தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 29:27

நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்குள் சன்மார்க்கமோ, துன்மார்க்கமோ இராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில்நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய வழியை அனுதினம் நம்மைநாமே சோதித்தறிய வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 1:6-7 

ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.

கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் தியானிக்கும் போது யோபு உத்தமன் என்று கர்த்தர் கூறினாலும், அவனிடத்தில்  சன்மார்க்கம் உண்டாயிருந்தது. சன்மார்க்கம் என்பது துன்மார்க்கத்தை காட்டிலும்  உள்ளத்தில் மறைந்து வசித்துக்கொண்டிருக்கும் பெரிய மோசமான குணம். இந்த குணம்  உள்ளவர்களை நாம் கண்டுபிடிக்க முடியாது.  வெளிதோற்றத்தில் நல்ல குணம் உள்ளவர்களை போல் நடந்து கொள்வார்கள்; உள்ளத்திலோ கொடிய வஞ்சகர்களாக விளங்குவார்கள்.  இப்படியாக தான் யோபு சன்மார்க்கன் என்று எழுதபட்டிருக்கிறது.  சன்மார்க்கத்தைக் குறித்து 

எசேக்கியல் 21:3-5 -ல் கூறப்பட்டிருக்கிறது.  

இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணுவேன்.

நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணப்போகிறபடியினால் தெற்குதுவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் என் பட்டயம் அதின் உறையிலிருந்து புறப்படும்.

அப்பொழுது கர்த்தராகிய நான் என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை.

இப்படிப்பட்ட யோபு தன் குமாரரின் பிறந்த நாளை குறித்து அவர்கள் அந்த நாளில் தன் வீடுகளில் விருந்துக்கொண்டாடுகிற  முறைகள் முடிகிற போது தன் குமாரர் ஒருவேளை பாவஞ்செய்து, தேவனை தங்கள் இருதயத்தில் தூஷித்திருப்பார்களோ என்று தன் குமாரருக்காக யோபு சர்வாங்கதகனபலிகளை செலுத்தி தன் குமாரருடைய பாவங்களை மறைக்க நினைக்கிறான்;  ஆனால் அதனை தடுத்து நிறுத்தவில்லை என்பது தேவனுடைய வார்த்தையில் எங்கும் அறியமுடிகிறது.  இப்படிதான் நம்மில் அநேகர் பிள்ளைகளின் பாவங்களை மறைக்க நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களின் தவறுகளை சீக்கிரத்தில் சுட்டிகாட்டுவார்கள்; இவைகள் சன்மார்க்கத்தார்.  மேலும் ஒரு நாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்த போது சாத்தானும் அவர்கள் நடுவே வந்து நின்றான்.  அப்பொழுது கர்த்தர் சாத்தானைப்பார்த்து நீ எங்கேயிருந்து வருகிறாய் என்று கேட்டதற்கு அவன் சொன்னது பூமி  எங்கும் உலாவி சுற்றி திரிந்து வருகிறேன் என்கிறான், அது எதற்கென்றால் அதில் உள்ள குறைகளை கண்டுபிடித்து தனக்கு அவகாசம் உண்டோ என்று பார்த்து  சுற்றி திரிந்து உலாவி வருகிறான் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  ஆதலால் நம் உள்ளத்தில் எந்த குறைகளுக்கும் இடம் கொடாமல், நம் பிள்ளைகள் செய்கிற பாவத்தையும் மறைத்து வைக்காமல், பிள்ளைகளுக்காக நாம் பாவ அறிக்கை செய்து கர்த்தரிடத்தில் மன்னிப்புப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்காமல் பிள்ளைகள் தவறு செய்வதை அறிகிற, காண்கிற நாம்,  பிள்ளைகளை கடிந்துக் கொண்டு சிட்சித்து  அவர்கள் இனி தவறு செய்யாமல் அவர்களே பாவ அறிக்கை செய்து கர்த்தரிடத்திலிருந்து தேவ கோபம் முழு குடும்பத்துக்கும் வராமல் பாதுக்காத்துக்கொள்ள வேண்டும்.  இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.