தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 72:7

அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் நீதியும் நேர்மையுமாய் திடனோடு காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், பெற்றுக்கொண்ட  ஜீவனை அரோசிப்பேன் என்று சொல்லாமல் அந்த ஜீவனை முற்றுமுடிய காத்துக்கொள்ளவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 9:24-35 

உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், பின்னை யார் இதைச் செய்கிறார்.

என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம்.

அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.

என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,

என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.

நான் பொல்லாதவனாயிருந்தால், விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?

நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,

நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.

நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.

எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.

அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.

அப்பொழுது நான் அவருக்கு பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.

மேற்கூறபட்ட வார்த்தைகளில் உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; இதனை கர்த்தர் தான் செய்கிறார் என்றும் தன் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையை காணாமல் பறந்து போம்.  அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்கள் போலும், இரையின் மேல் பாயும் கழுகை போலவும் கடந்து போகிறது.  ஆனால் என் அங்காலாய்ப்பையும் என் முகத்தின் துக்கத்தையும் மாற்றி திடன் கொள்வேன்  என்றால், என் வருத்தங்களை பற்றி பயமாயிருக்கிறேன்,  என்னை குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.  நான் பொல்லாதவனென்றால் எதற்கு போராட வேண்டும்.  நான் உறைந்தமழை தண்ணீரில் மூழ்கி, என் கைகளை சவுக்காரத்தினாலும் சுத்தம் பண்ணினாலும் நீர் என்னை சேற்றுப் பள்ளத்தில் அமிழ்த்துவீர், அப்பொழுது என் வஸ்திரங்கள் என்னை அருவருக்கும்.  அவன் பில்தாதிடம் சொல்வது நான் கர்த்தருக்கு பிரதியுத்தரம் சொல்ல முடியாது, அவ்விதம் சொல்வதற்கு அவர் மனுஷரல்ல.  எங்கள் இருவர் மேலும் தன் கையை வைக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.  மேலும் அவன் சொன்னது கர்த்தர் அவன் மேல் வைத்திருக்கிற மிலாற்றை அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னை கலங்கப்பண்ணாதிருப்பதாக.  அப்பொழுது நான் அவருக்கு பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அதற்கு இடமில்லை.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று கொடுக்கப்பட்டிருக்கிறது.  என்னவென்றால் நம்மிலும் அநேகம் பேர் நம்முடைய சிநேகிதரிடத்தில் எவ்வளவும் தாழமாட்டோம்.  நம்மிடத்தில் எந்த பொல்லாப்பும் இல்லை என்று சாதித்து விடுவோம்.   தன் நாட்கள் துக்கத்தோடே முடிய போகிறது என்று யோபு தன் மனதில் அங்கலாய்ப்போடே பல வார்த்தைகளை பொழிகிறான்.  ஆனால் அவன் வருத்தத்தில் ஒரு காரியம் குறிப்பாக வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கிறது என்றால் தங்கள் இருவருக்கும் கையை வைக்கதக்க மத்தியஸ்தன்  இல்லை என்று கூறி தன் வருத்தத்தை வெளிப்படுத்தி கர்த்தர் அவருடைய மிலாற்றை அவனை விட்டு அகற்ற வேண்டும் என்றும் , அவருடைய பயங்கரம் அவனை கலங்கபண்ணாமல் இருக்க வேண்டும் என்று பேசி தன்னில் இருந்த பயத்தை வெளிப்படுத்துகிறான். ஆனால் கர்த்தருக்கு  உண்மையும் நீதியும் நேர்மையுமாய் சத்தியத்தின் பாதையில் நடப்போமானால் நமக்குள் இருக்கிற பயம் நம்மை விட்டு நீங்கும்.  நாம் கர்த்தருக்குள் திடனோடு வாழ்வோம்.  இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.