தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ரோமர் 16:20

சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

 தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறார்:- திருஷ்டாந்தம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் வாசித்து தியானித்த வேத பகுதியில், நம்முடைய தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு, மோசேயின் மூலமாய் செய்ய சொன்ன இரண்டு அடையாளங்கள் நிமித்தம் இஸ்ரவேல் புத்திரர் சுவிகாரப் புத்திரரடையும்படியாக, செய்ய சொன்னதை நாம் வாசித்து தியானித்தோம். இவையெல்லாம் நம்முடைய புத்திர சுவிகாரத்திற்கு தேவன் திருஷ்டாந்தபடுத்திக் காட்டுகிறார். புத்திர சுவிகாரம் அடைந்தவர்கள், விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலை பெற்றவர்களாக இருக்க முடியும். அதனால் தான் நம்முடைய வாழ்வின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு விரோதமாக இருக்கிற எல்லா விதமான தடைகளை நீக்கி ,தேவன் நம்மை விடுதலையாக்கி இரட்சிக்கும் படியாக, உள்ளத்தில் இருக்கிற மாறுபாடான எண்ணங்களை கிறிஸ்துவை கொண்டு நாம் அழித்து நித்திய வாழ்வின் மகிமையை நாம் அடையும் படியாக, கர்த்தர் அநேக காரியங்களை தேவன் திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.

மேலும் கர்த்தர் மோசேயிடம் மேற்கூறிய இரண்டு அடையாளங்களை அவர்கள் கண்டு நம்பாமற் போனால், மற்றும் செவிக்கொடாமல் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந் தரையில் இரத்தமாகும்.

அதற்கு மோசே கர்த்தரிடம் நான் வாக்கு வல்லவன் அல்ல; நான் திக்குவாயும், மந்த நாவும் உள்ளவன் என்றான்.

யாத்திராகமம் 4:11-12

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.                                                                                       

பிரியமானவர்களே நம் தேவன் நம்மை இரட்சிக்கும் படியாக இவ்விதமான அடையாளங்கள் காட்டுகிறார் என்றால் நாம் ஒருபோதும் தேவ வார்த்தையை அலட்சியம் பண்ணாமல் இருக்க வேண்டும்.

காரணமென்னவென்றால் முதலில் தேவன், மோசேயிடம் உன் கையில் இருக்கிற கோலை தரையிலே போடு என்றார். தரை என்பது புழுதியை காட்டுகிறது. கோல் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து (வசனம்) அதை புழுதியிலே போடும் போது அது சர்ப்பமாகிறது. நம் உள்ளம் புழுதியாகயிருக்குமானால் அதிலிருந்து தேவனுக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு அது சர்ப்பமாக இருக்கிறது. குறிப்பாக எகிப்தின் கிரியைகளை செய்கிறவர்களுக்கு உள்ளம் பிசாசு. அதைத்தான்,

எரேமியா 17:13

இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

பின்பு அந்த சர்ப்பத்தின் வாலை மோசேயிடம் கர்த்தர் உன் கையை நீட்டி பிடி என்றார். அப்போது அது கோலாயிற்று. அதை தான்,

ஏசாயா 9:15

மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம் பண்ணுகிற தீர்க்கதரிசியே வால்.

இந்த சர்ப்பம் தான் மனுஷன் உள்ளத்தில் தோன்றி பொய் போதகம் பண்ணும். அப்போது மக்களிடத்தில் எகிப்தின் கிரியைகள் உண்டாயிருக்கும். தேவன் அதை பிடிக்க சொல்கிறாரென்றால் அதை நீதி நிறைந்த கரத்தால் பிடிக்கும் போது அது கோலாக மாறுகிறது. நம் உள்ளம் எவ்விதத்தில் மாற்றம் அடையும் என்பதை தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார்.

நம் உள்ளத்தில் ஒருபோதும் சர்ப்பத்திற்கு இடம் கொடுக்காமல், தேவனுடைய வசனத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

சர்ப்பத்தின் தலையை தேவன் நசுக்கினார். கர்த்தர் நசுக்கினாரென்றால், நாம் அதனை நசுக்ககூடாது என்று கூறவில்லை. நாமும் சர்ப்பத்தின் தலையை நசுக்கித் தான் போக வேண்டும். நம் விசுவாச ஜீவிதத்தில் கிறிஸ்து மாத்திரம் தான்  தலை. இனி ஒரு தலை நம் உள்ளத்தில் எழும்பக் கூடாது. அநேக கிறிஸ்தவர்கள் சபைகளின் தலைவர்கள் என்று சொல்வார்கள்.                                         

உலகத்தார்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமே இல்லையா? மேலும் அநேகர் குடும்ப தலைவர்கள் என்று சொல்வார்கள். ஒரு குடும்பத்தில் இரண்டு தலைவர்கள் இருக்க முடியுமா? நம்முடைய தலை கிறிஸ்து. கிறிஸ்துவின் சபைகளிலும் ஆனாலும் சரி, குடும்பங்களில் ஆனாலும் சரி கிறிஸ்து மட்டும் தான் தலைவராக நியமிக்கப்படவேண்டும். பழைய ஏற்பாட்டு பகுதிகளை நாம் வாசிக்கும் போது தலைவர்கள், அதிபதிகள் இப்படிப்பட்டவர்களை  நியமித்தார்கள். ஆனால் கிறிஸ்து நமக்காக இப்பூமியில் வந்து நம்முடைய பாவங்கள், அக்கிரமங்கள், சாபங்கள், மீறுதல்கள், நோய்கள் இவற்றிற்காக எல்லாம் பாடுபட்டு மரித்து எல்லாவற்றையும் அவரே நமக்காக சுமந்து தீர்த்து இன்று நாம் அவருடைய வீடாகயிருப்போமானால் அவர்தான் தலைவர் என்ற எல்லா எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும். இவ்வித எண்ணங்கள் சபைகளிலும், ஊழியங்களிலேயும் இல்லாமல் மனுஷன் தேவன் இருக்கிற இடத்தில் அதிகாரங்கள் எடுக்கிறதினால் தேவன் சபைகளையும், ஊழியர்களையும், ஊழியங்களையும், தேவ ஜனங்களையும், தேசங்களையும் நியாயந் தீர்த்துக் கொண்டிருக்கிறார். 

பிரியமானவர்களே எல்லோரும் இப்போது உணர்வடைவோம்.

ஏசாயா 9:13,14

ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.

மனுஷர்களுடைய உள்ளத்தில் எப்படி சர்ப்பம் வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தவிதமான எல்லா கிரியைகளையும் தேவன் அழித்து விடுகிறார்.

மேலும் பிசாசின் கிரியைகள் உள்ள ஜனங்களை குறித்து, 

ஏசாயா 9:17

ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

பிரியமானவர்களே தேவன் நம்முடைய தீர்க்கதரிசிகளை கொண்டு பேசின எல்லா காரியங்களும் இந்த நாட்களில் நடந்து கொண்டிருக்கிறது. கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மேலும் ,தேவசபை நடத்துகிறவர்கள், தேவ ஜனங்கள் ஆகாமியங்களை குறித்து பேசுகிறவர்களை குறித்து தேவன் சொல்கிறார். இப்போதும் நம் தேசம் அனைத்தும் அவருடைய கரம் நீட்டினபடியே இருக்க காரணம் தேவசத்தியம் இல்லாமல் ஆகாமிய கிரியைகளை நடப்பிக்கிறவர்களால், தேவன் தேசத்தை அடிக்கிறார். நாம் எல்லோரும் உணர்வடைந்து கீழ்படிந்து ஜெபிப்போம். மேலும் 

சங்கீதம் 110:6,7

அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாயிருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.

வழியிலே அவர் நதியில் குடிப்பார், ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.

பிரியமானவர்களே கிறிஸ்து நம் எல்லாவற்றிற்கும் தலையாக விளங்கும் படியாக எகிப்தின் அடிமையிலிருந்து இஸ்ரவேலரை விடுதலையாக்க, கர்த்தர் மோசேயிடம் முதலில் செய்ய சொன்ன அடையாளம். இதிலிருந்து நமக்கு என்ன தெரிய வருகிறது என்றால் ஆத்துமா மீட்பின் முதல் இரட்சிப்பு தன்னை எல்லாரைக் காட்டிலும் தாழ்த்த வேண்டும். தாழ்மையுள்ளவர்களுக்கு தான் தேவன் கிருபையளிக்கிறார். மேலும் தன்னை தாழ்த்துகிறவர்கள் உயர்த்தப்படுவார்கள். உன்னதத்தின் ஆவி நம்மேல் ஊற்றப்பட வேண்டுமானால்  முதல் அடையாளம் தாழ்மை. (எகிப்தின் கிரியைகளிலிருந்து முதல் விடுதலை) நாம் யாவரும் இவ்வித எண்ணங்கள் உடையவர்களாக தேவனுடைய நல்லாலோசனைக்கு ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.