தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 71:19 

தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவனைபற்றி எந்த குற்றமும் சொல்லலாகாது.

 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்,  மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் தந்த ஆசீர்வாதங்கள் கர்த்தரால் என்றென்றும் நம்மில் தங்கியிருக்க வேண்டும்  என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

யோபு 1:13-15 

பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,

ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில்,

சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

மேற்கூறபட்ட வசனங்களில் சாத்தான் கர்த்தரின் சந்நிதியிலிருந்து புறபட்டு போனபின்பு; ஒரு நாள் யோபுடைய குமாரரும், குமாரத்திகளும் தங்கள் மூத்த சகோதரன் வீட்டில் புசித்து திராட்ச ரசம் குடிக்கிற போது ஒரு ஆள் அவனிடத்தில் வந்து சொன்னது: எருதுகள் உழுகிற போது, கழுதைகள் அதன் பக்கத்திலே மேய்ந்துக் கொண்டிருக்கும் போது சபேயர் அவைகள் மேல் விழுந்து, சாய்த்துக் கொண்டு போனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.  இப்படி அவன் பேசிக்கொண்டிருக்கையில் அடுத்த சம்பவம் நடந்தது அது 

யோபு 1:16 

இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

இப்படியாக அவன் பேசிக்கொண்டிருக்கையில் மூன்றாவது சம்பவம் 

யோபு 1:17 

இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

இந்த காரியத்தைக்குறித்து பேசிக்கொண்டிருக்கையில் நான்காவதாக 

யோபு 1:18,19 

இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,

வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

இவ்விதம் யோபுடைய எல்லா ஆசீர்வாதங்களையும், மற்றும் அவன் பிள்ளைகளையும் கர்த்தர் அழித்தார்.  அப்போது யோபு எழுந்திருந்து தன் சால்வையைக் கிழித்து, தன் தலையை சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து சொன்னது 

யோபு 1:21 

நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.

இந்த வார்த்தைகளை சொல்லி, இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவில்லை, தேவனைப் பற்றி குறைசொல்லவுமில்லை.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, யோபுக்கு வந்த சோதனையை நாம் சிந்திக்க வேண்டும். யோபுடைய குமாரர் தன் தன் நாளில் (பிறந்த நாள்) விருந்து கொண்டாடினதால் வந்த நிலமையை சிந்தித்து கொள்ள வேண்டும்.  மற்றும்  ஏன் இந்த சோதனை வந்தது என்று யாரும் கர்த்தரிடத்தில் கேள்வி கேட்க முடியாது.  ஏனென்றால் அவர் குற்றமில்லாமல் தண்டிக்கமாட்டார்.  நம்மிலிருக்கிற பாவங்கள் எப்படி மறைத்து வைக்கலாம் என்று நினைத்தாலும் அது முடியாது.  ஏனென்றால் கர்த்தர் மகா ஞானமுள்ளவர்.  அவர் ஞானம் வர்ணிக்க முடியாது.  இந்த காரியம் நடக்க காரணம் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று காட்டுகிறார்.  ஆனால் நாம் ஏதோ ஒரு கஷ்டம் வந்தாலோ ஆயிரம் கேள்விகள் கர்த்தரிடத்தில் கேட்டு பாவஞ்செய்வோம்.  நம்மிடத்தில் கணக்கில்லா பாவங்கள் இருந்தாலும், நமக்கு வருகிற கஷ்டம் பாவத்தினால் என்று நினைக்க மாட்டோம்;  ஏதோ தற்செயலாக நடந்து விட்டது என்று எண்ணிக்கொள்வோம். அப்படி நினைத்துக்கொள்ளாதபடி நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து, அவரவர் தப்பிதங்களை அவரவர் கர்த்தரின் பாதத்தில் ஒப்புவித்து கொள்ள வேண்டும்  என்பதனை கர்த்தர் இவ்விதம் திருஷ்டாந்தபடுத்தி நமக்கு கற்றுதருகிறார். ஆதலால் எப்படிபட்ட சோதனை வந்தாலும் நாம் பாவஞ்செய்யாதபடியும், தேவனைபற்றி எந்த குறைவும் சொல்லாதபடிக்கும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.