தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமா உலகமாகிய கறைகளால் வஞ்சிக்கபடாதபடி காக்கப்பட கர்த்தரின் வாசற்படியில் நித்தம் விழித்திருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை எப்போதும் கனம்பண்ணுகிறவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்தர் 6:12-14
பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனான்.
ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.
அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.
மேற்கூறபட்ட வசனங்களில் அகாஸ்வேரு ராஜா மொர்தெகாய்க்கு செய்ய சொன்ன காரியங்களை ஆமான் செய்த பின்பு, மொர்தெகாய் அரமனை வாசலுக்கு திரும்பி வந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலபட்டு முக்காடிட்டுக் கொண்டு தன் வீட்டுக்கு தீவிரித்து போய், தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் மனைவியாகிய சிரேஷூக்கும், அவன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்த போது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியும் அவனிடம் நீர் மொர்தெகாய்க்கு முன்பாக தாழ்ந்து போக தொடங்கினீர்; அவன் யூத குலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் தாழ்ந்து போவது நிச்சயம் என்றார்கள். அவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து ஆமானை எஸ்தர் செய்த விருந்துக்கு வர துரிதப்படுத்தினார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட பகுதிகளை தியானிக்கையில் தேவன் திருஷ்டாந்தத்திற்கென்று கூறபட்டது என்னவென்றால், கிறிஸ்துவினால் மீட்கபட்டு, கர்த்தரால் அபிஷேகம்பண்ணபட்டு, உள்ளான மனுஷன் தேவ சாயல் அடைந்திருக்கும் போது, அவர்கள் கிறிஸ்துவின் வாசலண்டையில் நித்தம் விழித்திருந்து பெலன் பெற்றுக்கொள்ளும் போது, அவர்களை உலகம், மாமிசம், பிசாசு இவைகள் ஜெயம் பெற்றுக்கொள்ள முடியாது என்பது சிரேஷூ ஆமானுக்கு கூறிய வார்த்தைகளினால் தெளிவுபடுத்துகிறார். என்னவென்றால் அவளும், ஆமானுடைய ஆலோசனைக்காரர்களும் ஆமானிடம் சொன்னது, மொர்தெகாய்க்கு முன்பாக தாழ்ந்து போவது நிச்சயம் என்கிறார்கள். ஆதலால் நாம் எப்போதும் கிறிஸ்துவின் வாசற்படியில் நித்தம் விழித்திருக்கிறவர்களாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.