தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 31:33 

அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் உள்ள விசுவாசத்தில் வளர்ந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நம்மை பரிசுத்தப்படுத்த வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் சாத்தானால் வஞ்சிக்கப்படாமல், எப்போதும் ஜெபத்தாலும், ஸ்தோத்திரத்தாலும், துதியினாலும் நிறைந்ததாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

11நாளாகமம் 34:1-2

யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஆமோனின் குமாரனாகிய யோசியா தன்னுடைய எட்டாம் வயதில் ராஜாவாகி முப்பத்தொரு வருடம் எருசலேமில் அரசாண்டான். அவன் கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானதை செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில் வலது இடது புறம் விலகாமல் நடந்தான்.  அவன் தன் ராஜ்யபாரத்தின்  எட்டாம் வருஷத்தில், தான் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனை தேட ஆரம்பித்ததும் மற்றும்  அவன் செய்ததும் 

11நாளாகமம் 34:3-5 

அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.

அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின்மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி,

பூஜாசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பீடங்களின்மேல் சுட்டெரித்து, இவ்விதமாய் யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்டவைகளின்படியே யோசியா செய்து மனாசே, எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலி மட்டும், பாழான சுற்றுப்புறங்களிலும் செய்தான். அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள கர்த்தருக்கு பிரியமல்லாத எல்லா பலிபீடங்களையும்,  விக்கிரக தோப்புகளையும், சிலைகளையும் தகர்த்து தூளாக்கி, எல்லா சிலைகளையும் வெட்டிப் போட்ட பின்பு எருசலேமுக்கு திரும்பினான்.  மேலும் தேசத்தையும், ஆலயத்தையும் சுத்திகரித்த பின்பு தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே 

11நாளாகமம் 34:8 

அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான்.

மேற்கூறப்பட்டவர்கள் கர்த்தரின் ஆலயத்தை பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான். அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியை காக்கிற லேவியர் மனாசேயிலும், எப்பிராயீமிலும், இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்திற்கு கொண்டு வந்த பணத்தை ஒப்புவித்து, வேலையை செய்விக்கும்படி கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரிடத்தில் கொடுத்தார்கள். இவர்கள் அதை கர்த்தருடைய  ஆலயத்தை பழுதுபார்த்து சீர்படுத்துகிறதற்கு ஆலயத்தின் வேலை செய்கிறவர்கள் கையிலேக் கொடுத்தார்கள்.  அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப் போட்ட அறைகளை பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பரவுகிறதற்கு பலகைகளையும் வாங்க தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள். இந்த மனுஷர் வேலையை உண்மையாய் செய்தார்கள், வேலையை நடத்த மெராரி புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும் , கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள் மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.  லேவியர் எல்லாரும் கீத வாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள் அவர்கள் சுமைக்காரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலை செய்கிற எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்.  லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும், மணியக்காரருமாயிருந்தார்கள்.  கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிற போது, மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட திருஷ்டாந்தம் என்னவென்றால், இந்நாள் வரையில் நம்மில் பாகாலின் பலிபீடமோ, மற்றும் விக்கிரக கிரியைகளோ, சிலைகளோ இருக்குமென்றால் அதனை அப்படியே ஒன்றுமில்லாமல் மாற்றி விட்டு, நம் சரீரமாகிய ஆலயம் முழுமையும் சுத்திகரிக்க வேண்டும்.  நாம் சுத்திகரிக்கப்படுவதை கர்த்தர் நம்மிலிருந்து விசாரிக்கிறவராயிருக்கிறார்.  மேலும் நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் பரிசுத்தமாக்கபடுவதற்கு,கர்த்தருடைய வசனத்தினால் நம்மை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பின் வாங்கி போன ஆத்துமாக்களை சபையில் ஒன்று சேர்த்து கர்த்தருக்கு கீத வாத்தியங்கள் முழங்க வைத்து காணிக்கைகளை செலுத்த வேண்டும். ஆனால் காணிக்கையை எடுக்கிறவர்களில்;கர்த்தர் மேசேயை கொண்டு கட்டளையிடப்பட்ட நியாயப்பிரமாணம் அவர்கள் உள்ளத்தில் ஆவியினால் எழுதப்படுகிறது.  ஆதலால்  நம்மில் கிறிஸ்துவின் விசுவாசத்தில் வளர்ந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில் பரிசுத்த உள்ளத்தோடு வாழும்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.