தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம் 136:24 

நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

எகிப்தின் அடிமையினின்று நம்மை மீண்டெடுக்கும் திருஷ்டாந்தத்தோடு:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் இஸ்ரவேல் சபை எகிப்தியரால் துன்பப்படுத்தப்பட்டு அடிக்கப்படுகிறதும், தேவன் அவர்களை மிகுந்த உபத்திரவத்திற்கு ஒப்புக் கொடுக்கிறதையும், தேவன் பார்வோனுடைய இருதயத்தை கடினப்படுத்துவதும் தன் தாசனாகிய, மோசேயையும் ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பியும் அவர்கள் தேவன் சொன்ன வார்த்தைகளை சொல்லியும், அந்த வார்த்தைகளுக்கு செவிக் கொடாமல், இஸ்ரவேலரை மிகவும் அதிகமாக நெருக்குகிறதையும் ஆராதனை செய்யும்படி போக விட வேண்டும் என்ற காரணத்தோடு மிகவும் அதிகமாக நெருக்கபடுவதையும் நாம் தியானித்தோம். இவையெல்லாம் தேவன் நம் உள்ளத்தில் இருக்கிற செயலுக்காக தேவன் முன் காட்டித் திருஷ்டாந்தத்தோடு விளக்கிக் காட்டுகிறதை பார்க்கிறோம்.

அதனால் பிரியமானவர்களே கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமானால் மிகவும் உபத்திரவத்தின் மத்தியில் மீட்கப்பட்டால் அவரோடு வாழ முடியும் என்பதை நாம் எல்லோரும் மிகவும் அறிந்து கொள்ளவேண்டும்.

மோசே, ஆரோன் பார்வோனிடத்தில் போய், நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும் படி போகவிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

என்னவென்றால் தேவன் இஸ்ரவேலரை ஆராதனை செய்யும் படியாக வரச் சொன்ன வனாந்தரம் மூன்றுநாள் பிரயாணம் ஆக இருந்தது .ஆனால் இஸ்ரவேல் சபை நாற்பது வருடமாக நடந்தார்கள். மூன்று நாளில் காண வேண்டிய இடத்தை நாற்பது வருடமாக அநேக ஜாதிகளின் தேசத்தை சுற்றி நடந்து வந்தார்கள் என்று தெரிய வருகிறது. இந்த நாற்பது வருடமும் அதிகமாக தேவனை முறுமுறுத்தார்கள். மேலும் அவர்கள் வாழ்க்கையில் மூன்று பெரிய சோதனையை கடக்க வேண்டியதாயிருந்தது முதல் சிவந்த சமுத்திரம், யோர்தான் நதி, எரிகோ மதில் நாம் ஒன்று சிந்திக்கவேண்டும்,கர்த்தர் இஸ்ரவேல் சபையிடம்,

யாத்திராகமம்: 3:12

அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

பிரியமானவர்களே இந்த மலை என்றால், மூன்று நாள் தான் பிரயாணம் உண்டு, அது வனாந்தரமான இடம், ஆனால் இஸ்ரவேலர் நடந்தது காரணம் சொந்த தேசமாகிய கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் அவர்கள் வாழ்க்கையில் வரும் பிரதிகூலங்கள், கஷ்டங்கள், வறுமை, துன்பம், கண்ணீர் இவையெல்லாவற்றையும் எப்படி சகிக்கிறார்கள் எவ்வளவு தூரம் தங்கள் வாழ்க்கையை தேவனுக்கென்று அர்ப்பணிக்கிறார்கள் என்றெல்லாம் நம்முடைய தேவன் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி பார்த்து, அவர்களை நீதியால் நியாயந்தீர்த்து அந்த இடத்தை வந்து அடையும்படி செய்கிறார். நாம் எப்படியெல்லாம் நமக்கு வரும் துன்பங்கள், கஷ்டங்கள், வறுமை, இவையெல்லாம் சகித்து எல்லாவற்றிலேயும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்  செலுத்தி நாம் அந்த மலையை சுதந்தரிக்க வேண்டும். நமக்காக தேவன் இஸ்ரவேலரை திருஷ்டாந்தப்படுத்திக் காட்டுகிறார். அந்த மலை தான் கிறிஸ்து அந்த ராஜ்யத்தை சுதந்தரிக்க மூன்று நாள் போதும் ஆனால் நம் பாதை நெருக்கமும் வழி சஞ்சலமுமாயிருக்கிறது, காரணமென்றால் நம் உள்ளத்தில் இருக்கிற அநேக ஜாதிகளின் கிரியைகளினால் தேவன் ஒவ்வொன்றாக மாற்றி அந்த ராஜ்யம் (கிறிஸ்துவின்) சொந்தமாக்க முடியும். ஒவ்வொன்றாக மாற்றுவது எப்படியென்றால் நாம் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால் அவருடைய கற்பனைகள், கட்டளைகள், பிரமாணங்கள் ஏற்றுக்கொள்ளும்போது; தேவனுடைய ஆவியினாலே புற ஜாதிகளின் கிரியைகளை அகற்றி நம் உள்ளம் சுத்தப்படுத்துகிறார்.

நம்முடைய தேவன் எப்படி நம்மை சுத்தப்படுத்துகிறாரென்றால்,

வெளிப்படுத்தல்: 11:15

ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

இவ்வித காரியங்கள் நம் உள்ளத்தில் நடைபெறாதபடி தடைபண்ணுகிற கிரியைகளை அழிக்கும் படியாக தேவன் பழைய ஏற்பாட்டின் பகுதியில் திருஷ்டாந்தபடுத்துவது,

யாத்திராகமம்: 6:1-4

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்தி விடுவான் என்றார்.

மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.

அதனால் எகிப்தியர் அடிமைக்கொள்ளுகிற இஸ்ரவேலரின்  பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.

ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,

உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்திய சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.

ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவி கொடாமற் போனார்கள்.

பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.                   

மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகள் உள்ளவன் என்றான்.

கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.

பிரியமானவர்களே கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து மீட்டெடுப்பது நம் ஆத்துமா பாவ மன்னிப்பாகிய மீட்பை பெற்று ,கிறிஸ்துவை தரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பழைய ஏற்பாட்டை நமக்கு திருஷ்டாந்தபடுத்தியிருக்கிறார். ஆனால், பார்வோன் ஜனங்களை போக விடவில்லை .எத்தனை தரமோ தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டும் அவன் இருதயம் கடினபடுகிறது என்னவென்றால் தேவன் அவருடைய வார்த்தையாகிய கிறிஸ்துவை நம்மளில் அனுப்பும் போது பார்வோனுடைய உள்ளமாகிய நம் உலக பழக்க வழக்கங்கள், பாரம்பரிய வாழ்க்கைகள் இவையெல்லாம் சத்துரு, நம் உள்ளத்தை மூடிக் கொண்டிருப்பதால் நம் ஆத்துமா இரட்சிக்கமாட்டாதபடி தடை பண்ணும் ,நமக்கு அதிக துன்பம் தரும். அதனால் இஸ்ரவேலரை போல தேவனுடைய வார்த்தைகளை கேளாதபடி மனமடிவாக, நமக்கு வரும் கஷ்டங்களினால், தேவனை மறுதலிப்போம்.

ஆனால், அப்படியல்ல பிரியமானவர்களே; அதிகமான நெருக்கங்கள் நம் வாழ்க்கையில் வருகிறது என்றால் தேவன் நம்மை நேசித்து, சிட்சித்து ஒரு புதிய பாதை காட்டும்படியாக தெரிந்து எடுக்கிறார் என்று நினைத்து அவர் பாதத்தில் விழுந்துக் கொடுப்போமானால் கர்த்தர் நம்மை அனுதினம் இரட்சித்து வழிநடத்துவார். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.                       

-தொடர்ச்சி நாளை.