தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 23:5 

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்காய் பரிசுத்த பந்தியாகிய விருந்தை ஆயத்தப்படுத்த வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய போஜனபந்தியில் ஆமானிய சக்திகள் நம்முடைய ஆத்துமாவை வஞ்சிக்காதபடி காக்கும்படியாக நாம் ஆயத்தமாகயிருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்தர் 5:5-6 

அப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய, ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.

விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எஸ்தரின் அழைப்பிற்கிணங்கி ராஜாவும், ஆமானும் விருந்திலே கலந்துக்கொண்டு, அங்கு திராட்ச ரசம் பரிமாறப்படுகையில் ராஜா எஸ்தரிடம் உன் வேண்டுதல் என்ன? அது உனக்கு கொடுக்கப்படும் நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தின் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்ற போது எஸ்தர் பிரதியுத்தரமாக; 

எஸ்தர் 5:8 

ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.

மேற்கூறியவற்றை  எஸ்தர் சொல்லி; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.  

பிரியமானவர்களே,  மேற்கூறியபடி நாம் கர்த்தருக்காய் பரிசுத்தபந்தியாகிய விருந்தை ஆயத்தம்பண்ணும் போது, கர்த்தர் நம்மை பார்த்து கேட்கிற காரியம் என்னவென்றால்; நாம் தேவனுடைய ராஜ்யத்துகுரியவைகளில் எது கேட்டாலும் தருகிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. அல்லாமலும் ஒரு முறை மட்டுமல்ல நம்முடைய எதிரியாகிய உலகம் அழிக்கப்படும்படி மீண்டும் நாம் கர்த்தருக்காய் விருந்து ஆயத்தப்படுத்தப்பட வேண்டும்.  அந்த விருந்தில் கிறிஸ்து நம்மோடு புசித்து குடித்து மகிழ்கிறவராயிருக்கிறார்.   அப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.