தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 138:2

உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.          அல்லேலூயா.

பிதாவாகிய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஆராதனை:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே முந்தின நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏழு முத்திரைகளை உடைப்பதையும், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் நம் உள்ள கதவை திறந்து நம்மை தேவனுக்கென்று அவருடைய இரத்தத்தால் மீட்டுக் கொண்டு நம்மை தேவனுக்கு முன்பாக ராஜாக்களும்,

ஆசாரியர்களுமாக்கி நாம் யாவரும் பூமியிலே அரசாளுவோம் என்பது வேத வசனத்தில் கூட நாம் வாசிக்க முடிகிறது.

இவ்விதமாக ஆசாரியர்களும் ராஜாக்களுமாக்கப்பட்ட நாம் தேவனுடைய ஜனமாகிறோம்.

I பேதுரு: 2:10

முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.

மேலும் தேவனுக்கென்று இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள், இரக்கப் பெற்றவர்கள் அவர்கள் நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று பாடுகிறதை வாசிக்கிறோம்.      உண்மையாகவே இப்படி இரக்கம் பெற்றவர்கள் பரிசுத்தவான்களாயிருப்பார்கள்.

வெளிப்படுத்தல்: 5:11,12

பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

இவ்விதமாக மீட்கப்பட்டவர்கள் இரட்சிப்படைகிறார்கள்.

இரட்சிப்படைந்து சபை கூடி தேவனை மகிமைப்படுத்துகிறதை பார்க்கிறோம்.       நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை சேர்க்க வரும் போதெல்லாம் நாம் ஆயத்தமாக காணப்பட வேண்டும். நாம் அவருடைய மணவாட்டி சபை.      நம் ஆத்துமாவை சபையாக மாற்றுகிறார்.       மணவாட்டி பரிசுத்த ஆவியானவர்.     மணவாளன் எங்கே உண்டோ அங்கே மணவாட்டி உண்டு.     மணவாளன் சத்தம் கேட்கும் போது மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வாள். அப்போது சபை (நாம் ஒவ்வொருவரும்) மணவாட்டி சபையாக அவருக்கு எதிர் கொண்டு போக வேண்டும்.     நாம் செய்த நீதியும், கிரியைத் தான் நம்மோடு வரும்.      அப்போது அவர் மேகத்தில் வருவார். (மேகம் என்பது ஆகாயம்) நம்முடைய உள்ளம் மேகத்தினால் நிறையும் அப்போது எக்காளம் தொனிக்கும்.     எக்காளம் என்பது தேவனுடைய வசனம் இந்த எக்காளம் இருதயம் திறந்தவர்களுடைய உள்ளத்தில் தொனிக்கும்.      அது தான் வானில் எக்காளம் தொனிக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது.      எக்காளம் நம் உள்ளத்தில் தொனித்தால் மாத்திரமே, பரலோகத்திலும் தொனிக்கும்.

உலகத்தில் நாம் வசிக்கும் போது எக்காளம் தொனியாமல் இருந்தால் பரலோகத்தில் எப்படி தொனிக்கும்.      மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்.      உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.      அந்த ஒளியில் எவ்வளவேனும் இருளில்லை.      நாம் கூப்பிடும் போதெல்லாம் நம் ஆத்துமா அவர் வருகைக்கு ஆயத்தமாயிருக்குமானால் அவர் ஆயிரமாயிரமான பரிசுத்தவான்களோடே வருவார் அவர்களைத்தான் தூதர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.

அது தான் மீட்கப்பட்டவர்கள் பாடுகிறார்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினீர் நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று பாடினார்கள்.                                              அதனால் தான் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று எழுதப்பட்டிருக்கிறது.      அந்த தேவனுடைய சேனை யார்? பரிசுத்தவான்கள் (நாமும் அவ்விதம் மாறுவோமானால் நாமும் பரிசுத்தவான்கள்).

இவ்விதம் தூதர் சேனை  தேவனை மகிமைப் படுத்துவதற்கு சகல அதிகாரத்தையும் நம்முடைய யூத கோத்திரத்து சிங்கமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெற்றிருந்தார்.      அந்த ஏழு கொம்புகள், ஏழு அதிகாரத்தை காட்டுகிறது.

ஏழு அதிகாரங்கள் என்னவென்றால் வல்லமை, ஐசுவரியம், ஞானம், பெலன், கனம், மகிமை, ஸ்தோத்திரம் இந்த ஏழும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மாத்திரமே உண்டு.      வேறு இப்பூமியிலோ, வானத்திலோ, சமுத்திரத்திலோ யாரும் இல்லை என்பது நிச்சயம்.

இவ்விதம் தூதர் சேனை மகா சத்தமிட்டு 

ஆராதிக்கும் போது,

வெளிப்படுத்தல்: 5:13,14

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின.      இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

பிரியமானவர்களே இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் (உயிர்த்தெழுந்த கிறிஸ்து) கல்லறையில் பதித்திருந்த முத்திரையை உடைக்க வல்லமையுள்ளவர்.      நம் இதயத்தில் உள்ள முத்திரையை உடைக்க அதிகாரத்தை பெற்றவர் உயிர்தெழுந்தார்.

உயிர்தெழுந்து பிதாவின் சிங்காசனத்திற்கு முன்பு இரவும் பகலும் ஓயாமல் ஆராதனைக்கு தகுதி பெற்றவர்.      அவரை எவ்விதம் தொழுது ஆராதனை செய்ய வேண்டும் என்பதை சபை ஊழியர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு யோவானுக்கு பத்மூ தீவில் தரிசனம் காண்பிக்கிறார்.                                                            இதில் நாம் எவ்விதம் ஆவிக்குரிய கோளத்தில் இருந்தாலும் வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழிருக்கிற சிருஷ்டிகளாக இருந்தாலும் சமுத்திரத்தில் இருந்தாலும் (இரட்சிப்பின் தோற்றங்களை

காட்டுகிறது) நாம் தேவனை ஆராதிக்க வேண்டும்.

ஆதலால் பிரியமானவர்களே நாம் ஆராதனை செய்யும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்களோடு வருவார்.

I தெசலோனிக்கேயர்: 3:13

இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.

இவ்விதமாக நம்மோடு ஆராதனை செய்வது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், பரிசுத்தவான்களும்.     இவ்விதமாக கறையற்றவர்களாக பரிசுத்தமாக வாழ்ந்து தேவனுக்கு பிரியமான ஆராதனை செலுத்துவோம்.        ஜெபிப்போம்.         கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                      

-தொடர்ச்சி நாளை.