தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 11:22

மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா மதிகேடாக நடக்க இடம் கொடுக்கக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய நாவால் நன்மையானவைகளையும், யதார்த்தமானவைகளையும் பேச வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 53:1-5 

தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளை தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

மேற்கூறபட்ட வசனங்களில் கர்த்தர் மதிகேடனை குறித்து (மகலாத் என்னும் வாத்தியத்தில் ) வாசிக்கும்படி தாவீதினால் பாடப்பட்டு இராகதலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம். இந்த சங்கீதத்தின் விளக்கம் என்னவென்றால் நாம் மதிகேடாக இருந்தால்; என்னவெனில் தேவன் நம்மில் எதிர்பார்க்கிற காரியங்கள் செய்ய முடிந்தும், நாம் செய்யாமல் இருப்பது தான் மதிகேடு.  ஆதலால் மதிகேடனுடைய வாழ்வில் தேவன் இல்லை என்று நினைத்துக்கொள்கிறான். அவர்கள் தங்களையே கெடுத்து அருவருப்பான அக்கிரமங்களை செய்து வருகிறார்கள். ஆதலால் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை; தேவனை தேடுகிற உணர்வுள்ள மனுஷன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரை கண்ணோக்கினார். எல்லாரும் தேவனுடைய வழியை விட்டு விலகி  கெட்டு போகிறதை கண்டு நன்மை செய்கிறவன் இல்லை; ஒருவனாகிலும் இல்லை என்று கண்டு அவர் சொல்கிறார் அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையோ, அப்பத்தை பட்சிக்கிறது போல் என் ஜனத்தை சத்தியத்தின் பிரகாரம் வாழுவதை தடைசெய்து ஆத்துமாவை பட்சிக்கிறதால் (விழுங்குகிறதால்) அவர்கள் தேவனை தொழுதுக்கொள்ளுகிறதில்லை.  இவ்விதமாக தேவன் சொல்வது 

சங்கீதம் 53:6 

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

மேற்கூறபட்ட வசனங்கள் என்னவெனில் நாம் செய்கிற அருவருப்பான அக்கிரமங்களினால் நம்முடைய ஆத்துமாவை தேவன் சிதறபண்ணினபடியால் பயமில்லாத இடத்தில் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியால்  கிறிஸ்து அப்படிபட்டவர்களை வெட்கப்படுத்துகிறார்.  இவ்விதமாக நியாயந்தீர்த்து நம்முடைய ஆத்துமாவை சிறையிருப்பிலிருந்து திருப்பி, யாக்கோபுக்கு களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும் என்கிறார்.  ஆதலால் பிரியமானவர்களே, நாம் அருவருப்பான அக்கிரமங்கள் செய்யாதபடி நம்மை காத்துக்கொண்டு நம்மை மதிகேட்டுக்கு ஒப்புக்கொடாதபடி நம்மை ஜாக்கிரதையோடு காத்துக்கொள்ளும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.