தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

லூக்கா: 6:41

நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

எகிப்தின் மூன்றாவது வாதை:- பேன்கள் பேன்களின் செயல்பாடுகள்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் தியானித்ததான வேதப் பகுதியில் நாம் அசுத்த ஆவிகளால் வஞ்சிக்கபடாதபடி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதன் சில கருத்துக்கள் தியானித்தோம். ஆனால் பார்வோனுடைய தேசமாகிய எகிப்தில் தவளைகளை அனுப்பின தேவன்,  இஸ்ரவேல் சபையை தேவனை ஆராதிப்பதற்கு விடாத காரணத்தால் மூன்றாவது  வாதையாக  பேன்களை அனுப்புகிறதை நாம் வாசிக்க முடிகிறது.

யாத்திராகமம்: 8:16-18

அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.

அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையிலிருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் பேன்களாய் எகிப்து தேசமெங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.

மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ் செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தது.

அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை  நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்கு செவிகொடாமற்போனான்.

பிரியமானவர்களே; பூமியின் புழுதியின் மேல் கர்த்தர் கோலை நீட்டி அடி என்று சொல்கிறார். கழிந்த சில நாட்களுக்கு முன் நாம் தியானித்தோம். ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப் போனப்படியினால் உம்மை விட்டு அகன்று போகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும் என்று வேத வசனம் சொல்லப்படுகிறது. புழுதி சர்ப்பத்தின் இரை என்பது நமக்குத் தெரியும். நாம் கிறிஸ்துவின் ஜீவனால் உயிர்ப்பிக்கபடாவிட்டால்,

சங்கீதம்: 119:25

என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

தேவனுடைய வசனத்தில் கிறிஸ்துவின் ஜீவன் இருக்கிறது. தேவனுடைய வசனத்தை விசுவாசிக்கிற ஒவ்வொருவருடைய ஆத்துமாவும் உயிர்ப்பிக்கப்படா விட்டால் அது புழுதியாக இருக்கிறது. புழுதி என்பது தரையை காட்டுகிறது. இந்த தரையாகிய புழுதியில் இருப்பது சர்ப்பம்,  அதனால் கர்த்தர் சொல்கிறார். பார்வோன் இஸ்ரவேலரை ஆராதனைக்கு அனுப்பாமல் கடினமாக இருப்பதால்,  மோசேயிடம் கோலை தரையில் அடிக்க சொல்லும் போது மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம்  பேன்களாகிறது.

அப்போது மந்திரவாதிகளும் அப்படி செய்ய நினைத்து, செய்ய கூடாமற் போனப்போது இது தேவனுடைய விரல் என்று சொல்கிறார்கள். தேவனுடைய விரல் என்றால் கிறிஸ்து,  எகிப்தின் வாதைகளை அனுப்புகிறார்.  கிறிஸ்துதான் அந்தக் கோல்.

நம் எல்லோருக்கும் பேன்கள் என்றால் தெரியும்,  மனுஷரிலும், மிருக ஜீவன்கள் மேலும் இது பரவி சொல்லும் ஒருவகை அருவருப்பானது. ஆனால் தரையிலும் எகிப்து முழுமையும் இது இருக்குமானால் எவ்வளவு அருவருப்பானது என்று நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும்.  ஒருவர் தலையிலோ, மிருக ஜீவன்களிலோ இருந்தால் இதனை ஒழித்து விடுவது மிக கடினம். ஆனால் இது ஈக்களால் எல்லா மற்றவர்களுக்கும் போகும். ஆனால் நம் உள்ளத்தில் இது இருக்குமானால் எவ்வளவு அருவருப்பானது மிகவும் கடியாக இருக்கும். மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுக்கும்.  இது  துர்உபதேசத்துக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இது உலகமெங்கும் பரவி செல்லும்.  அதனால் நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாவின் தலையில் இது வராது. அப்படியானால் நாம் எகிப்தை விட்டு வேறுபட்டு இரட்சிக்கப்பட்டால் நம் ஆத்துமா அருவருப்பான கிரியைகளினால் நிறையாது. மற்றவர்களுக்குத் தீமை செய்ய மாட்டோம். தீங்கு நினைக்க மாட்டோம்.

நாம் இஸ்ரவேலரானால் பேன்களின் கிரியை நம் உள்ளத்தில் வெளிப்படக் கூடாது. அப்படி மற்றவர்களுக்கு தொந்தரவாகவும், தீமை செய்வோமானால் நாம் முழுமையும் வேறுபடவில்லை. எகிப்தாக தான் இருக்கிறோம். நம் இருதயம் பார்வோனாக கடினமாக இருக்கிறது. ஆனால் தேவன் நம்மளில் விரும்புவது சுத்த இருதயம். சுத்த இருதயம் உள்ள இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார். நாம் மற்றவர்களுக்குத் தீமை செய்தால், தேவன் நமக்கு தீமை செய்வார்.   நாம் நன்மை செய்தால் நமக்கு நன்மை செய்வார். தீமை செய்கிறாரென்றால் அது தேவனுடைய விரல் என்று நாமும் நினைக்கலாம்.

தேவன் பழைய ஏற்பாட்டில் நமக்கு நம் முற்பிதாக்கள் மத்தியில் திருஷ்டாந்தப்படுத்துகிற காரியம் நம் வாழ்வில் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவாலயத்திலே ஜனங்களுக்குக் உபதேசித்துக் கொண்டிருக்கும் போது,

யோவான்: 8:3-6

அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:

போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.

இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.

அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.

இதனை நாம் வாசிக்கும்போது நாம் மற்றவர்களை குற்றம் சொன்னால் இயேசு கிறிஸ்துவின் கிரியைகளை குறித்து குற்றம் சுமத்துகிறோம்.   அப்படியானால் அவர் நம் பெயரை புழுதியில் எழுதுகிறார் என்பது தெரியவருகிறது. நம் ஆத்துமா புழுதி,  அது சர்ப்பத்திற்கு இரையாகிறது. நாம் சாத்தானின் செயலை உடையவர்களாயிருப்போம்.

யோவான்: 8:7-8

அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன் என்று சொல்லி,

அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால்  மற்றவர்களை நாம் குற்றவாளிகளாக தீர்ப்போமானால்  நாமே குற்றவாளியாகி ஆக்கினைத் தீர்ப்புக்கு உள்ளாகிறோம். நம் பெயர் புழுதியில் எழுதப்படும்.

நம் கண்ணில் உத்திரம் வைத்துவிட்டு அடுத்த கண்ணில் இருக்கிற துரும்பை பார்க்கிறோம். நம் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடவேண்டும். மேலும் தேவனுடைய விரல் குறித்து நாளை தியானிப்போம். . தேவன் நம்மேல் ஒரு வாதையும் அனுப்பாமல் இருக்கும்படியாக தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிவோம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.          

-தொடர்ச்சி நாளை.