தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 15:5  

தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சபையாம் சகோதரர் நடுவில் வட்டியையாவது, பொலிசையாவது  வாங்கக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய சகல முந்தின ஆத்மீக நன்மைகள் இழந்ததை கர்த்தரின் சந்நதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 5:6 - 8

அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,

என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து,

அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் இஸ்ரவேல் சபை போட்ட கூக்குரலை கேட்ட நெகேமியா மிகவும் கோபம் கொண்டு ஆலோசனைப் பண்ணி,பிற்பாடு அதிகாரிகளையும் கடிந்துக்கொண்டு, அவன் கேட்டது நீங்கள் உங்கள் சகோதரர் மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபையை கூடிவர செய்து; புறஜாதிகளை நோக்கி எங்கள் சகோதரரை எங்கள் சக்திக்கு தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் உங்கள் சகோதரரை விற்கலாமா; இவர்கள் நமக்கு விலைப்பட்டு போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்களுக்கு மறு உத்தரவு சொல்ல முடியாமல் மவுனமாயிருந்தார்கள்.  பின்னும் நெகேமியா அவர்களிடம் 

நெகேமியா 5:9-11 

பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?

நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன் கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.

நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்றேன்.

மேற்கூறபட்ட வார்த்தைகளை நெகேமியாவிடத்திலிருந்து கேட்டவர்கள் சொன்னது 

நெகேமியா 5:12 

அதற்கு அவர்கள்: நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.

இந்த வார்த்தைகளினால் ஆணையிடுவித்துக் கொள்கிறான்.  

பிரியமானவர்களே கர்த்தராகிய கிறிஸ்து இஸ்ரவேல் சபையை நடத்துகிறதை நெகேமியா மூலம் தேவன் திருஷடாந்தப்படுத்துகிறார். அல்லாமலும் கர்த்தரின் வார்த்தை சொல்வது சபையாம் சகோதரனுக்கு கடனாக ஏதொன்றைக் கொடுத்தாலும் பொலிசையாவது, வட்டியாவது வாங்காயாக என்று  

லேவியராகமம் 25:35-39

உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.

நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.

அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.

உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.

லேவியராகமம் 25:35-39-ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு நாம் பார்க்கும் போது இஸ்ரவேல் சபை பெரியோர், பிரபுக்கள் குமாரர் குமாரத்திகளை அடிமையாக கொண்டதும், சகோதரர் நடுவில் கடன் வாங்கியவர்களிடம் வட்டி வாங்கிக் கொண்டதும், மற்றும் பஞ்சமான நாட்களில் அவர்கள் வீடுகளையும், திராட்ச தோட்டங்களையும் மனுஷர்கள் கைவசமாக்கிக் கொண்டார்கள் என்று வாசிக்கிறோம்.  மேலும் கர்த்தரின் கட்டளையென்னவென்றால்

உபாகமம் 23:19-20 

கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.

அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.

மேற்கூறப்பட்ட வசனங்களில் அந்நியன் கையில் வட்டி வாங்கலாம் என்றும், சகோதரன் கையில் வட்டி வாங்காயாக என்றும் எழுதப்பட்டிருக்கிறது.  சகோதரன் என்றால் சபையாம் சகோதரர்களை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஆனால் அநியாய வட்டி யாருடைய கையிலிருந்தும் வாங்கக்கூடாது; என்னவென்றால்

 நீதிமொழிகள் 28:8 

அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

ஆதலால் நாம் அநியாயவட்டி வாங்கினால் மேற்கூறிய பிரகாரம் கர்த்தர் நம்மை தண்டிக்கிறார்.  ஆதலால் இந்நாள்வரையில் பிரியமானவர்களே,  மேற்கூறியப் பிரகாரம் நம்மில் யாராவது அறிந்தோ, அறியாமலோ தவறுகள் செய்திருந்தால் நாம் அநியாயமாக வாங்கினதை திரும்ப கொடுத்துவிட்டு, கர்த்தரிடத்தில் மன்னிப்புப் பெற்றுக்கொண்டு; இனி எந்த சூழ்நிலமையிலும் இவ்வித தவறுகள் செய்யமாட்டோம் என்று கர்த்தரிடத்தில் ஆணையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.