எகிப்தில் கீழ் காற்று - மேல் காற்று:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Aug 18, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 148:12

வாலிபரே கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

எகிப்தில் கீழ் காற்று - மேல் காற்று:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் கழிந்த நாளில் தியானித்த வேதப் பகுதியில் தேவன் எகிப்தில் வாதைகளை அனுப்புவது, நம்மிடத்தில் எகிப்தின் கிரியைகள் காணப்பட்டால் அதனை அழித்து, உள்ளான மனுஷன் புதுப்பிக்கப்பட்டு நம்முடைய ஆத்துமாவை தேவன் உயிர்ப்பித்து அதனை சுத்திகரித்து, அங்கிருந்து ஜீவ தண்ணீருள்ள நதி ஓடும் படியாகவே தேவன் எகிப்தில் வாதைகளை அனுப்பி திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

மேலும் நம் ஆத்துமா விடுதலையாகியும் மீண்டும் நம் உள்ளம் எகிப்தின் செயல்பாடுகள் இருந்தால் தேவன் எகிப்தின் வாதைகளை இஸ்ரவேலருக்குள்ளும் அனுப்புகிறதை பார்க்கிறோம்.

கர்த்தர் எகிப்தில் ஏழாவது வாதையை அனுப்பியும் கர்த்தர் மோசேயை கொண்டு சொல்லியிருந்த படியே பார்வோனின் இருதயம் கடினப்பட்டது அவன் இஸ்ரவேல் புத்திரரை போக விடவில்லை.

யாத்திராகமம்: 10:1-11

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ. அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்,

நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.

அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.

நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.

தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல் மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளை யெல்லாம் தின்றுபோடும்.

உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன்பிதாக்களும் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.

அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாய் இருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.

அப்போது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி; யாரார் போகிறார்கள் என்று கேட்க, மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.

அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;

அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள்.

பிரியமானவர்களே இவைதான் நம் வாழ்க்கையில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். எகிப்து என்பது உலகமாகிய பாரம்பரிய பாவ வாழ்க்கை மனுஷர்களுடைய கட்டளைகளுக்கேற்ப நாம் நடக்கிற ஒரு வாழ்க்கை தேவன் நம்மளில் விரும்புவது,  இவை எல்லாவற்றையும் நம் இருதயத்திலிருந்து மாற்றி, நம் ஆத்துமா ஜீவன் பெற்று தேவனோடு வாழ்ந்து தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்யவேண்டும். ஆனால் நாமோ உலகமாகிய பாவத்தோடு சிக்குண்டு அதற்கு அடிமைபட்டிருக்கிறதால் நம் இருதயம் கடினத்தோடு காணப்படுகிறது. நம் இருதயம் முழுமையும் தேவனுக்கு கொடுக்காமல் இருப்பதால்,  கழிந்த நாளில் கல்மலையாகிய வாதை என்றால் என்ன என்பதும், தேவன் அந்த வாதையை எகிப்தில் அனுப்பினது போல் நம் உள்ளத்திலும் அவை எவ்விதம் செயல்படுகிறது என்றும் பார்த்தோம். எகிப்தை தேவன் அழிக்கிறது முழு பார்வோனையும் அவன் கிரியைகளையும் (துர் உபதேசம்) அழிப்பதே அவருடைய நோக்கம்.   அதிலும் மனந்திரும்பாமல் இருக்கிறவர்கள் மேல் எட்டாவது வாதையாகிய வெட்டுக்கிளிகள் அனுப்புகிறதை பார்க்கிறோம்.

இப்போதே நாம் ஒன்று சிந்திப்போம் வெட்டிக்கிளிகள் பூமியின் முகத்தை மூடிற்று என்று பார்க்கிறோம். இப்போது அநேக இடங்களில் வெட்டுகிளிகள் பூமியை நிறைத்து முகம் மூடின காட்சியை நாம் பார்க்க முடிகிறது. அதுபோல் நம் உள்ளத்திலும் அதை தேவன் அனுப்புகிறார். நம் உள்ளத்தில் அனுப்புகிற வெட்டுக்கிளியை நம் புறக்கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் ஆன்மீக கண்கள் திறந்தவர்கள் அதனை பார்க்க முடியும். எப்படியெனில் புறத்தே வெட்டுக்கிளிகள் துளிர்க்கிற செடிகள் பட்சிக்கும். அது போல் நம் அகத்தில் இறங்குகிற வெட்டுக்கிளிகளால் இருதயத்தில் முளைத்திருந்த கனிகள் யாவையும் பட்சித்துப் போடுகிறது. இதன் காரணமாக வெளியின் பயிர்வகைகள் நஷ்டபடுவது போல் எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் பட்டு விழுகிறார்கள். இதற்கு காரணம் உள்ளம் கடினமாக இருந்து தேவனை ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்காமல் இருப்பதால் இவ்விதமான காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதே உணர்வடைந்து தேவனுடைய பாதத்தில் விழுவோம். எப்படியெனில்,

யாத்திராகமம்: 10:12-19

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.

அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.                                           

வெட்டுக்கிளிகள் எகிப்து தேசமெங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததுமில்லை, அதற்குப்பின் இருப்பதுமில்லை.

அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.

அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.

இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்க வேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்று சொல்ல மோசே

 பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய், கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.

அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக் கொண்டு போய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.

இதனை குறித்து நாளைக்கு தியானிப்போம். கர்த்தர் நம் நாட்டில் கீழ்காற்றை வரப்பண்ணுகிறார். ஆனால் மேல் காற்றை அவர் வீச செய்ய நம் ஒவ்வொருவரும் நம் இருதயத்தை ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                       

-தொடர்ச்சி நாளை.