தேவனுக்கே மகிமையுண்டாவதாக

 சங்கீதம் 108:6

உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

பாரம்பரிய வாழ்க்கையை மாற்றுகிற நீதியின் செங்கோல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பி தன் ஜனமாகிய சபையை மீட்டு எடுக்கும் படியாக பார்வோனிடத்தில் அனுப்பும் போது நீங்கள் திரும்பி வந்து இந்த மலையிலே எனக்கு ஆராதனை செய்வீர்கள் என்று சொன்னதையும் பார்க்கிறோம். இந்த மலை என்று சொல்வது தேவன் கிறிஸ்துவை அங்கு சொல்கிறதை பார்க்கிறோம். ஆனால் மோசே முதல் தடவை பார்வோனிடத்தில் ஜனங்களை ஆராதனை செய்யும்படியாக அனுப்பி விட வேண்டும் என்று சொன்னபோது பார்வோன் கோபத்தோடு ஜனங்களை மிகவும் துன்பப்படுத்தி அடிக்கப்படுகிறார்கள் என்று தெரியவருகிறது. கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்.

கடினப்படுத்துவதின் விளக்கம் கழிந்த நாளில் தியானித்தோம்.

மீண்டும் கர்த்தர் முற்பிதாக்களிடத்தில் சொன்ன உடன்படிக்கையை நினைவு கூர்ந்து மீண்டும் மோசே, ஆரோனை பார்வோனிடத்தில் பேசும் படி சொல்ல மோசே கர்த்தரிடம் நான் விருத்தசேதனமில்லாத உதடுள்ளவன் என்று சொல்லி, இஸ்ரவேலரே  என் வார்த்தைகளை கேட்கவில்லை அப்படியானால் பார்வோன் எப்படி கேட்பான் என்று சொல்கிறான்.

யாத்திராகமம்: 7:1-4

கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.

நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்: பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.

நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.

பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.

பிரியமானவர்களே தேவன் இவ்விதம் எகிப்தை மகா தண்டனையினாலும், அவருடைய வல்லமைகளை காண்பிக்கும் படியாகவும், எல்லா ஜனங்களுக்கும் அவரை கண்டு பயப்படும் பயம் எகிப்தியருக்கும், இஸ்ரவேலருக்கும் உண்டாகும் படியாக தேவன் இவ்விதமான காரியங்களை செய்கிறார்.

மோசேயும், ஆரோனும் பார்வோனிடத்தில் பேசும்போது மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்து மூன்று வயதும் ஆகிறது.

கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதை பார்வோனுக்கு முன்பாக போடு என்பாயாக; அப்பொழுது அது சர்ப்பமாகும்.

அவ்விதமே மோசேயும், ஆரோனும் செய்தார்கள்.

அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும், சூனியக்காரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் மந்திரவித்தையினால் அப்படி செய்தார்கள்.

அவர்கள் ஒவ்வொருவனும் தன் தன் கோலை போட்டப்பொழுது அவைகள்  சர்ப்பங்களாகின ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று. 

கர்த்தர் சொல்லியிருந்த படியே பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிக்கொடாமற் போனான்.

யாத்திராகமம்: 7:14

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.

பிரியமானவர்களே நாம் தியானித்து வருகிற வேதப் பகுதியில் தேவனுடைய வார்த்தையாகிய கோல் எவ்வளவு வல்லமையுள்ளது என்பது நமக்குப் புரிய வருகிறது. எங்கு எவ்விதத்தில் நம் சத்துருக்களோடு போராட வேண்டுமோ அவ்விதம் நாம் அது எதிர்த்து நின்று யுத்தம் செய்யும் என்பதை தேவன் எகிப்திற்கும், இஸ்ரவேலருக்கும் விளக்கிக் காட்டுகிறார். அதைத்தான்,

சங்கீதம்: 23:4-6

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

என்னவென்றால் தேவனுடைய வார்த்தையாகிய இந்த கோல் (கிறிஸ்து) அவர் எவ்வளவு வல்லமையுண்டு என்றும் அவர் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும் 

சத்துருக்களோடு யுத்தம் பண்ணி நம் ஆத்துமாவை (இஸ்ரவேல் சபை ) மீண்டெடுத்து கிருபையால் நிறைத்து கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருக்க செய்வார் என்பது நிச்சயமாக நமக்கு புரிந்து வரவேண்டும். அதை தான்,

சங்கீதம்: 110:1-4

கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.

உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.

என்னவென்றால் நம் இருதயம் எகிப்தாக இருக்குமானால், அந்த எகிப்தாகிய அந்த நிலத்தில் தேவனுடைய வார்த்தை கடந்து போகும் போது வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நடுவில் அது சர்ப்பத்தின் கிரியைகளை நடப்பிக்கும். ஆனால் அதனை

(வார்த்தையை) நாம் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டு விசுவாசித்து கர்த்தரை முகங்குனிந்து நம்மை தாழ்த்தி தேவனை பணிந்து கொள்வோமானால் இருதயத்தில் வந்த தேவனுடைய வார்த்தையானது நம் இருதயத்தில் பிறப்பித்த சர்ப்பத்தின் கிரியைகளை விழுங்கிப் போடுகிறது. அது மட்டுமில்லாமல் சாஸ்திரிகள் என்றால் குறிசொல்லுதல், நாள் பார்ப்பது மற்றும் சாஸ்திரம் பார்ப்பது, தேவனுக்கு இரண்டகம் பண்ணுதல், பில்லி சூனியம் (மந்திரவாதம்) என்ற தேவ வசனத்தில் எழுதப்பட்டுள்ளது. இவ்வித காரியங்கள் செய்கிறவர்கள் இருதயம் வலுசர்ப்பத்தின் கிரியைகள் (அக்கிரம செயல்கள்) உண்டாயிருக்கும். இவற்றை தான் தேவன் எகிப்தில் செய்து காட்டுகிறார். ஆனாலும் பார்வோன் ஜனங்களை ஆராதனைக்கு விடவில்லை.

நாம் ஒன்று நினைக்க வேண்டும் அநேக மக்கள் எத்தனை தேவ செயல்களை கண்டாலும் தேவனுடைய வார்த்தைகளை கேட்டால் பாரம்பரிய வாழ்க்கையை விடமாட்டார்கள். இந்த பாரம்பரிய வாழ்க்கையை நம்மை விட்டு அழித்து தேவன் நம்மிடத்தில் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே தேவன் நமக்கு திருஷ்டாந்தபடுத்தி ஆத்தும மீட்பை பெற்று கொள்ள கிருபை செய்கிறார்.

எபிரெயர்: 1:8,9

குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; பாராம்பரிய வாழ்க்கையை மாற்றும் படியாக

எபிரெயர்: 1:10-12

கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;

அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;

ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

பிரியமானவர்களே; எகிப்தின் விடுதலை என்றால் நம் பாவ பாரம்பரிய வாழ்க்கை, தேவனுடைய வார்த்தைகளை நாம் ஏற்றுக் கொள்ளும் போது கிறிஸ்து ஆளுகை செய்து, சத்துருவாகிய பாரம்பரியத்தை ஒரு சால்வை போல் சுருட்டி கிறிஸ்து என்றென்றைக்கும் மாறாதவாரக அவருடைய ஆண்டுகள் முடிந்து போகாதபடி நம்மளில் என்றென்றெக்கும் அவர் நிலைத்திருப்பார். அது தான் உம்முடைய யௌவான ஜனம் உமக்குப் பிறக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனை வாசிக்கிற தேவனுடைய பிள்ளைகளே நாம் நம் ஆத்துமா பாரம்பரிய பார்வோனுடைய அடிமையிலிருந்து விடுதலையாகி அத்தனை பாரம்பரியமும் சுருட்டி மாற்றிவிட கர்த்தருடைய கையில் ஒப்புக்கொடுத்து என்றென்றும் மாறாத சுதந்திரமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்தை நாம் பெற்றுக்கொள்வோம். தாழ்மைப்படுவோம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.    

-தொடர்ச்சி நாளை.