தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எசேக்கியேல்: 3:27

நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

புதிய நாவு பெற்றுக் கொண்டால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நம் நாவையும், வாயையும், உதடும் தேவன் சுத்திகரிக்க வேண்டும். என்பதின் சில கருத்துக்களை தியானித்தோம். நம் ஆத்துமாவில் விடுதலை வர வேண்டுமானால் இந்த மூன்று காரியமும் நம் வாழ்க்கையில் தேவனால் சுத்திகரிக்கப்பட்ட வேண்டும். என்னவென்றால் வாய், நாவு, உதடு இந்த மூன்றும் ஒன்றாயிருக்கிறது எப்படியெனில் ஆவி, ஆத்துமா, சரீரம் என்றும் ஒன்றாயிருக்கிறது போல் வாய், நாக்கு, உதடு இந்த மூன்றும் ஒன்றாயிருக்கிறது. தேவன் நம் உதட்டை தொடுகிறாரென்றால் இந்த மூன்றும் சுத்திகரிக்கப்படும். இந்த மூன்றும் சுத்திகரிக்கப்படும் போது நாம் தேவனை துதிக்கும் தொனி தூய்மையுள்ளதாயிருக்கும். அப்படியிருந்தால் உள்ளான மனுஷனுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் சுத்தமாயிருக்கும். தேவனுடைய அக்கினி நம் உள்ளான மனுஷனுக்குள் இருக்கிற கறைகளை தேவனுடைய வார்த்தையாகிய அக்கினியால் சுட்டெரித்து ஆவி, ஆத்துமா, சரீரம் சுத்திகரிக்கப்படுகிறது. அதை தான் ஆரோக்கியமான நாவு ஜீவ விருட்சம் என்றும், மாறுபாடான நாவு ஆவியை நொறுக்கும் என்றும் தேவ வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் ஆவி, ஆத்துமா, சரீரம் ஒன்றாயிருப்பது போல பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஒன்றாயிருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தையானது பிதாவாகவும் வார்த்தையினால் உண்டான மகிமையானது குமாரனாகவும், குமாரனில் ஆவியானவர் வெளிப்படுகிறவராகவும் காணப்படுகிறார்கள். இவ்வித கிரியைகள் நம் உள்ளத்தில் முழுமையாக வெளிப்பட்டாலே நம் ஆத்மாவிற்கு விடுதலை கிடைக்கும் அதன் பிறகு தான் நாம் தேவனுடைய சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் இருதயம் நமக்கு கிடைக்கும். அதை தான்,

யோவான்: 14:20-23

நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.

என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

பிரியமானவர்களே அவை தான் தேவன் நமக்கு வாயாக, நாவாக, உதடாக விளங்குகிறார். உதட்டில் தேவனுடைய வார்த்தையாகிய அக்கினி தழலை தேவன் வைக்கும் போது அந்த உதடு சுத்திகரிக்கப்பட்டு புதிய நாவாக நம்மளில் விளங்குகிறது (கிறிஸ்து). நாவால் தேவன் மகிமைபடுகிறார் அதைத்தான், 

பிலிப்பியர்: 2:11-12

பிதாவாகிய  தேவனுக்கு  மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

ஆதலால், எனக்குப் பியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

இந்த இரட்சிப்பை தேவன் நமக்கு தரும்படியாகவே மோசேயை, ஆரோனை எகிப்திற்கு, இஸ்ரவேலரை பார்வோனிடத்திலிருந்து மீட்டு எடுக்கும் படியாகவே அனுப்பி நமக்கு திருஷ்டாந்தப்படுத்திக் காட்டுகிறார். ஆனால் ஆரோனை தேவன் தெரிந்து கொண்டாலும், மோசேயின் கையில் இருந்த கோலுக்கும், மோசேயின் வாய்க்கும் தான் பிரதானம் கொடுக்கிறார்.

நம் இரட்சிப்பு நிறைவேற வேண்டுமானால் தேவன் நமக்குப் புதிய நாவை தந்தருள வேண்டும். நமக்கு புதிய நாவை தரும்படியாகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து அநேக பேருக்கு தரிசனமாகி விட்டு, பின்பு பெந்தேகொஸ்தே நாளில்  ஏறக்குறைய நூற்றிருபது பேர் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

அப்போஸ்தலர் 2:3,4

அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

இதிலிருந்து நமக்கு தெரிய வருவது தேவன் மோசேயிடம் உன் வாயாகவும், உன் நாவாகவும் இருப்பேன் என்றார். மேலும் இந்த கோலையும், உன் கையிலே பிடித்துக் கொண்டு போ, இதனால் நீ அடையாளங்களை செய்வாய் என்றார். இவை கிறிஸ்துவின் வாயையும், நாவையும், உதட்டையும் தேவன் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.

பரிசுத்த ஆவியானவர் இறங்கி நாம் வெவ்வேறு பாஷைகளிலே பேசினால் தான் நாம் தேவனோடு பேசுகிறோம். இது தான் நாம் தேவனிடத்தில் பேசுகிறதற்கு அடையாளம். நாம் யாவரும் தேவனோடு பேசுகிறவர்களாக இருந்தால் மட்டுமே சாத்தானிடத்தில் நாம் வெற்றி எடுக்க முடியும். மேலும்,

I கொரிந்தியர்: 14:1-2

அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.

ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

இதனால் நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். மோசே புதிய நாவை பெற்றிருந்தான். அதனால் தான் அவன் தேவனிடத்தில் பேசுகிறான். அவ்விதம் தேவனும், மோசேயும்  ஒருவருக்கொருவர் முகமுகமாய் பேசுகிறார்கள். இது தான் அவன் கையில் வைத்திருந்த கோல் இதற்கு அடையாளம் அவர் தான் கிறிஸ்து.

இப்படி நம் வாழ்க்கையில் புது மாற்றம் நமக்கு வந்தாலே புதுவாழ்வு மலரும் புதிய கிருபை நமக்கு கிடைக்கும். தேவ பிரசன்னம் நம்மை நிறைக்கும். நம் நாவில் உண்மையாய் ஸ்தோத்திரம் ஸ்துதி விளங்கும். அப்போது எரிகோ மதில் உடையும். பழைய நம் வாழ்க்கை மாறிப் போகும். புது ஆசீர்வாதங்களால் நாம் நிரப்பப்படுவோம். நாம் பேசும் போது நாம் அல்ல நம்மளில் இருக்கிறவர் பேசுவார். இவ்விதம் மாறும்படியாக நாம் யாவரும் ஒப்புக் கொடுப்போம்.  ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.      

-தொடர்ச்சி நாளை