தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 கொரிந்தியர் 6:20 

கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருடைய வசனமாகிய நியாயதீர்ப்புக்கு விலக்கி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் செய்த அக்கிரமத்தை கர்த்தர் மன்னிக்கும்படியாக கர்த்தரின் கையில் விழவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 21:14-15 

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.

எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான்.

மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் தாவீது இஸ்ரவேலில் செய்த அக்கிரமத்தினால் கொள்ளைநோயை வரபண்ணினார். கொள்ளை நோய் இஸ்ரவேலை வாதித்ததினால் எழுபதினாயிரம் பேர் மடிந்தார்கள் என்று பார்க்கிறோம்.  கர்ததர் எருசலேமையும் அழிக்க ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அழிக்கையில் தேவன் பார்த்து, அந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்ற போது; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையில் நின்றான்.  அப்போது தாவீது தன் கண்களை ஏறெடுத்து பார்க்கும் போது 

1நாளாகமம் 21:16 

தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.

மேற்கூறிய கர்த்தரின் வார்த்தைகளால் தாவீதும், மூப்பர்களும் தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து சொன்னது 

1 நாளாகமம் 21:17 

தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப்பு நடப்பித்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளினால் தாவீது கர்த்தரிடத்தில் மன்றாடின போது 

1 நாளாகமம் 21:18 

அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.

மேற்கூறப்பட்டவைகளை தாவீதினிடத்தில் சொல்லும்படி கர்த்தருடைய தூதன் காத்துக்கு கட்டளையிட்டான்.  அப்படியே தாவீது கர்த்தரின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படியே போனான். ஒர்னான் திரும்பி பார்த்து, அவனும், அவனோடிருந்த நாலு குமாரரும் ஒளித்துக்கொண்டார்கள்.  ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான்.  பின்பு தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது 

1 நாளாகமம் 21:21,22  

தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது, ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து, அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான்.

அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.

பின்பு ஒர்னான் தாவீதை நோக்கி 

1 நாளாகமம் 21:23 

ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் அதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்கதகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், போஜனபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை ஒர்னான் தாவீதினிடத்தில் கூறிய பின்பு தாவீது ராஜா ஒர்னானை நோக்கி சொன்னது; அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்கு சர்வாங்க தகனத்தை பலியிடாமல், அதை பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைப்பொன்னை ஒர்னானுக்கு கொடுத்து; அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை கட்டி, கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளையும்,சமாதானபலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்கதகன பலிபீடத்தின் மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்தரவுகொடுத்ததுமல்லாமல்,தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை திரும்ப உறையிலே போட வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்.  ஆதலால் ஒர்னான் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதை தாவீது அக்காலத்திலே கண்டு அங்கே தானே பலியிட்டான். அல்லாமலும் மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும், சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.  தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்கு பயந்திருந்தபடியினால், அவன் தேவ சந்நிதியில் போய் விசாரிக்கக்கூடாதிருந்தது.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகள் கர்த்தர் இந்நாட்களில் நாம் யாவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அவருடைய ஆலயமாக்கும் படியாக கிறிஸ்து நம்மை அவருடைய விலையேறிய இரத்தத்தினால் கிரயமாக்குகிறதையும் ஒர்னானின் களத்தை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேற்கூறப்பட்ட பட்டயம் என்பது கர்த்தரின் வசனம்; உறை என்பது கிறிஸ்துவின் சரீரம்; அது கர்த்தருக்கு பயந்து கீழ்படிகிறவர்களுக்கு சமாதானமும் ஜீவனும்; கீழ்படியாதவர்களுக்கோ தண்டனையும் மரணமுமாகும்.  இங்கு நாம் வாசிக்கும் போது இஸ்ரவேலரை மடிந்து விழப்பண்ணிது மட்டுமல்ல, எருசலேமையும் அழிக்க சித்தமுள்ளவராகுகிறார்.  இது என்னவென்றால் சபையை நடத்துகிறவர்கள் செய்கிற தவறுகள் ஜனங்களுடைய ஆத்துமாவை மடியபண்ணுவது மட்டுமல்ல, உள்ளான சரீரமாகிய எருசலேமையும் அழிக்க வல்லமையுள்ளவர் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் நாம் செய்கிற பாவங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் ஏற்ற பரிகாரம் கர்த்தரின் சந்நதியில் சேருமட்டும் அவர் அனுப்பின வசனமாகிய பட்டயம் நம்மை நோக்கி நியாயதீர்ப்பாக நிற்கும்.  இதனை கர்த்தர் நமக்கு தாவீதை கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவின் பலிபீடமாகவும், அந்த பலிபீடத்தில் நம் சர்வ அவயவங்களும் கர்த்தரின் வசனமாகிய அக்கினியால் தகனிக்கப்பட வேண்டும் என்பதும் அப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மில் சமாதானபலியாக செயல்படும்போது கர்த்தர் நம்முடைய பலியை அங்கீகரித்தால் நம்மை நியாயதீர்ப்பிலிருந்து விடுவித்து இரட்சித்து நீதியின் பாதையில் நம்மை நடத்தி மரணத்தினின்று நம்மை விடுவிக்கிறார்.   ஆதலால் நாம் எப்போதும் கர்த்தருக்கு பயந்து அவருடைய வசனங்களுக்கு நடுங்கும்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.