தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 71:19
தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரோடிசைந்தால் கர்த்தர் நம்மோடிசைந்து நம்மை தீமையினின்று விடுவித்து காத்து இரட்சிப்பார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை காக்கும் படி ஆவியின் பட்டயமாகிய தேவ வசனத்தால் கர்த்தர் நம்முடைய சத்துருக்களை அழிக்கிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 9:12-14
அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.
அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையதினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.
அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான்; அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள்.
மேற்கூறப்ட்ட வசனங்களில் யூத ஜனங்கள் சூசான் அரமனையில் கொன்றுபோடபட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் ஒப்புக்கொடுத்தபின்பு, ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரிடம் சொன்னது சூசான் அரமனையில் ஐந்நூறு பேரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள் என்றும், ஆமானுடைய பத்து குமாரரையும் கொன்றார்கள், ராஜாவின் மற்ற நாடுகளில் என்ன செய்திருப்பார்களோ; இப்போது உன் வேண்டுதல் என்ன? உன் மன்றாட்டு என்ன அது உனக்கு கட்டளையிடப்படும் என்றதற்கு எஸ்தர் சொன்னது: ராஜாவுக்கு சித்தமானால் இன்றைய தினத்து கட்டளையின்படியே நாளையும் யூதர்கள் செய்யவும்; ஆமானின் பத்து குமாரரின் உடலையும் தூக்கு மரத்தில் தூக்கிப் போடவும் உத்தரவாக வேண்டும் என்று கேட்டதற்கு ராஜா உத்தரவுக் கொடுத்தான்; அதற்கு சூசானிலே கட்டளை பிறந்தது. ஆமானின் பத்து குமாரருடைய உடலையும் தூக்கிப் போட்டார்கள்.
பிரியமானவர்களே, கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தியது கர்த்தரின் பிள்ளைகள் எது கேட்டாலும், நமக்கு கர்த்தர் பரலோகத்திலிருந்து உத்தரவுக்கொடுக்கிறார் என்பது விளங்குகிறது. மற்றும் நம்முடைய சத்துருக்கள் பின் வரும் நாட்களில் நம்மை தொடாதபடி காக்கும்படிக்கும் கட்டளை பிறப்பிக்கிறார். அப்படியிருக்க வேண்டுமானால் நாம் அவருடைய மணவாட்டி சபையாக காணப்படவேண்டும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். இப்படியாக கர்த்தரிடத்தில் சேர்ந்து மன்றாடி நம் தீமையினின்று விடுதலையாகும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.