எகிப்தியர் யார்? இஸ்ரவேலர் யார்?

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jul 23, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 53:6 

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

எகிப்தியர் யார்? இஸ்ரவேலர் யார்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் தியானித்த வேதப்பகுதியில் தாழ்மையை பற்றி தியானித்தோம். நம் உள்ளம் புழுதியாக இல்லாமல் இருக்க வேண்டுமானால் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபையளிக்கிறவராக இருக்கிறார். மேலும் எகிப்தின் கிரியையில் ஒன்று மனப் பெருமை, உலகப் பெருமை, உலக அந்தஸ்து, உலக மேன்மை இவையெல்லாம் தேவன் அவருடைய வசனமாகிய நீதியால் அழித்துவிட்டு கிருபையளிக்கிறவராக இருக்கிறார். 

பின்பு தேவன் நம்முடைய ஆத்துமாவை குணமாக்குகிறவராகக் காணப்படுகிறார். தேவன் பின்பு மோசேயிடம் சர்ப்பமாக மாறின அந்த கோலைப்பற்றி சொல்கிறார் அதன் வாலை பிடி என்று, அவன் வாலை பிடித்தவுடனே அது மீண்டும் கோலாக மாறுகிறது. வாலை பற்றிப் தேவன் சொல்வது பொய் போதகம் பண்ணுகிற தீர்க்கதரிசியே,வால். இவற்றின் கருத்து என்னவென்றால் சர்ப்பத்தின் கிரியை உள்ளத்தில் இருக்கிறவர்கள், ஜனங்களுக்கு உலகத்துக்கு ஏற்றபடி உபதேசிப்பார்கள். அது எகிப்தின் கிரியை. அது எங்கு யாரிடம் இருந்தாலும்; நம் நீதி நிறைந்த கரம் அதை பிடித்துக்கொண்டு, ஜனங்களை உண்மையான சத்தியத்தின் படி நடத்த வேண்டும், என்பதை தேவன் நமக்கு மோசேயை எகிப்துக்கு அனுப்பும் முன்பாக விளக்கிக் காட்டுகிறார். ஆனால் மந்தையை நடத்தி செல்கிறவர் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதை நாம் தெரிந்து கொண்டு, துர் உபதேசங்களுக்கு இடங் கொடாமல், நம் செவியை விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் எப்போதும் தேவனிடத்தில் உண்மையும், நேர்மையும், என்னை காக்க கடவது என்று விண்ணப்பம் பண்ணவேண்டும்.

எரேமியா 17:14

கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.

எப்போதும் நம் உள்ளம் துதியால் நிறைந்து இருக்க வேண்டும்.

எரேமியா 17:16-18

நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை; ஆபத்து நாளை விரும்புறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது.

நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும், தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.

நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி ,இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.

இவை என்னவென்றால் நம் உள்ளத்தில் இருக்கிற சர்ப்பத்தின் தலையை தேவன் (பெருமையை) நொறுக்கினால் மாத்திரமே ,நம் ஆத்துமா குணமாகும் என்பதை தேவ வசனம் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.

நாம் உண்மையான சத்தியத்தின் படி நடந்து , நம் உதட்டால் தேவனுக்கு துதி செலுத்திக் கொண்டிருப்போமானால் தேவன் துஷ்டனுடைய தலையை நசுக்குகிறார். நாம் குணமடைவோம். மேலும், 

சங்கீதம் 23:1-4

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

பிரியமானவர்களே இதிலிருந்து நமக்கு தெரிய வருகிறது என்னவென்றால் கிறிஸ்து தான் கோலும், தடியும் அவர் நம்மை தேற்றுகிறவராக வெளிப்படுகிறார். எப்படியெனில் எகிப்தியனுக்கு நியாயந்தீர்ப்பவராகவும், இஸ்ரவேலரை தேற்றுகிறவராகவும் வெளிப்படுகிறார்.                                           

பிரியமானவர்களே எகிப்தியர் யார் ? இஸ்ரவேலர் யார் ? எகிப்தியர்கள் உலகத்தோடு ஒட்டி வாழ்கிறவர்கள். இஸ்ரவேலர்கள் முழுமையும் தங்களை தேவனுக்கு என்று ஒப்புக்கொடுத்தவர்கள்.

பிரியமானவர்களே நாம் இந்த நேரத்தில் ஒன்று நம்மை சிந்திப்போம். இதனை வாசிக்கிறவர்கள் யாராக இருக்கிறீர்கள் எகிப்தியர்களா? இஸ்ரவேலரா ? எகிப்தியர்:-

ஏசாயா 31:1-3

சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள் மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!

அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்.

எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே;, அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.

பிரியமானவர்களே முந்தின தேவ வசனம் நாம் தியானிக்கும் போது குதிரைகள் என்று எழுதப்பட்டிருக்கிறது, நம்முடைய உலக விதமான வேலைகளையும், அது சம்பந்தமான அநேக காரியங்கள்  இரதமாகவும், தேவன் வைத்து சொல்லுகிறார். அவ்விதம் காரியங்களுக்கு தங்கள் முழு நேரத்தையும் கொடுத்து விட்டு ,கர்த்தரை முழுமனதோடு தேடாமல் இருக்கிறவர்களை தேவன் எகிப்தியர் என்று சொல்லுகிறார். ஆதலால் எகிப்தியருக்கு தீங்கு வரும் என்றும் அவ்வித காரியங்களை முக்கியபடுத்துகிறவர்கள் அக்கிரமக்காரர்கள் என்றும், அவர்களுக்கு சகாயஞ் செய்பவர்களுக்கும் இரு தரப்பினருக்கும் தேவன் விரோதமாக எழுப்புகிறார் என்று சொல்கிறதை பார்க்கிறோம்.

ஆனால் கர்த்தர் யாருக்கு உதவி செய்யும் படி இறங்குகிறார் என்றால் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தஞ் செய்யும்படியாக இறங்குகிறார்.

அவர் தன் ஜனமாகிய இஸ்ரவேலுக்காக எப்படி இறங்குகிறாரென்றால்,

ஏசாயா 31:5,6

பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டு விலகினவரிடத்தில் திரும்புங்கள்.

இஸ்ரவேலர் யார்? எல்லாவற்றையும் உலக ஆசை, இச்சை, மோகம், உலக இன்பம் எல்லாம் வெறுத்து விடுகிறவர்கள். அதைத்தான், 

ஏசாயா 31:7

உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும், பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.

மேலும் வெள்ளி, பொன் இவையெல்லாம் இஸ்ரவேலர் வெறுத்து விட வேண்டும். இவர்கள் தான் இஸ்ரவேலர் என்று அழகாக தேவ வசனம் தெளிவுபடுத்துகிறது. மேலும் யாக்கோபு பொன்,வெள்ளி இவையெல்லாம் கர்வாலி மரத்தின் கீழ் புதைத்த பிறகு தான் தேவன் அவனை இஸ்ரவேல் என்று சொல்லுகிறார். மேலும் எல்லா இஸ்ரவேல் சபையிடமும் தேவன் விசுவாச யாத்திரையில் அவற்றையெல்லாம் கழற்றிப் போடுங்கள் என்று சொல்லுகிறதை இனிவரும் நாட்களில் நாம் தியானிப்போம். பிரியமானவர்களே நாம் எல்லோரும் தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்யும் படியாக கிருபையைப் பற்றிக்கொண்டு, இஸ்ரவேலராக மாறுவோம்.

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.