Aug 11, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 119:29

பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா. 

எகிப்தியர் யார்? அவர்களுடைய செயல்பாடுகள்:- 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்ததான வேதப்பகுதியில் தேவனுடைய விரலை குறித்து தியானித்தோம். அது தேவனுடைய நியாயத்தீர்ப்பாயிருக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு போதும் விக்கிரகராதனை செய்யக் கூடாது, அது தேவனுக்கு மிகவும் அருவருப்பானது ஆனால் எகிப்தியரிடத்தில் இவ்வித கிரியைகள் இருக்கிறதினால் தேவன் எகிப்து தேசமெங்கும் வாதைகளை அனுப்புகிறார். நாமும் விக்கிரகராதனை எதை செய்தாலும் எகிப்தின் வாதை தேவன் நிச்சயம் அனுப்புவார். தேசத்தில் அனுப்பினது போல நம் உள்ளம் எகிப்தாக இருக்குமானால் அங்கும் அனுப்புவார். அப்போது நம் ஆத்துமா ஆறுதலடையாதிருக்கும்.

மேலும் விக்கிரகங்களை குறித்து தேவன் சொல்லுவது பொன்னாலும், வெள்ளியாலும், வெண்கலத்தாலும், மரத்தாலும், கல்லாலும் செய்த விக்கிரகத்தை தேவன் கூறுகிறார். மற்றும் நம் சரீரத்தில் இருக்கிற விக்கிரகத்தை சொல்லுகிறார். அது மட்டுமல்லாமல் நம் இதயத்துக்குள் இருக்கிற விக்கிரகம் பற்றி கூறுகிறார்.

ஏசாயா: 19:1-4

எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.

சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும் ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்.                                                                                     

அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப் பண்ணுவேன்; அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும் சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள்.

நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்பிப்பேன்; கடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஏசாயா: 30:1-3

பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும்.

பிரியமானவர்களே எகிப்திற்கு போகிறவர்கள் யார்? நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டும், அவரோடு உடன்படிக்கை எடுத்தும், நம் உள்ளம் புதுமையான சிருஷ்டியை அடையாமல், நம் முன்னோர்களின் கிரியைகளை நாம் செய்து நம்முடைய தேவைக்கு விட்டு விட்ட எகிப்தின் கிரியைகளை மீண்டும் செய்து, மற்றும் நம் பிள்ளைகளின் காரியங்களுக்காக மனுஷர்களை பிரியப்படுத்த வேண்டுமென்று நினைத்து நாம் பின்னிட்டு பார்த்து,   விட்ட காரியங்களில் மீண்டும் நாம் துணிவாய் நுழைந்து கொள்வதெல்லாம் நம் திரும்பி எகிப்துக்கு போகிறோம். பாவத்துக்கு மரித்த நாம்  மீண்டும் பாவத்தை செய்கிறோமென்றால் நாம் பாவங்களுக்கு மரிக்கவில்லை.   ஏனென்றால் மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாயிருப்பான். நீங்களே சிந்தியுங்கள் மரித்த ஒருவன் மீண்டும் பாவஞ் செய்ய மாட்டான். இதிலிருந்து என்ன தெரிகிறது நம் பழைய பாவங்கள் மரிக்காததினால் நேரம் வரும்போது தலையெடுக்கிறது. இது தான் சாத்தானுடைய கிரியை என்பது நமக்கு தெரிய வேண்டும்.                                                                                   

இவற்றைத்தான் தேவன் சொல்லுகிறார் எகிப்துக்கு போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! இவர்களைக் குறித்து தேவன் சொல்லுவது,

ஏசாயா: 30:9-13

இவர்கள் கலகமுள்ள ஜனங்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், கர்த்தருடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாயிருக்கிறார்கள்.

இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல் எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,

நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

நீங்கள் இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்துகொள்ளுகிறபடியால்,

இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்த்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப் போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார்.

இதிலிருந்து நமக்குத் தெரியவருகிறது என்னவென்றால் அவரவருக்கு ஏற்ற பிரகாரம் சத்திய வார்த்தைகளை மாற்றிப் இதமான வார்த்தைகளை உரைத்து, மாயமானவைகளை வைத்து திருஷ்டியாக்குகிறவர்கள்  யாராக இருந்தாலும் அவர்கள் எகிப்தியர்கள் என்றும், சத்திய வார்த்தைகளை கேட்க மனமில்லாதவர்கள்;  இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கை திடீரென்று இல்லாமற் போய் விடுவார்கள். அவர்கள் ஆத்துமா அழிந்து போகும்.

ஆனால் இஸ்ரவேல் அடிமையாயிருக்க கூடாது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மேலும் எகிப்தியர்கள் குறித்து கர்த்தர் சொல்லுகிறது.

ஏசாயா: 30:14

அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம். 

பிரியமானவர்களே நாம் எகிப்தின் செயல்பாடுகள் அத்தனையும் விட்டு மனந் திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவோம்.

இவ்விதம் இஸ்ரவேல்;  எகிப்தை விட்டு தேவன் விடுதலையாக்கியது நம்முடைய திருஷ்டாந்தத்திற்கு. பின்னும் கர்த்தர் மோசேயிடத்தில் பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது அதிகாலமே அவனுக்கு முன்பாக நின்று ஜனங்களை எனக்கு ஆராதனை செய்யும்படி போக விடு,  என் ஜனங்களை போகவிடாயாகில், நான் உன் மேலும், உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள் மேலும், உன் வீடுகள் மேலும், பலவித வண்டுகளை அனுப்புவேன். எகிப்தியர் இருக்கிற தேசமும், அவர்கள் வீடுகளும் வண்டுகளால் நிறையும்.

பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனமாகிய இஸ்ரவேலர் இருக்கிற கோசேன் நாட்டில் வண்டுகள் வராதபடி விசேஷப்படுத்தி;  என் ஜனங்களுக்கும், உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன். இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

கர்த்தர் சொன்னபடியே எகிப்து தேசம்,பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், அவன் ஜனங்கள் எல்லாருடைய வீடுகளில் எல்லாம் வண்டுகள் வந்தது. வண்டுகளினாலே தேசம் கெட்டு போயிற்று.

அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைப்பித்து நீங்கள் போய் உங்கள் தேவனுக்கு தேசத்திலே தானே பலியிடுங்கள் என்றான்.

அதற்கு மோசே, அப்படி செய்யத் தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எகிப்தியருடைய அருவருப்பை பலியிடுகிறதாயிருக்குமே. நாங்கள் எங்கள் தேசத்திலே மூன்று நாள் பிரயாணம் போய் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறப்படியே பலியிடுவோம் என்றான்.

ஆனால் பார்வோன் சொல்லுகிறான் நான் போக விடுவேன்.ஆனால் அதிக தூரம் போக வேண்டாம் என்று சொல்லி எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.

இதன் பொருள் என்னவென்றால் தேசம் என்பது நம் ஒவ்வொருவரும். ஆனால் பார்வோன் ஆவி அநேகரை வஞ்சிக்கிறது என்றால் முழுமையும் தங்கள் எகிப்தின் வாழ்க்கையை விட்டு தூரமாய் விலகாதபடி எகிப்தை ஒட்டி (முற்கால பாராம்பரியம், மாயமான கிரியை) இப்படிப்பட்ட பழக்கங்களை விடாதபடி தேவனை ஆராதிப்பார்கள். அது தான் சாத்தானுடைய தந்திரம் அப்படியிருந்தால் நாம் எகிப்தின் அருவருப்பை பலியிடுகிறோம். இதனை தேவன் ஏற்றுக் கொள்ளுகிறதில்லை.

எல்லாம் தங்கள் தங்கள் வாழ்க்கையை சோதித்து அறியுங்கள். ஆனால்,

யாத்திராகமம் 8:29

அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.

பின்பு மோசே தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தான். கர்த்தர் ஒரு வண்டுகளும் இல்லாதபடி எல்லாவற்றையும் நீங்கும்படி செய்தார்.

பின்னும் பார்வோன் ஜனங்களை ஆராதனைக்கு விடாதபடி இருதயத்தைக் கடினப்படுத்தி கொண்டான்.

பிரியமானவர்களே பலவித வண்டு ஜாதிகள் என்பது நம் உள்ளத்திலும், நம் வீடுகளில் இருக்கிற பிசாசின் கிரியைகள், அசுத்த ஆவிகள். ஆனால் நாம் தேவனிடத்தில் விண்ணப்பிக்கும் போது கர்த்தர் நாம் தேவனை முழு இருதயத்தோடும் ஆராதனை  செய்யும் படியாக அசுத்த ஆவிகளை துரத்துகிறார். ஆனால் நாமோ விடுதலை பெற்ற பிறகு அவரை விட்டு தூரமாய் இருந்து நம் மனம் போன போக்கில் எகிப்தாக இருந்து ஆராதிப்போமானால் தேவன் அதில் பிரியப்படுவதில்லை. மீண்டும் அடுத்த வாதையை அனுப்புவார்.

அன்பானவர்களே நாம் கர்த்தரை ஏமாற்றாதபடி ஜாக்கிரதையாக வாதையினின்று விடுதலை பெற்றுக் கொள்ள முழு ஆவி, ஆத்துமா, சரீரம் தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                      

-தொடர்ச்சி நாளை.