தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 3:11,12

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவன் தருகிற தண்டனையை முறுமுறுப்பில்லாமல் ஏற்றுக்கொண்டால் அது நமக்கு நன்மையை உண்டாக்குகிறது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நித்திய பேரின்ப பாக்கியத்தை அடைகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 5:19-27 

ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.

பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.

நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.

பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.

வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும்.

உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.

உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.

தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.

இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படி இருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.

மேற்கூறபட்ட வசனங்களின் பிரகாரம் எலிப்பாஸ் போபுவிடம் சொல்கிற கர்த்தரின் வார்த்தை என்னவென்றால் ஆறு இக்கட்டுகளுக்கு நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு தொடாது.  பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.  நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்.  பழாக்குதல் வரும்போது பயப்படாமலிருப்பீர்.  பாழாக்குதலையும், பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களையும் கண்டு பயப்படாமலிருப்பீர்.  மற்றும் அவன் சொன்னது வெளியின் கல்லுகளோடு என்றால் இரட்சிக்கப்படாதவர்களோடு உடன்பாடு இருக்கும்; அப்படிபட்டவர்கள் உம்மோடு சமாதானமாயிருப்பார்கள்; அப்போது உமது கூடாரம் சமாதானமாயிருக்க காண்பீர் என்றும்; மேலும் உமது வாசஸ்தலத்தை விசாரிக்கும் போது குறைவை காணமுடியாது.  அப்போது  சபையின் ஆத்துமாக்களாகிய சந்தானங்கள் பெருகி; சபையின் ஜனங்கள் பூமியின் பூண்டுகளைப் போல் இருப்பார்கள் என்பதை அறிந்துக் கொள்வீர்.  அல்லாமலும் தானியம் ஏற்றகாலத்தில் அம்பாரத்தில் சேருவது போல் கல்லறையில் சேருவீர் என்றும்; நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான் என்றும்; காரியம் இப்படியிருக்கிறதால்; நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாகும்படி அறிந்துக்கொள்ளும் என்கிறான். 

பிரியமானவர்களே மேலே கூறப்பட்ட வசனங்களின் பிரகாரம் நாம் சர்வ வல்லவர் நம்மை சிட்சிக்கும் போது,அந்த சிட்சையை அற்பமாக எண்ணாமல் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு நம் வாழ்வில் இருக்கிற குற்றங்களை கர்த்தரின் சமூகத்தில் அறிக்கையிட்டு, கிறிஸ்துவினால் நம்மை புதுப்பித்துக்கொள்வோமானால் கர்த்தர் நம்மை எல்லாவித இக்கட்டுக்கும் விலக்கி மீட்டு இரட்சித்து காத்து நமக்கு நன்மையுண்டாகும்படி கிருபை செய்வார். எப்படியென்றால் கர்த்தர் நம்மை அடிக்கும் கரத்தால் காயத்தை ஆற்றுகிறார்.   அவர் நம்முடைய காயத்தை ஆற்றும் போது மேலே கூறபட்டவைகள் பிரகாரம் நமக்கு தேவன் தைரியம் தந்து நம்மை அவர் சித்தத்தின் பிரகாரம் நடத்தி செல்வார்.  இதனை கர்த்தர் நமக்கு யோபு மூலம் விளக்கி திருஷ்டாந்தபடுத்தி காட்டுகிறார்.  ஆதலால் நாம் ஒவ்வொருவரும் கர்த்தரிடத்திலிருந்து நன்மை பெற்றுகொள்ளும்படியாக நம்மை முழுமையும் ஒப்புக்கொடுப்போம்.    

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.