தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 59:16

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தரின் வீட்டிலே நிலைத்திருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பிறக்க போகிற ஒவ்வொரு சந்ததிக்கும் கிறிஸ்துவே நாம் சேவிக்கும் சந்ததி என்று அறிவிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 23:1-6 

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

மேற்கூறபட்ட வசனங்களில் நம்மில் வாழுகிற கிறிஸ்துவின் வார்த்தைகள் தாவீதின் சங்கீதமாக எழுதப்பட்டுள்ளது.  அவையென்னவென்றால் கர்த்தர் என் மேய்ப்பர் என்றும்; அவர் மேய்ப்பராயிருக்கும் போது நம்முடைய வாழ்வில் தாழ்ச்சியில்லை என்கிறார். மேலும் நமக்கு சபைகளில் அவர் வசனங்களை நமக்கு ஆகாரமாக தந்து அமைதியான வாழ்வை நம்முடைய தேவன் நமக்கு தருகிறவர்.  அவர் நம்முடைய ஆத்துமாவை தேற்றுவதும், நம்மை நீதியின் பாதையில் நடத்துகிறார். நம்மை மரண இருள் சூழ்ந்தாலும் நாம் பயப்பட  வேண்டாம் என்று நமக்கு கூறுகிறார்.  நம்முடைய தேவன் நம்மோடு கூட இருக்கிறார்.  அல்லாமலும் நம்மில் கிறிஸ்து சொல்வது தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றும்.  அல்லாமலும் நம்முடைய ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருக்கிற பொல்லாத சத்துருக்கள் நாம் தேவ சித்தம் செய்யவிடாதபடி தடைபண்ணும்,  அதினால் தேவன் கிறிஸ்துவை நம்முடைய உள்ளத்தில் அனுப்பி; அவருக்கு போஜனபந்தியை ஆயத்தம் பண்ணி, நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் நம்மை தொடரும்படி செய்கிறார். அப்படியாக நாம் கர்த்தருடைய வீடாகிய கிறிஸ்துவில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் நாம் தியானித்த வார்த்தைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போமானால் அவர் நம்மை அவ்விதமே எல்லா பாதைகளிலும் நம்மை நடத்துவார்.  இவ்விதமாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.