாம் அவரை பின்பற்றி வருவோமானால் தண்ணீர் கிடையாத பஞ்சம் உண்டாகாது ஏனென்றால் நித்திய ஜீவ வசனமாகிய ஊற்று அவரிடத்திலிருந்து புறப்படுகிறது. மேலும் சமாரியா ஸ்திரீயினிடத்தில் சொல்கிறார். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு ஒருக்காலும் தாகமுண்டாகாது. அது நித்திய ஜீவ காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும். அது கசப்பு அல்ல மதுரமான ஊற்றாயிருக்கும்.
வெளிப்படுத்தல்: 7:13-17
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.
இவ்விதமாக உலகமாகிய உபத்திரவத்தை ஜெயித்தவர்கள் அவர்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலே தோய்த்து வெளுத்தவர்கள் அவர்கள் உள்ளான மனுஷன் வளரும் போது புறம்பான மனுஷன் அழிக்கப்படுவான். அப்போது நம் வெளி அலங்காரங்கள் அழியும்.உள் மனுஷனில் பரிசுத்தம் விளங்கும் போது புறம்பான மனுஷன் வெண் வஸ்திரம் தரிப்பான்.
இவ்விதமாக நாம் தேவனை இரவும் பகலும் வெண் வஸ்திரம் தரித்து சேவிக்க வேண்டும் என்று நமக்கு தேவ வசனம் தெளிவுப்படுத்துகிறது.
அவ்விதம் பரிசுத்தம் தேடி கொள்ள வேண்டும். அப்போது நம்முடைய நா வறண்டு போகாது தண்ணீர் கிடையாமல் இருக்காது. கர்த்தர் அவருடைய ஜீவ தண்ணீரால் நிறைத்து கொண்டிருப்பார். நாமும் தேவனுடைய ஜீவ தண்ணீரால் பரிசுத்தமாவோம். நாம் யாவரும் பரிசுத்தமாகிடுவோம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.