தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம்: 13:6
கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக விழுந்து வணங்குதல்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து மீட்கப்படும் போது மீரியாம் பிரதி வசனமாக பாடிய பாட்டை குறித்து தியானித்தோம். மேலும் கர்த்தர் மகிமையாய் வெற்றி சிறந்தார் என்பதையும், எகிப்தின் குதிரையையும், குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடுவதையும் இவை நம் ஒவ்வொருவருடைய ஆத்துமாவின் இரட்சிப்பு, துன்மார்க்க வாழ்க்கையை விட்டு விடுதலையாகிறதை நமக்கு தேவன் சமுத்திரத்தில் வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறதைப் பார்க்கிறோம்.
இவை எங்கு சம்பவிக்கிறது என்றால் நம் இருதயத்தில் அங்கு உள்ள சிந்தனைகள், செயல்கள், சகலமும் சமுத்திரத்தை போல துன்மார்க்கமாக இருப்பதால் தேவன் நம் இருதய கதவை உடைத்து (கடின இருதயத்தை) யூத கோத்திரத்து சிங்கமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் உடைத்து, பார்வோனையும் அவன் சேனையையும் நம் உலக மோக இச்சை, பெருமை, பொல்லாப்பு எல்லாவற்றையும் அகற்றி நம்மை விடுவித்து கிறிஸ்துவோடு இரத்தத்தாலாகிய புதிய உடன்படிக்கையாகிய ஞானஸ்நானம் எடுக்க செய்து தேவன் அவரோடு நம்மை ஐக்கியப்படுத்தி அவர் பாதையில் நடக்க கற்று தருகிறதை பார்க்கிறோம்.
ஞானஸ்நானமானது மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல் தேவனை பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறார்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் குறித்து சொல்லப்படுகிறது என்னவென்றால்,
வெளிப்படுத்தல்: 5:6-10
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
பிரியமானவர்களே இஸ்ரவேல் சபையை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்து நமக்கு திருஷ்டாந்தப்படுத்தியதின் நோக்கம் தான் மேற்கூறிய வசனங்கள். நமக்குள்ளால் ஒரு பாவ உணர்வு தோன்றுமானால் நிச்சயமாகவே நம் இருதயத்தை தேவன் திறப்பார். ஞானஸ்நானம் நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் எடுக்கிற புது உடன்படிக்கை அது தேவனோடு உள்ள ஐக்கியம். இதனைப் பற்றி கழிந்த நாளில் நாம் தியானித்தோம். அப்போது அடிக்கபட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி (உயிர்த்தெழுந்த கிறிஸ்து) சிங்காசனத்திற்கு, நான்கு ஜீவன்களுக்கும் மத்தியில் ஏழு கொம்புகளையும், ஏழு கண்களையுடையதாய் காணப்படுகிறது.
எப்படியெனில் ஏழு கொம்புகள், ஏழு அதிகாரத்தை காட்டுகிறது. ஏழு கண்கள் பூமியெங்கும் அனுப்பப் படுகிற ஏழு ஆவிகளேயாம்., இவ்விதமாக ஏழு அதிகாரத்தை தன் புயத்தினால் தாங்கியிருக்கிறதினால் சிங்காசனத்தில் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
அந்த புஸ்தகம் வாங்கப்பட்ட போது நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தையும் நிறைந்த பொற் கலசங்களையும் பிடித்துக் கொண்டு ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணங்கமாய் விழுகிறார்கள்.
இதன் விளக்கம் என்னவென்றால் நம்மை கிறிஸ்து கிரயத்துக்கு வாங்குகிறார்.
I கொரிந்தியர்: 6:20
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
தேவன் யோவானுக்கு தம்முடைய தூதனை அனுப்பி வெளிப்படுத்தும் போது தம்முடைய பிள்ளைகள் எவ்விதம் இரட்சிப்பை சுதந்தரிக்கிறார்கள் என்பதை விளக்கிக் காட்டுகிறார். இவை பத்மூ தீவில் வைத்து நடக்கிறது.
நம்மை விலைக்கிரயம் பண்ணுகிறதினால் நாம் நம் சுரமண்டலகளையும் மற்றும் நாம் பரிசுத்தத்தோடும், ஜெபத்தோடும் தேவனுக்கு முன்பாக முழுமையும் இருதயம் ஒப்புக்கொடுத்து தொழுது கொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறார். நம்மோடு பழைய ஏற்பாட்டு இருபத்து நான்கு மூப்பர்களும் மேலும் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு ஆட்டுக்குட்டியானவர்க்கு முன்பாக விழுந்து வணங்குகிறார்கள்.
என்னவெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஆவியை சிலுவையில் நின்று விட்ட போது தான் தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
பிரியமானவர்களே இயேசு கிறிஸ்துவின் மரணத்தோடு தான் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எழுந்திருந்தார்கள். அது வரையிலும் கல்லறைகளில் தான் இளைப்பாறினார்கள். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வரையிலும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வில்லை.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு தான் இவர்கள் கல்லறைகளை விட்டு புறப்பட்டு பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து அநேகருக்கு காணப்பட்டார்கள். அதனால் தான் பத்மூ தீவில் யோவானுக்கு தேவன் வெளிப்படுத்துகிறார்.
முற்காலத்தில் (பழைய ஏற்பாட்டில்) திரைச்சீலை கிழியும் வரையிலும் யாரும் பிதாவினிடத்தில் (கிருபாசனத்தண்டை) நெருங்க முடியாது. இயேசு கிறிஸ்து நமக்காக தம்முடைய ஆவியை விட்ட போது தான் திரைச்சீலை கிழிந்தது. நாம் யாவரும் கிறிஸ்து மூலம் கிருபாசனத்தண்டை சேர முடியும். அதனால் தான் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்தை ( நம் இருதயத்தை) திறப்பதற்கு அதிகாரத்தை பெற்றிருந்தார். அதனால் மூப்பர்களில் ஒருவன் அங்கு சொல்கிறான், யூதா கோத்திரத்து சிங்கமும், தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தை திறக்கவும், அதின் ஏழு முத்திரைகளை உடைக்கவும் ஜெயம் பெற்றவர் என்று அவ்விதம் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அதனால் பழைய ஏற்பட்டு பரிசுத்தவான்கள் யாவருடைய ஜெபங்களாகிய தூபவர்க்கங்கள் இருபத்து நான்கு மூப்பர்கள் பொற்கலசத்தில் பிடித்திருந்தார்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு பிறகு எல்லாவற்றிற்கும் மத்தியஸ்தர் இயேசு கிறிஸ்து என்பது நமக்குத் தெரிய வேண்டும். நாம் இயேசு கிறிஸ்து மூலம் பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியம் பெற்றோம். இவ்விதம் நம்மை மீட்டுக் கொண்ட தேவனை எப்போதும் துதித்து பாடிக் கொண்டே இருக்க வேண்டும். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.