வாய் நாவு சுத்திகரித்தல்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jul 26, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம் 51:15 

ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

வாய் நாவு சுத்திகரித்தல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத வசனங்களை பார்க்கும் போது, தேவன் நமது வாயையும், நாவையும்  ஆசீர்வதித்தாலொழிய நாம் எகிப்தின் சிறையிலிருந்து விடுதலை ஆக முடியாது என்பதை தேவன் நமக்கு மோசே மூலம் தெளிவாக திருஷ்டாந்தப்படுத்திக் காட்டுகிறதை நாம் பார்க்கிறோம். மோசே நான் திக்கு வாயும், மந்த நாவும் என்று தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கிறான். அதனால் தேவன் அவனுடைய வாய்க்கு வாயாகவும், நாவுக்கு நாவாகவும் இருக்கிறார். ஆனால் ஆரோனோ பேச்சில் ஏற்கனவே திறமையிருந்ததினால் அவன் தன்னுடைய நாவையும், வாயையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. அதனால் அவன் சீக்கிரத்தில் மாண்டு போகிறதை பார்க்கிறோம். இஸ்ரவேல் சபை பாவஞ் செய்வதற்கு காரணமாய் இருந்தான். அதனால் தேவன் ஆரோனிடத்தில் மிகவும் கோபமுடையவராகி விட்டார். அதனால்,

எண்ணாகமம் 20:23-26

ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.

நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி,

ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.

இவ்விதமாக கர்த்தர் சொன்னது போல் ஆரோன் ஓர் என்னும் மலையில் வைத்து மரிக்கிறான். மோசே அவன் உடுத்தியிருந்த வஸ்திரங்களைக் கழற்றி அவன் மகனாகிய எலெயாசாருக்கு உடுத்துகிறான். 

பிரியமானவர்களே கர்த்தர் மோசே, ஆரோன் என்பவர்களை வைத்து நம் வாழ்க்கையில் ஆத்மீக வாழ்வுக்குத் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் தேவனால் அனுப்பப்படுகிற வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு நாம் கீழ்ப்படியாமற்போனால் நம் ஆத்துமா மரித்து, நம் முன்னோர்கள் மரித்துக்கிடக்கிற அந்த இடத்திலே சேர்க்கப்படும். ஆனால் தேவன் எதற்கு திருஷ்டாந்தபடுத்துகிறார் என்றால் நம்  புற சரீரம் உயிரோடிருக்கும் அக சரீரம் மரித்திருக்கும் ஆனால் தேவ குமாரனுடைய சத்தத்தை கேட்போமானால் நாம் பிழைத்து இருப்போம்.

மேலும் நம் நாவானது ஆரோக்கியமான நாவாக இருக்க வேண்டும். நாம் நம்முடைய வாய், நாவு, உதடு தேவனுடைய சமூகத்தில் ஒப்படைக்க வேண்டும். நாவு மிகவும் நமக்கு கேடு உண்டாக்கும். எப்படி எனில், 

யாக்கோபு 3:6

நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!

யாக்கோபு: 3:8-11

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

துதித்தலும் ,சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?

பிரியமானவர்களை முந்தின வேத வசனங்களை தெளிவாக வாசித்து தியானியுங்கள். ஏனென்றால் நம்முடைய முழு ஆயுளையும் கறைப்படுத்துகிறது தான் நாவு பெரும்பாலானோர் தங்களுடைய நாவால் துதிப்பார்கள்,அதே நாவால் சபிப்பார்கள் இது அநேக கர்த்தரின் ஊழியக்காரர்களிடமும், மற்றும் விசுவாசிகளிடத்திலும் இவ்வித கிரியைகள் உண்டு. அதனால் தான் தேவன் மோசேயை வைத்து நமக்கு விளக்கிக் காட்டுகிறார். நம்முடைய நாவு எப்படியிருக்கிறது. அவரவர் தங்கள் நாவை இந்த நேரத் தில் ஒரு நிமிஷம் சோதிப்போம். நாவை அடக்க எந்த மனுஷனாலும் கூடாது என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கர்த்தர் நம் நாவை அடக்குவார்.

நாவும் நெருப்புதான் அது அநீதி நிறைந்த உலகம். இந்த உலகத்திலிருந்து நம் நாவை நீதி நிறைந்த பரலோகமாக மாற்ற வேண்டுமானால் குதிரைக்கு வாயில் கடிவாளம் போட்டு அதனை முழுமையும் திருப்பி நடத்தி செல்வது போல் நம் நாவிற்கு தேவனுடைய வசனத்தால் கடிவாளம் போடும் போது நாம் உலகத்தை விட்டு பரலோகத்திற்கு நேராக திரும்புவோம். இது நம்முடைய எகிப்தாகிய பாவத்தின் அடிமையிலிருந்து கானானுக்கு நேராக திருப்பி நடத்துவதில் நான்காவது பாதை என்று நம் எல்லோருக்கும் தெரிந்து வர வேண்டும். எப்படியெனில், 

நீதிமொழிகள் 15:4

ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.

பிரியமானவர்களே ஜீவ விருட்சம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மாறுபாடான நாவு பிசாசு. 

மேலும் நீதி (பரலோகம்) ஆரோக்கியமான நாவு. அநீதி (உலகம்) மாறுபாடான நாவு.

நம் உள்ளில் மாறுபாடான நாவு இருக்குமானால் தேவனுடைய ஆவியை அது நொறுக்கிப் போடும். மேலும் நாம் மிகவும் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும். ஆனால் ஆரோக்கியமான நாவாக நாம் இருப்போமானால் நம்முடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகளினால் மற்றவர்களுடைய ஆத்மா ஆரோக்கியமாகும்.

ஆனால் மாறுபாடான நாவாக இருக்குமானால் அது மற்றவர்களை புண்படுத்தும் இவற்றில் எது நல்லவையோ அதை நாம் இந்த நாட்களில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஏசாயா தீர்க்கதரிசி ஒரு பரலோக தரிசனம் பார்க்கிறான். அப்போது பரலோக சேனைகள் தேவனை ஆராதிக்கிறதை பார்க்கிறான். அப்போது,

ஏசாயா 6:5-8                                                                                                         

அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து என்னிடத்தில் பறந்து வந்து,

அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.

பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.

பிரியமானவர்களே இந்த நாட்களில் நம் அக்கிரமம் நீங்கி நாம் பிழைக்க வேண்டுமானால், நம் வாயாக தேவன் அவருடைய அக்கினியாகிய வார்த்தையினால் தொடும் போது நம் வாயில் அக்கிரமம் நீங்கி, நம் உதடு தேவனை துதிக்கும். அவ்விதம் தேவனை துதிக்கிற உதடு; ஒரு போதும் சபிக்காது. அந்த உதடு ஆசீர்வாதத்தின் உதடாகவே இருக்கும்.

இதே போல் தேவன் மோசேயிடம் நான் உன் வாயாக, நாவாக இருப்பேன் என்று சொல்கிறார். இப்படி உள்ளவர்களை தான் தேவன் உண்மையாகவே அவருடைய வார்த்தைகளை சத்தியமாக கூறும்படியாக அழைக்கிறார். நாமும் இவ்வித அழைப்பும் தெரிந்தெடுப்பும் பெற்று இந்த நாட்களில் தேவனுக்காக உழைப்போம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.