தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 44:26
நான் என் ஊழியக்காரரின்
வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின்
ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள்
என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென்.
அல்லேலூயா.
கர்த்தர் வாக்குத்தத்தம் நிறைவேறும்படியான
கிரியை நடப்பித்தல்:- திருஷ்டாந்தம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்ததான வேத
பகுதிகளில் தேவன் நம்முடைய சிறையிருப்பை மாற்றி நம்மை இரட்சித்து, தேவன் நமக்குத் தந்த
வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி கானானை சுதந்தரிக்கும் படியாக தேவன் ஆபிரகாம், ஈசாக்கு,
யாக்கோபு என்பவர்களை திருஷ்டாந்தப்படுத்தி பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எப்போது
,எப்படி பரிசுத்த ஸ்தலமாகிய கிறிஸ்துவோடு சேர்ந்தார்கள் என்பதை தியானித்தோம். மேலும்
யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பும் எவ்விதம் கானானை சுதந்தரிக்க தேவன் வாக்குக் கொடுத்தார்
என்பதையும் தியானித்தோம்.
தேவன் ஆபிரகாமிடத்தில்
சொன்னது போல் ,உன் சந்ததியார் தங்களுடைய அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து ,அத்தேசத்தாரை
சேவிப்பார்கள் என்றும், நானூறு வருஷம் உபத்திரப்படுவார்கள் என்றும் நீ நிச்சயமாய் அறிய
கடவாய் என்று சொன்னது போல தேவன் அவ்வண்ணமே வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி யாக்கோபின்
சந்ததியாரை எகிப்தில் அனுப்புகிறார். இவ்விதமாக எகிப்துக்கு போன இஸ்ரவேலின் நாமங்கள்
பன்னிரண்டு பேரும் யாக்கோபின் கர்ப்பபிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.
யோசேப்பும்
அவனுடைய சகோதரர் யாவரும் ,அந்த தலைமுறையார் யாவரும் மரணமடைந்தார்கள்.
இஸ்ரவேல் புத்திரர்
மிகுதியும் பலுகி ஏராளமாய்ப் பலத்திருந்தார்கள்.தேசம் அவர்களால் நிறைந்தது.
ஆனால், யோசேப்பை
அறியாத புதிய ராஜன் எகிப்தில் தோன்றினான். அவன் அவனுடைய ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலர்
நம்மளில் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.
அவர்கள் பெருகாதபடிக்கும்,
ஒரு யுத்தம் உண்டானால் அவர்கள் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம் பண்ணி,
தேசத்தை விட்டு புறப்பட்டு போகாதபடிக்கும், நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ண வேண்டும் என்றான்.
அப்படியே அவர்களை
சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கும் அவர்கள் மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்.
அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காக, பித்தோம்,
ராமசேஸ் என்னும் பண்டசாலை பட்டணங்களை
கட்டினார்கள்.
ஆனாலும், அவர்களை
எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவுக்குகதிகமாய் இஸ்ரவேலர் பலுகிப் பெருகினார்கள். ஆகையால்
அவர்கள் இஸ்ரவேல் புத்திரரை குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.
எகிப்தியர்
இஸ்ரவேல் புத்திரரை கொடுமையாய் வேலை வாங்கினார்கள்.
இந்த காரியங்களை
குறித்து நாம் ஒன்று சிந்திக்கவேண்டும். ஆபிரகாம் தன்னுடைய வாழ்க்கையில் தேவன் வழிநடத்திக்
கொண்டிருக்கும் போது, தேவன் சொல்லாததை செய்ததின் நிமித்தமாக, தேவ ஆலோசனை கேட்டு சரியாக
கேட்டு செய்யாததின் நிமித்தமாக தலைமுறைகள் இவ்விதமாக கொடுமையான நாட்களுக்குள் காணப்படுகிறார்கள்.
தேவன் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் உற்றுக்
கவனிக்கிறவர். என்று நாம் மிகவும் தெரிந்து ,பயபக்தியோடு காணப்பட வேண்டும்.
தேவனுடைய முன்
நோக்கம் என்னவெனில் ஆபிரகாம் செய்த தவறுக்கு தலைமுறைகளை உபத்திரவத்தில் ஒப்புக் கொடுக்கிறார்.
மேலும் எகிப்தியனை நியாயந்தீர்க்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
அல்லாமலும்
தேவன் சொன்னதுபோல் இஸ்ரவேல் சபை பலுகி பெருகிக்கொண்டிருக்கிறது. எப்படியாவது இஸ்ரவேலை
ஒடுக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. அதனால் எகிப்தியர்,
யாத்திராகமம் 1:14
சாந்தும் செங்கலுமாகிய
இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு
அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும்,
அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.
இவ்விதமாக தேவன்
அவர்களை எகிப்தியரின் கையில் ஒப்புக் கொடுத்து, எகிப்தியர் அவர்களை உபத்திரவப்படுத்துகிறதை
பார்க்கிறோம். இதற்கு காரணம் முற்பிதாக்கள் செய்த பாவமே தலைமுறைகளை சத்துருவுக்கு அடிமைகளாக்குகிறார்
தேவன்.
பிரியமானவர்களே
நாமும் தேவசித்தம் செய்யாவிட்டால் நம்முடைய தலைமுறைகள், சபையாம் தலைமுறைகள் சத்துருவுக்கு
அடிமைகளாகிறார்கள். இதனை தெரியாதவர்களாகி நாம் மறைந்து போவோம். அதுபோல் இஸ்ரவேல் சபை,
பட்ட வேதனை, மறைந்து போனவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. நாம் இதனை இப்போதே தெரிந்து
நம் தலைமுறைகளுக்கு தேவ சாபம் வாங்காதபடி எச்சரிப்போடு காணப்படுவோம்.
தேவன் ஆபிரகாம்,
ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேற்றும் படியாக, மேலும்
இரண்டு செயல்களை கூட தேவன் நிறைவேற்றுகிறார்.
இஸ்ரவேலர் பலுகி
பெருகிறார், எகிப்தியனுடைய நியாயத்தீர்ப்பு, அதிக பொருட்களோடு இஸ்ரவேலர் புறப்பட்டு
வருதல் என்பவைகளாக காரியங்கள் முடிவில் நிறைவேறி வருகிறது.
எகிப்தியர்,
இஸ்ரவேலை ,அவர்கள் ஜீவன் கசப்பாக்கும் படியாக பாரமான வேலையை சுமத்துகிறதை பார்க்கிறோம்.
ஆனால் இப்போது யாருமே அதை உணரவில்லை எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு சுமத்தின வேலை
என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகையால் மீண்டு எடுக்கப்பட்ட தேவ ஜனங்கள்
இவ்வித வேலை செய்கிறவர்கள், தன்னை தான் சோதித்து அறியவேண்டும். தேவன் சொல்லுகிறார்
எந்த மனுஷனுக்கும் அடிமைகளாதிருங்கள் ,தேவனுக்கு மாத்திரம் தான் நாம் அடிமை, தேவன்
நம்மை சுயாதீனத்துக்கென்றே அழைத்திருக்கிறார்.
பிரியமானவர்களே
நாம் தேவனுக்கு மாத்திரம் அடிமையென்றால், தேவனுடைய வேலையாட்களாக இருந்தால் மாத்திரமே
தேவனுக்கு அடிமை. இல்லாவிட்டால் நாம் மனுஷனுக்கு தான் அடிமைகளாயிருக்கிறோம்.
நம்முடைய தேவன்
ஏதேன் தோட்டத்தில் வைத்து, ஆதாம், ஏவாள் சர்ப்பத்தின் மூலம் வஞ்சிக்கப்பட்டதால் மூன்று
பேருக்கும் மூன்று விதமான சாபத்தைப் போடுகிறதை பார்க்கிறோம்.
ஆதியாகமம் 3:17-19
பின்பு அவர்
ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று
நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும்
நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
அது உனக்கு
முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
நீ பூமியிலிருந்து
எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம்
புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
இவ்விதமாக பாவத்தின்
அடிமையில் இருக்கிறவர்கள் தேவனால் சபிக்கப்படுகிறார்கள் இந்த பாவத்தையும், சாபத்தையும்
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்தார். இதனை விசுவாசிக்கிறவர்கள்
அதன் மீட்பை சுதந்தரிக்க முடியும்.
கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து நமக்கு தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரமாக பரிசுத்த ஸ்தலத்திலே
பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார். நித்திய மீட்பை நாம் சுதந்தரிக்க வேண்டுமானால்,
எபிரெயர் 9:14
நித்திய ஆவியினாலே
தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச்
செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
பிரியமானவர்களே
நாம் தியானிக்கும் போது இஸ்ரவேல் சந்ததியாரை தேவன் அடிமைப்படுத்தி, உபத்திரவங்களை கொடுத்து,
அவர்களை அங்கிருந்து பலுகி பெருக செய்து, இஸ்ரவேலரை திரள் ஜனமாக்கி, அங்கிருந்து ஒரு
மீட்பை கொடுத்து, உண்மையாக விசுவாசிக்கிறவர்கள் கானானில் பிரவேசிப்பார்கள் என்பதை தேவன்
நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
இதிலிருந்து
நமக்கு தெரிய வருவது என்னவென்றால் நமக்கு நித்திய
மீட்பை தேவன் தருகிறார். பிரியமானவர்களே நாம் யாவரும் நித்திய மீட்பை சுதந்தரிக்க
வேண்டும். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும்
ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி
நாளை.