தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 139:17

தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் பெற்றுக்கொள்கிற ஆலோசனையை தடைசெய்யக் கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா மிகவும் தாழ்மைப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 27:1-10  

யோபு பின்னும் தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:

என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,

என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,

என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.

என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன்; நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.

என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக.

மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?

ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?

அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?

மேற்கூறிய வசனங்களில் யோபு சூகியனான பில்தாத்திடம் சொன்ன வார்த்தைகளை தொடர்ந்து கூறிய பிரசங்க வாக்கியங்கள் எழுதப்பட்டிருக்கிறது.   அந்த வாக்கியங்களில் கர்த்தர் யோபு உத்தமனாயிருந்தும் அவனுடைய நியாயத்தை தள்ளிவிடுகிறார் என்றும், அவன் ஆத்துமாவை கசப்பாக்குகிறார் என்றும் சொல்லி, அவன் சிநேகிதர்கள் சொல்கிற நீதிகள் அவன் ஒத்துக்கொள்வது அவனுக்கு தூரமாயிருக்கிறது என்கிறான்.  மேலும் அவனிடம் பேசுகிறவர்களை அவன் பகைஞர்களாகவும், அக்கிரமக்காரர்களாகவும் எண்ணுகிறான். அவர்கள் எல்லாரும் அக்கிரமக்காரர்கள் என்றும், அவர்கள் மாயக்காரர்கள் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் போது, அவன் நம்பிக்கையை அற்று போகும் என்பதனையும் கூறி, ஆபத்து அவன் மேல் வரும் போது அவன் கூப்பிடுதலை கர்த்தர் கேட்கமாட்டார்.  அப்படிபட்டவர்கள் சர்வவல்லவர் மேல்  மனமகிழ்ச்சியாயிருக்க மாட்டார்கள்; அவர்கள் எப்பொழுதும் தேவனை தொழுதுக்கொள்ள மாட்டார்கள் என்றும் யோபு தனக்கு நீதியை கூறினவர்களை குற்றப்படுத்துகிறதை வாசிக்க முடிகிறது. ஆதலால் 

பிரியமானவர்களே, நம்முடைய வாழ்விலும் நம்மை சீர்படுத்தி இரட்சிக்க திராணியுள்ளவர்களாகிய கர்த்தரால் அபிஷேகம் பண்ணபட்டவர்கள் நமக்கு புத்தி சொல்லும் போது நாம் தள்ளிவிடாமல் அந்த புத்திமதியை ஏற்றுக்கொண்டு கர்த்தருக்கு பிரியமாய் நடந்துக்கொள்ளும்படி நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.