தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம் 136:23 

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

இஸ்ரவேலர் அடிக்கப்படுதல்:- இயேசுவின் இரத்தம் மீட்கும்:

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் எகிப்திற்கு அனுப்புகிறதையும் அவர்கள் இஸ்ரவேலரிடத்தில் சொன்ன தேவனுடைய வார்த்தைகளை கேட்ட பொழுது தேவனை விசுவாசித்து ,கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டார்கள் என்பதை பற்றியும் கழிந்த நாட்களில் தியானித்தோம். மேலும் விசுவாசித்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவர்கள் ஆத்துமா எவ்விதம் பிழைக்கும்  என்பதை குறித்து தியானித்தோம்.

யாத்திராகமம்: 5:1-5

பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.

அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்.

அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் எங்கள் மேல் பட்டயமும், கொள்ளை நோயும் வரப்பண்ணுவார் என்றார்கள்.

எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளைவிட்டுக் கலையப் பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள் என்றான்.

பின்னும் பார்வோன்: இதோ, தேசத்தில் ஜனங்கள் மிகுதியாய் இருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதை விட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே என்றான்.                   

அந்நேரத்தில் பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி: செங்கல் வேலைக்கு நீங்கள் முன் போல் இனி இவர்களுக்கு வைக்கோல் கொடுக்க வேண்டாம்; அவர்கள் தாங்களே போய் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்.

ஆனால் முன் சொன்னபடியே செங்கல் செய்ய சொல்லுங்கள். அதில் ஒன்று குறைக்க வேண்டாம் அவர்கள் சோம்பலாயிருக்கிறார்கள். அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்கு பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்.

அந்த மனிதர்கள் இஸ்ரவேலர்மேல்  முன்னிலும் அதிக வேலையை சுமத்துகிறார்கள். வைக்கோலும் கொடுக்கவில்லை. ஆனால் முந்தின நாட்களில்  செய்தது போல் வேலையும்  செய்ய வேண்டும் என்று நிர்பந்தபடுத்துகிறார்கள்.

அதனால் இஸ்ரவேலர் தாளடிகளை சேர்ப்பதற்காக அங்குமிங்கும் சிதறி போகிறார்கள். ஆனால் தினமும் செய்கிற வேலை செய்ய அவர்களால் முடியவில்லை. அதனை எகிப்தின் அதிகாரிகள் கண்டு அதிகமாக அடிக்கிறார்கள்.

யாத்திராகமம்: 5:15,16

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு: உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?

உமது அடியாருக்கு வைக்கோல் கொடாதிருந்தும், செங்கல் அறுத்துத் தீரவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றமிருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள்.

இவ்விதமாக இஸ்ரவேலின் தலைவர் பார்வோனிடத்தில் பேச, பார்வோன் நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள். அதனால் கர்த்தருக்கு பலியிட வேண்டும் என்கிறீர்கள். அதனால் நீங்கள் அறுத்து தீர வேண்டிய செங்கலில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்ல இஸ்ரவேலரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.

பின்பு பார்வோன் சமூகத்தில் இருந்து திரும்பி வரும் போது மோசேயும், ஆரோனையும் வழியில் இஸ்ரவேலர் கண்டு நீங்கள் பார்வோனின் கண்களுக்கும் அவனுடைய ஊழியக்காரர் கண்களுக்கும் முன்பாக எங்கள் வாசனைகளையும் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையில் பட்டயத்தை கொடுத்ததினிமித்தம் ,கர்த்தர் உங்களை பார்த்து நியாயதீர்க்கக்கடவர் என்றார்கள்.

மோசே கர்த்தரிடம் திரும்பிப்போய் இந்த ஜனங்களுக்கு தீங்குவரபண்ணினது என்ன ?

யாத்திராகமம் 5:23

நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்

பிரியமானவர்களை இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது ,கர்த்தர் மோசேயிடம் ஏற்கனவே சொல்லியிருந்தார்; பார்வோன் ஜனங்களை போக விட மாட்டான், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன் என்றார். இதனை நாம் பார்க்கும் போது பார்வோனிடத்தில் கர்த்தருக்கு ஆராதனைச் செய்ய ஜனங்களைப் போகவிட வேண்டுமென்று மோசே, ஆரோன் சொல்லும் போது பார்வோனுடைய இருதயம் கடினப்படுகிறது. அதனால் இஸ்ரவேலருக்கு மிகவும் துக்கமாகிவிட்டது. எகிப்தியர்களால் அடிக்கப்படுகிறார்கள், என்னவென்றால் இது தேவனுடைய கோல் என்பது புரிகிறது. கர்த்தர் பார்வோன் மூலம் இஸ்ரவேலரை நெருக்குகிறார் என்பது தெரிய வருகிறது. ஏனென்றால் கர்த்தர் தான் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்.

ஏனென்றால் பார்வோனுடைய அடிமையிலிருந்து மீட்கப்பட்டவர்கள் திரும்பி எகிப்திற்கு செல்லக்கூடாது என்று தான் தேவசித்தமாயிருக்கிறது. இவை எதற்கென்றால் நாம் தேவனுடைய வார்த்தை கேட்கும் போது மனந்திரும்ப வேண்டுமென்று நமக்குள் ஒரு எண்ணம் இருந்தாலும், பாவங்களை விட்டோய்ந்து வர வேண்டுமென்று தோன்றினாலும்: நம் உள்ளத்தில் பாவத்தின் அடி ஆழம் மறைந்திருப்பதால், உலக ஆசைகளை விட முடியாத நிலையில் நம் உள்ளத்தில் இருக்கிற சத்துரு நம்மை தேவ சமூகத்தில் ஆராதனைக்கு விடாதபடி நம்மை பின்னோட்டே இழுக்கும்.

பிரியமானவர்களே இது நம் எல்லாருடைய வாழ்க்கையிலும் நடக்கிற காரியம் ஆனால் தேவன் நினைத்ததை நடத்துகிறவர். அவர் நினைத்தது நடத்தும் வரையிலும் அவருடைய உக்கிர கோபம் தணியாது.

தேவனுடைய கிரியைகள் நம் உள்ளத்தில் இந்த கடைசி நாளில் (குமாரனுடைய நாட்களில்) நடக்கும் என்பதை தேவன் திருஷ்டாந்தப்படுத்தி தீர்க்கதரிசிகள் மூலம் பேசியும், நடத்தியும் வந்தார் மற்றும் எகிப்தையும்,எகிப்திய ஜனங்களையும் பார்வோனையும் அழித்துவிட வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம் அப்படியானால் மட்டுமே இஸ்ரவேலர் உள்ளத்தில் பாடல் சத்தம் தொனிக்கும். இஸ்ரவேல் சபை மீட்பின் தொனியோடு எகிப்தை விட்டு வெளியே வருவார்கள்.

அதனால் தான் இஸ்ரவேல் சபை நெருக்கப்படுகிறது .தேவன் சொன்ன உபத்திரவம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த உபத்திரவங்கள் எல்லாவற்றிற்காகவும் இயேசு கிறிஸ்து அடிக்கப்படுகிறார். இயேசுவின் இரத்தம் நம் ஒவ்வொருவரையும் (எகிப்திலிருந்து) விடுதலையாக்குகிறது.

அன்பானவர்களே தேவ வசனம் தியானிக்கும் போது எல்லோரும் நம்மை ஒப்புக் கொடுப்போம். மேலும் இயேசுவின் இரத்தம் நமக்கு இருக்கும் சகல உபத்திரவத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கும். நாம் புது  பலன் அடைவோம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.