தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 11:3,4

கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து என்றன்றைக்கும் ஆசாரியராக வெளிப்பட்டு நம்மை நியாயந்தீர்க்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை பகைக்கிறவர்களோடு நடவாமல் இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11 நாளாகமம் 19:6 

 அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.

மேற்கூறிய வசனங்களில்  யூதாவின் ராஜாவாகிய யோசபாத் தன்னுடைய அரணான பட்டணங்களில் எல்லாம் நியாயாதிபதிகளை வைத்து சொன்னது நீங்கள் செய்கிற காரியங்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷருடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்.  இந்த விஷயத்தில் கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்.  மேலும் அவன் சொன்னது, 

11நாளாகமம் 19:7-11 

ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான்.

அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக்குறித்தும் விவாதவிஷயங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,

அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து செய்யவேண்டியது என்னவென்றால்,

நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள்.

இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.

மேற்கூறிய தேவனுடைய வார்த்தைகளின் பொருள் என்னவென்றால் நம்முடைய வாழ்வில் கர்த்தர் நீதியாய் நியாயந்தீர்ப்பார் என்றும், அவர் நியாயத்தின் வழிகளை தற்காத்து, எந்த அநியாயமும், முகதாட்சிணியமும் அவரிடத்தில் இல்லையென்பதையும், பரிதானமும் அவரிடத்தில் இல்லை என்பதனையும் திருஷ்டாந்தத்தோடு விளக்கி காட்டுகிறார்.  மேலும் கர்த்தரின் கடுங்கோபம் நம்மேல் வராதபடி உண்மையும், உத்தம இருதயத்தோடும் கர்த்தரின் கட்டளை, அவருடைய நியாயங்களின் வழிகளில் நாம் நடக்க வேண்டும் என்பதனையும் வேத வசனம் மூலம் எச்சரித்து கூறுகிறார்.  ஆதலால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் ஆசாரியரும், பிரதான ஆசாரியரும், நித்திய பிரதான ஆசாரியராக நம்மில் காணப்படுகிறார்.  ஆதலால் அவரே நம்மை எல்லாவற்றிலும் நியாயந் தீர்ப்பார்.  இந்த தீர்ப்பில் நாம் குற்றமற்றவர்களாக கணப்படும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.