தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 4:24 

வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய வாயை தூய்மையாக காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் பொறுமையோடு உபத்திரவத்தை சகித்து கிறிஸ்துவினால் ஜெயம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடித்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 17:1-16 

என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.

பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.

தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?

நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.

எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.

ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.

இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.

சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.

நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.

இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.

என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.

அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.

அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.

அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப்பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.

என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?

அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.

மேற்கூறபட்டிருக்கிற வசனங்களில் யோபு சரளமாக அவன் சிநேகிதனாகிய எலிப்பாஸோடு பேசி குவிக்கிறான்.அதென்னவெனில் தன்னில் குடிக்கொண்டிருக்கிற பெருமையானக் குணங்கள் எல்லாம் வெளியில் வருகிறது.  இப்படியாக கர்த்தர் நமக்கு நமக்குள் தங்கியிருக்கிற குணங்கள் எல்லாம் வெளிபடுத்தி திருஷ்டாந்தபடுத்துகிறார்.  இந்த வார்த்த்தைகளை தியானிக்கும் போது யோபுவுக்கு அடுத்தவர்கள் உயருவது விருப்பம் இல்லாமலிருப்பதும்; மற்றவர்களின் பிள்ளைகள் நல்லமுறையில் வாழ்வது விருப்பமற்ற காரியமாக இருக்கிறது என்பதனை தெரிந்துக் கொளள முடிகிறது.  இப்படியாக அவனில் இருக்கிற சன்மார்க்கம்  அவன் நினைவுகளுக்கு மறைக்கப்பட்டு மற்றவர்களை சன்மார்கன்மார் என்றும், தான் மட்டும் நீதிமான் என்ற நினைப்பும் உள்ளத்தில் இருக்கிறது என்பதனை புரிந்துக்கொள்ளலாம்.  அதுபோல அவனிடத்தில் தான் ஞானம் விளங்குகிறது என்பதனை மறைமுகமாக பேசுகிறான்.  பின்னும் அவன் பேசுகிற சத்தம் தாழ்மையில்லாத சத்தம் அவன் வாயிலிருந்து புறப்படுகிறது.  என்னவென்றால் அவன்  சொல்கிறான்; பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன் என்றும், அழிவை பார்த்து எனக்கு தகப்பன் என்றும்; புழுக்களைப் பார்த்து நீங்கள் எனக்கு தாயும், சகோதரியும் என்கிறேன் என்று சொல்லி, என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததை காண்பவன் யார்? என்று சொல்லி, அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்கிறான். 

பிரியமானவர்களே மேற்கூட்ட யோபினால் கூறபட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, தன்னுடைய வாழ்க்கை எவ்வளவு அலங்கோலமாக இருக்கிறது என்பதனை பொறுக்காவொண்ணா துயரத்தோடுக் கூறுகிறதை வாசிக்க முடிகிறது.  ஆனால் தன் வாயின் வார்த்தைகளால் அதிகமாக தனக்கு கேடுண்டாக்குகிறான் என்று தெரியாமல் பிதற்றுகிறான்.  இப்படிதான் நம்மிலும் அநேகம் பேர் தங்கள் வாழ்க்கையை வாயால் கெடுக்கிறோம்.  ஆதலால் நம் வாய்க்கு எப்போதும் காவல் வைக்கவேண்டும்.  மேலும் சுத்தமான வார்த்தைகளை மட்டும் பேசுகிறவர்களாக இருக்க வேண்டும்.  இப்படியாக நம்மை கர்த்தரின் பாதத்தில் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.