தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 61:10

கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தர் நீதியை சால்வையாக தரித்தும், வைராக்கியமாக போர்த்தும் கொண்டிருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கிறிஸ்துவினோடு பரிசுத்தத்தை காத்துக்கொண்டு வாழ்ந்தால் கர்த்தர் நம்மை பரலோகத்தில் சேர்த்துக்கொள்வார் என்பதனை குறித்து திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 2: 13-19

பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,

எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.

எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:

இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும்; ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.

அவன் சலித்துப்போகுமட்டும் அவர்கள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்றுநாள் அவனைத் தேடியும் காணாமல்,

எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.

பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எலியா  சுழற்காற்றினால் பரலோகத்திற்கு எடுத்தக்கொள்ளப்பட்டபோது, அதனை கண்ட எலிசா கீழே விழுந்த சால்வையை எடுத்து சென்று யோர்தான் கரையில் நின்றான்.  அல்லாமலும் அவன் அந்த சால்வையை கொண்டு எலியாவின் தேவன் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இரு பக்கமாக பிரிந்ததினால் அவன் இக்கரைப்பட்டான்.  இதனை எரிகோவில் பார்த்துக்கொண்டிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனை கண்டவுடனே எலியாவின் ஆவி எலிசாவிடம் இறங்கியிருக்கிறது என்று சொல்லி எலிசாவுக்கு அவர்கள் எதிர்கொண்டு போய் தரைமட்டும் குனிந்து வணங்கி, இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உமது எஜமானை தேடும்படி உத்தரவு கொடும்; ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களின் ஒன்றின் மேலாகிலும், பள்ளதாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டு போய் வைத்திருப்பார்கள் என்று சொன்னதற்கு அவர்களை அனுப்ப வேண்டாம் என்று எலிசா சொல்கிறான்.  ஆனால் அவர்கள் அவன் சலித்துப்போகுமட்டும் அலட்டிக்கொண்டிருந்த படியால் அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பது பேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்று நாள் அவனை தேடியும் காணாமல் எரிகோவிலிருந்த அவனிடத்தில் வந்த போது அவன் நான் போக வேண்டாம் என்று உங்களுக்கு சொல்லவில்லையா என்கிறான்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் தியானிக்கும் போது சால்வை என்றால் கர்த்தரின் நீதியும், கர்த்தரின் வைராக்கியம் என்றும் குறிப்பிடப்படுகிறது.  நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் நீதியால் நிறைந்தவர்களாயிருக்க வேண்டும். இந்த நீதி,  பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்பு நமக்குள்ளாக வாசம் பண்ணிக்கொண்டிருக்கிற கிறிஸ்துவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும், மேலும் நம்மிடத்தில் எதனை குறித்து நோக்கமுள்ளவராக இருக்கிறாரோ, அதனைக்குறித்து அவர் வைராக்கியம் உள்ளவருமாயிருக்கிறார்.  அதனைக் குறித்த வசனம் 

ஏசாயா 60:17,18  

நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.

இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.

ஆனால் எலிசா எலியாவிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட விதமாவது சுழற்காற்றினால் அவன் எடுத்துக்கொள்ளப்படும் போது, அதனை கண்டதால் எலிசா பெற்றுக்கொள்கிறான்.  ஆனால் இப்பொழுதோ நம் கிறிஸ்து நீதியாகிய சால்வையை தரித்தவராக நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார்.  அவர் அவ்விதம் நீதியை தரித்து யோர்தானை ஞானஸ்நானத்திற்கூட கடக்கப்பண்ணுகிறார். ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வது என்பது தான் மறுபடி பிறப்பது ஆகும்.அப்படியாக நாம் மறுபடி பிறந்தவர்களாக தேவராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும்.  அதனை குறித்த தேவ வசனம்  

யோவான் 3:3  

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இப்படியாக நாம் தேவராஜ்யத்தை பெற்றுக்கொள்வது மட்டுமல்ல, நமக்குள் வாசம்பண்ணுகிற கிறிஸ்துவினால் நம்மோடிருக்கிறவர்களும்  தேவராஜ்யத்தை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.