தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம் 89:50-52

ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும் ,நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,

கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.

கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென். ஆமென். 

அல்லேலூயா.

நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் (இஸ்ரவேலர் நிந்திக்கப்படுதல்):-

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதிகளில் எகிப்தியர்கள், யார்? இஸ்ரவேலர்கள் யார்? தேவன் எகிப்திலிருந்து எப்படி இஸ்ரவேலாகிய சபையை, (குறிப்பாக நம்மிடத்தில் நம் ஆத்துமாவை எப்படி விடுவித்து இரட்சிக்கிறார் என்பதை) கர்த்தர் மோசேயின் மூலமாய்க் கிறிஸ்துவால் எப்படி இஸ்ரவேலரை மீட்டு எடுக்கிறார் என்பதை திருஷ்டாந்தப்படுத்தி செய்ய சொன்ன காரியங்களை நாம் தியானித்தோம்.

இரண்டாவது அடையாளமாக கர்த்தர் மோசேயிடம் உன் கையை உன் மடியிலே போடு என்றார். அப்பொழுது கை வெளியில் எடுக்கும் போது கை உறைந்த மழையைப் போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. பின்பு திரும்ப மடியிலே போடு என்று சொல்லி போட்டு வெளியே எடுத்தபோது மற்ற சதையை போலாயிற்று.

பிரியமானவர்களே மடி என்று சொல்லும் போது கிறிஸ்து. 

யோவான் 1:18

தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

நம்முடைய கை நீதியாலும், நியாயத்தாலும் நிறைந்திருக்குமானால் குமாரன் நம்மளில் மகிமைப்படுவார். நம்முடைய கரம் அநீதியால்  நிறைந்திருக்குமானால் நாம் கிஸ்துவுக்கு அருவருப்பாயிருக்கிறோம் என்பதை தேவன் நமக்கு தெளிவுபடுத்துகிறார். அதனால் கை உறைந்த மழையைப் போன்ற வெண் குஷ்டம் நம் வாழ்வு (அருவருப்பு ) என்று காட்டுகிறார். இவை பிசாசின் கிரியை, ஆதலால் பிரியமானவர்களே அநீதியாகிய உலக கிரியைகளை எல்லாம் நாம் விட்டு பரம ஈவை ருசி பார்க்கிற பிள்ளைகளாக இருக்க வேண்டும்.

மேலும் அநீதியான காரியங்களை நாம் விட்டு விடாமல் இருப்போமானால் தேவனுடைய உக்கிரகோபம் நம் மேல் ஊற்றிவிடுவார்.

அதைத்தான்,

சங்கீதம் 79:6

உம்மை அறியாத ஜாதிகள் மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும் உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.

கர்த்தருடைய நாமத்தை உண்மையாய் தொழுதுக் கொள்ளாதவர்கள் மேல் தேவன் தம்முடைய கோபத்தை ஊற்றி விடுகிறார் என்று நமக்குத் தெரிய வருகிறது. மேலும்,

I பேதுரு: 4:14

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.

பிரியமானவர்களே, மேலும் யாராவது நாம் கிறிஸ்துவை ஆராதிப்பதினால் நம்மை நிந்தித்தாலோ, தூஷித்தாலோ நாம் பாக்கியவான்கள் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் எவ்வளவுக்கதிகமாக நிந்திக்கபடுகிறோமோ, அவமதிக்கப்படுகிறோமோ, தூஷிக்கபடுகிறமோ அது கண்டு நாம் கலங்கி போகாதபடி, சோர்வடைந்து போகாதபடி நாம் மிகவும் சந்தோஷித்து களிகூருகிறவர்களாக காணப்பட வேண்டும். ஏனென்றால் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். எப்படியெனில் நாம் அல்ல நிந்திக்கபடுவது, தூஷிக்கப்படுவது நமக்குள்ளாக தங்கியிருப்பது மகிமையின் ஆவியானவர்.

I பேதுரு: 4:16

ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.

பிரியமானவர்களே அதை தான்,

சங்கீதம் 79:12,13

ஆண்டவரே எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.

அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.

நாம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள். தேவனுடைய சபை, தேவ ஜனங்கள் தலைமுறை தலைமுறையாய் தேவ நாமத்தை பிரஸ்தாபப்படுத்துவார்கள்.

நாம் தேவ வசனம் தியானிக்கும் போது பெலிஸ்தன் இஸ்ரவேலின் சேனைகளை நிந்திக்கிறான்.

I சாமுவேல்: 17:10

பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றைய தினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டுவருவான்.

இவ்விதமாக பெலிஸ்தர்களுக்கும், இஸ்ரவேலருக்கும் யுத்தம் நெருக்கியது.

I சாமுவேல்: 17:43

பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.

I சாமுவேல்: 17:45-51

அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.

இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்.

கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,

தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.

இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.

ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள்.

மடியில் கையை போட தேவன் மோசேயினிடத்தில் சொன்ன காரியம், நம்முடைய கையும் மடியும் நீதியால் நிறைந்திருந்ததால் நிந்தையை சகிப்போம். கிறிஸ்துவால் வரும் நிந்தையை சகித்தால் தலைமுறை தலைமுறையாய் துதி விளங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அநீதியால்  (நாம் நிந்தித்த நிந்தையால்) நிறைந்திருந்தால் ஆத்துமா அழிந்து போகும். ஆனால் தாவீதின் சிங்காசனமாகிய கிறிஸ்து தலைமுறை தலைமுறையாய், அவருடைய நாமம் என்றென்றைக்கும் பரம்பரை பரம்பரையாய் விளங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரவேல் சபை அவ்விதம்  விளங்கும் என்பதற்கு எந்த சந்தேகமுமில்லை. சாட்சியோடு வாழுவோம் கிறிஸ்து நம்மளில் என்றென்றைக்கும் நம்முடைய தலைமுறைகளிலும் பிரகாசிப்பார். ஜெபிப்போம். 

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.             

–தொடர்ச்சி நாளை.