பாரம்பரியத்தின்று வேறுபடுதல்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Aug 06, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

I கொரிந்தியர்: 5:7

ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

 பாரம்பரியத்தின்று வேறுபடுதல்:-

கர்த்தருக்குள் பிரியமானவர்களே; நாம் முந்தின நாளில் தியானித்ததான வேதப் பகுதியில் பாரம்பரிய வாழ்க்கையை மாற்றும்படியாக தேவன் மோசேயையும், ஆரோனையும் எகிப்திற்கு பார்வோனிடத்தில் அனுப்பி, பாரம்பரியத்தினின்று இஸ்ரவேலரை மீட்டு இரட்சித்து, அதனை நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி, தேவனுடைய வார்த்தையாகிய மகிமையான கிறிஸ்துவினால் நமக்கு அற்புதங்களையும், அடையாளங்களையும் காண்பித்து, அதிலும் பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை தேவன் விரும்புகிறது போல் ஆராதனைக்கு அனுப்பாமல் இருந்தது நம் வாழ்க்கையிலும் நம் இருதயம் பார்வோனுடைய ஆவியினால் கடினப்பட்டு பழையவைகளாகிய நம் பாரம்பரிய வாழ்க்கை நாம் உரிந்து களைந்து விடாமல் இருப்பதும் மேலும் தேவன் கடும் கோபத்தோடு எகிப்தில் அநேக அடையாளங்களை காட்டுகிறார். அவ்விதம் நம் வாழ்க்கையிலும் பழைய பாரம்பரியத்தை களைந்து போட்டு புதியவைகளை தரித்து (கிறிஸ்து) கொள்ளும் வரையிலும் நம் தேவன் நம்மிடத்திலும் எகிப்தில் அனுப்பிய வாதைகளை போல் நம் ஆத்துமா ஆறுதலடையாத படி செய்து, பின்பு உணர்ந்து ஒப்புக்கொடுத்து தேவன் நினைத்த காரியமாகிய மலையிலே தேவனுக்கு ஆராதனை செய்யும் படியாக கொண்டு வருகிறார். இது தான் அடையாளமாகிய மலை (கிறிஸ்துவின் சரீரமாகிய சபை) நாம் ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.

ஆனால் ஒரு இடத்தில் அல்ல, நாம் எல்லோரும் கிறிஸ்துவை தரித்துக் கொண்டவர்களானால் தேவனை நான் எங்கும் தொழுது கொள்ளும் காலம் வருகிறது என்று சொன்னது இப்பொழுதே வந்திருக்கிறது.

யோவான்: 4:20-24

எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.

அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

பிரியமானவர்களே; பழைய பாரம்பரிய கலாச்சாரம், விக்கிரகராதனை, பொய்யான மாயையை யாரும் பின்பற்றாத படி புதிய கிருபையினால் கிறிஸ்துவை ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொள்ளும்படியாக பேசுகிறதை பார்க்கிறோம். இதற்கு தான் தேவன் முற்பிதாக்களை எகிப்திற்கு அனுப்பி அங்கிருந்து தேவனுடைய வார்த்தையினால் அவர்களை மீட்டு இரட்சித்து எடுக்கிறதை தேவன் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

இதற்கு பார்வோன் தேவனுடைய ஜனத்தை விடாதபடியினால் கர்த்தர் மோசேயை நோக்கி:

யாத்திராகமம்: 7:15

காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,

எனக்கு ஆராதனை செய்ய ஜனங்களை அனுப்பிவிட வேண்டும். இதுவரையும் எபிரெயருடைய தேவன் என்னை அனுப்பியும் நீர் ஜனங்களை அனுப்பி விடவில்லை அதனால் கையில் இருக்கிற இந்த கோலால் நதியின் தண்ணீரை அடிப்பேன், அப்போது நதியின் தண்ணீர் இரத்தமாய் மாறி, நதியில் மீன்கள் செத்து நாறிப்போம். அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீர் எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள். இதனால் நான் கர்த்தர் என்பதை அறிந்து கொள்வாய் என்று சொல் என்றார்.

மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகள், வாய்க்கால்கள், குளங்கள், தண்ணீர் நிற்கும் எல்லா இடங்கள் மேலும் அவைகள் இரத்தமாகும் படி உன் கையை நீட்டு; அப்பொழுது தேசமெங்கும் மரப்பாத்திரங்களிலும்,

கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்றார்.

கர்த்தர் கட்டளையிட்டப்படியே மோசேயும், ஆரோனும் செய்தார்கள். பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவனுடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி நதியிலுள்ள தண்ணீரை அடிக்க நதியிலுள்ள தண்ணீர் இரத்தமாய் மாறிப்போயிற்று.

நதியின் மீன்கள் செத்து, நதி நாறி போயிற்று; நதியின் தண்ணீரை குடிக்க எகிப்தியருக்கு கூடாமற் போயிற்று. எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிற்று.

எகிப்தின் மந்திரவாதிகளும் அப்படியே மாய வித்தையினால் செய்தார்கள். பார்வோனின் இருதயம் கடினப்பட்டது.

யாத்திராகமம்: 7:23-25

பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.

நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.

கர்த்தர் நதியை அடித்து ஏழு நாளாயிற்று.

பிரியமானவர்களே இந்த தேவனுடைய வார்த்தைகளை நாம் மிகவும் தியானித்து கொள்ள வேண்டும். நாம் உள்ளத்திலிருந்து பளிங்கு போன்ற தெளிவான தண்ணீருள்ள நதி ஓடும் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலராகிய நாம் ஒவ்வொருவரும் பாரம்பரிய வாழ்க்கை விடாமல் இருப்போமானால் நம் உள்ளத்தில் ஓடுவது எகிப்தின் நதி தேவன் அவர் கோல் வைத்து அடிக்கும் போது அந்த தண்ணீர் எல்லாம் இரத்தமாகிறது. காரணம் நாம் தேவ ஆவியினால் தேவனுக்கு வேறுபட்டு ஆராதனை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் உள்ளத்தில் எல்லாம் பாவங்கள் நிறைந்து அது நதியாக ஓடுகிறது (சாத்தானுடைய கிரியைகள்) அப்பொழுது அந்த நதியில் மீன்கள் செத்து நாற்றமெடுக்கிறது. உண்மையாகவே நம் ஆத்துமா சாகிறது. பாவத்தின் சம்பளம் மரணம்.  ஏனென்றால் நாம் தேவ சத்தத்திற்கு கீழ்படிந்து பாரம்பரியத்தை விட்டு வராமல் இருந்தால் ஆத்துமா செத்து கிடக்கிறது. அதற்குள் ஜீவன் இல்லை, வாழ்க்கை தேவனுக்கு முன்பாக நாற்றமெடுக்கிறது. அதனால் எகிப்தியருக்கு அந்த நதியினால் பிரயோஜனம் இல்லை.

பிரியமானவர்களே இப்போது நாம் ஒன்று சிந்திப்போம். ஏன் தேவன் இவற்றை நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். யாரும் எகிப்திற்கு அடிமையாக இருக்கக் கூடாது. பாரம்பரியத்திற்கு அடிமையாக வாழ கூடாது.

இப்போது ஒவ்வொருவரும் தன் தன் ஆத்துமா எப்படி இருக்கிறது. எகிப்தின் நதியா? பளிங்கை போன்ற தெளிவான ஜீவ தண்ணீருள்ள நதி தேவனும், ஆட்டுக்குட்டியானவருமா? சுத்தமான நதியில் ஒரு போதும் மாயம் இல்லை. எகிப்தின் நதி எல்லாம் மாயம் நிறைந்து. யாவரும் சிந்தியுங்கள்.

 இப்போதும் அநேகர் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், எகிப்தின் அடிமையில் இருந்து தேவன் அவர்களை அடித்தாலும்; அவர்கள் புரிந்து கொள்ளாமல் அந்த தண்ணீர் சரியில்லை என்று தெரிந்து தற்காலிகமாக அதோடு ஒட்டி (எகிப்தோடு) ஊற்று தோண்டுவார்கள். நிச்சயம் எகிப்தின் நதியோரத்தில் ஊற்று தோண்டினால், எகிப்தின் கிரியை அந்த ஊற்றில் வரும் அது பிரயோஜனமில்லை.

பிரியமானவர்களே எல்லோருடைய வாழ்க்கையிலும் பாரம்பரியமாகிய எகிப்தின் வாழ்க்கை விட்டு வெளியே தேவன் அழைக்கிறார். வேறுபாடோடே கர்த்தரை ஆராதியுங்கள்.

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.