தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம் 90:14 

நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

தேவனுடைய அழைப்பு:- அநித்தியமான பாவ சந்தோஷங்களை விட்டு விடுதல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்து வந்த வேதப்பகுதியில் தேவன் நம் உதட்டை தொட்டு, நம் நாவோடும்,வாயேடும் இருக்கிறார் என்பதையும் வாய்க்கு வாயாகவும், நாவுக்கு நாவாகவும் மோசேயோடும் இருந்தார் என்பதை குறித்ததான வேத வசனத்தை தியானித்துக் கொண்டு இருக்கிறோம்.

கர்த்தர் மோசேயோடே, ஆரோனையும் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து இரட்சித்து எடுக்கும் படியாக அனுப்புகிறதை பார்க்கிறோம். ஆனாலும் மோசேயிடம்,

யாத்திராகமம் 4:17

இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.

தேவனுடைய வாயையும், நாவையும் பெற்றவர்களை தேவன் தம்முடைய வேலைக்கு முக்கியப்படுத்துகிறார்.

மேலும் மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்தில் வந்து, நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்திற்கு திரும்பிப் போய் அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கும்படி புறப்பட்டு போக உத்தரவு வேண்டும் என்று கேட்க, மாமனாகிய எத்திரோ சுகமாய் போய் வாரும் என்று அனுமதி கொடுக்கிறான்.

அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு எகிப்துக்கு திரும்பினான். தேவனுடைய கோலையும் தன் கையிலே பிடித்து கொண்டான்.

பிரியமானவர்களே இனிதான் நம் ஆத்துமா (இஸ்ரவேல்) எகிப்தாகிய பாவத்திலிருந்து மீட்டு எடுக்கும் படியாக தேவன் மோசேயை கொண்டு திருஷ்டாந்தப்படுத்துகிற அற்புதங்கள் தொடங்குகிறது.  

மோசேயின் கையில் வைத்திருக்கிற கோல் (கிறிஸ்து) தேவனுடைய வார்த்தை.

தேவன் மோசேயோடே சொல்கிறார். நீ எகிப்துக்கு திரும்பி போய் நான் உன் கையிலே அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாக செய்யும் படி எச்சரிக்கையாயிரு ;ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்,அவன் ஜனத்தை போக விடான்.

தேவன் தான் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறார். அவன் ஜனத்தை போக விடான் என்று சொல்கிறார் ஆனால் ஏன்? அவர் மோசேயை, அற்புதங்கள் பார்வோனுக்கு முன்பாக செய்யும் படி அனுப்புகிறார். இதற்கு காரணம் என்ன என்று அநேகருடைய உள்ளத்திலே கேள்விகள் எழும்பும் என்பது நிச்சயம்.

அதற்கு காரணம் என்ன என்றால் பார்வோன் ஒரு தேசத்தின் ராஜாவாக சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான். தேவன் அவன் இருதயத்தை கடினபடுத்துகிறாரென்றால் பார்வோன் மட்டும் இஸ்ரவேல் ஜனங்களை விட்டால் போதாது, பின் தலைமுறைகள் அதற்குப் பிறகு அவகாசமெடுக்கும். மேலும் எகிப்திய சேனையையும், பார்வோனுடைய குடும்பம் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அதனால் தேவன் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார். இது எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்றால் நம் உள்ளமாகிய உலகம், மாமிசம் முழுமையும் பாவத்தின் அடிமையிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்ட தேவன் இவ்விதம் மோசேயை வைத்து நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி அதற்கு பின் கிறிஸ்துவை நமக்காக உலகத்தில் அனுப்பி, எல்லா மாம்சமும் கிழிக்கப்பட்டு நம்முடைய பாவத்துக்காக, அக்கிரமத்துக்காக அவர் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழும்புகிறாரென்றால் நம் ஆத்தும மீட்பு இவ்விதமாகவே எல்லா பாவ மோக இச்சைகளுக்கும்  நாம் மரித்து நம் ஆத்துமா தேவனுடைய வார்த்தையாகிய மகிமையாகிய கிறிஸ்துவுடனே கூட எழும்பும் படியாக, சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் கிருபையுள்ளவராக காணப்படுகிறார்.

இதனை நமக்கு தேவன் இஸ்ரவேலருடைய மீட்பை  வைத்து திருஷ்டாந்தப்படுத்தி,  பார்வோனுடைய அத்தனை சேனையும் சிவந்த சமுத்திரத்தில் (பாவகடல்) மூழ்கி இஸ்ரவேலர் மாத்திரம் கால் நனையாமல் வெட்டாந்தரையாய் அக்கரை வந்து சேர்கிறார்கள். அன்றைக்கு அவர்களோடே கூட ஞான கன்மலையாகிய கிறிஸ்து முன் செல்கிறார் என்பது நமக்கு நன்றாக தெரிய வருகிறது.                                                                                                                                             அது தான் நாம் தேவனுடைய வார்த்தையை கேட்டாலும் நம் இருதயம் வழுவிப் போய் கொண்டிருக்கும்,  கீழ்ப்படியாமல் இருக்கும்,  காரணம் நம் இருதயத்தை தேவன் கடினப்படுத்துகிறார்.                                                                                       பிரியமானவர்களே இதனை வாசிக்கிற தேவ ஜனமே யாருடைய இருதயம் தேவனுக்கு கீழ்ப்படியாதபடி விலகிக் கொண்டிருக்கிறதோ மிகவும் எச்சரிப்போடு காணப்பட வேண்டும். பின்பு கர்த்தர் அதிக நெருக்கத்தை போட்டு நம் உள்ளத்தை உடைத்து ஒன்று விடாதபடி அவர் தம்முடைய கிரியைகளை நிறைவேற்றுவார்.

ஆதலால் பிரியமானவர்களே நாம் இப்போது தீர்மானத்தோடு ஒப்புக்கொடுப்போம். என்றைக்கு ஆனாலும் கர்த்தர் அவர் நினைத்ததை நடப்பிக்கிறவர் என்பதை மறந்து போகாதீர்கள். அவரை யாரும் ஏமாற்றி விடலாம் என்று நினைக்காதீர்கள்.

யாத்திராகமம் 4:22-24

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.

எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்ட புத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.

வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார்.

கர்த்தர் மோசேயை தங்கும் இடத்தில் கொல்லப்பார்க்கிறார்,  காரணம் கர்த்தர் நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன் என்று மோசேயோடே சொன்னார். ஆனால் மோசே வழியில் தங்கியிருந்ததாக தேவ வசனம் சொல்லப்படுகிறது. அதனால் தங்கின இடத்தில் கர்த்தர் அவனை கொல்ல பார்க்கிறார்.

யாத்திராகமம் 4:25-26

அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.

பின்பு அவர் அவனை விட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்த சேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டுவது என்னவென்றால் கர்த்தர் அவருடைய வேலைக்காக மோசேயை அழைக்கிறார். மோசே முதலில் மறுத்தாலும் பின்பு அவன் கீழ்படிகிறான்.                                                                                   

ஆனால் தேவன் அவனிடத்தில் பார்வோனிடத்தில் போய் செய்ய வேண்டிய காரியங்களையும் சொல்கிறார். ஆனால் அவனை கொல்ல பார்க்கிறார் அதற்கு காரணம் என்ன? யார் நம் வாழ்க்கையில் என்ன அக்கிரமம் செய்தாலும் தேவ பாதத்தில் அறிக்கை செய்து ஒப்புரவாகாமல் தேவனோடு ஐக்கியபட முடியாது என்பதை தேவன் நமக்கு தெளிவாக திருஷ்டாந்தபடுத்துகிறார்.

எப்படியெனில் மோசே, பார்வோனின் அரண்மனையை விட்டு வரும்போது அவன் சொல்கிறான்.

எபிரெயர் 11:25-26

அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,+

இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தயை அதிக பாக்கியமென்று எண்ணினான்.

இவ்விதமாக சொன்ன மோசேக்கு மீதியான் தேசத்து ஆசாரியனுடைய குமாரத்தியை அவனுக்கு கொடுக்கிறான். அவன் ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான். பெயரிடும் போது அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி பெயரிடுகிறான்.

ஆனால் அவனை கொல்ல கர்த்தர் பார்த்த போது சிப்போராள் மகனுடைய நுனித்தோலை அறுத்து அந்த இரத்தத்தை மோசேயினுடைய கால்களுக்கு முன்பாக எறிந்து இரத்த சம்பந்தமான புருஷன் என்று சொல்லும் போது கர்த்தர் அவனை விட்டுப் போகிறார்.

இதற்கு காரணம் அநித்தியமான, பாவ சந்தோஷங்கள் எல்லாம் தேவனுடைய ஐக்கியத்தில் இருக்கக்கூடாது என்றும், நித்திய வாழ்க்கை வேண்டுமென்றவர்கள் அநித்திய பாவ சந்தோஷங்களை விட வேண்டும் என்றும், நமக்கு மோசேயை வைத்து திருஷ்டாந்தபடுத்துகிறார். அந்நிய தேசமாக அல்ல, சொந்த தேசமாகிய கானானில் நாம் பிரவேசிக்க வேண்டும் என்று திருஷ்டாந்தப்படுத்தி மோசேயின் மனைவி சிப்போராள் கெர்சோமுடைய நுனித் தோல் அறுத்து விருத்தசேதனம் செய்கிறாள். அப்படி தன் குடும்பத்தை தேவனுக்குள் காத்துக் கொள்கிறாள்.இவ்விதமாக நாமும் நம் குடும்பத்தை தேவனுக்குள் காத்துக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.

இவ்விதமாக நாமும் நம் குடும்பமும் (சபையும்)

பிலிப்பியர்: 3:3

ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

இவ்விதம் நம் குறைகளை அறிக்கைப்பண்ணி நம்மை தேவனுக்காக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம். 

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.                                         

-தொடர்ச்சி நாளை.