தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 77:15
யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
சபைக்குள் எழும்ப கூடாத காரியங்கள் விளக்கம்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதுவரையில் நாம் தியானித்ததான வேத பகுதிகளில் யாக்கோபின் மீட்பை பற்றி பார்த்தோம். மீட்கப்பட்டவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும், நாம் ஏன் சிறைபடுகிறோம், நம்மை தேவன் சிறையிருப்புக்கு ஒப்புக் கொடுக்கிற காரியங்களை யாக்கோபு சபையாக நமக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்தி, அந்த சிறையிருப்பிலிருந்து தேவன் விடுவிக்கிற விதத்தையும் தேவன் தம்முடைய மந்தையை எவ்விதம் நடத்தி செல்கிறார் என்பதை பற்றியும் தியானித்தோம்.
மேலும் யாக்கோபின் புத்திரர் பன்னிரண்டு பேரும் , பன்னிரண்டு கோத்திர பிதாக்களாக வேத வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் யாக்கோபுக்கு ராகேல் பெற்ற யோசேப்பை யாக்கோபு மிகவும் அதிகமாக நேசிக்கிறதை பார்க்கிறோம்.யாக்கோபு அதிகமாக யோசேப்பை நேசிப்பதற்கு காரணமென்னவென்றால் இஸ்ரவேலின் முதிர் வயதிலே யோசேப்பு பிறந்தான். அதனால் இஸ்ரவேல் தன் குமாரர் எல்லோரிலும் அதிகமாய் நேசித்து,அவனுக்கு பலவருணமான அங்கியை செய்வித்தான்.அதனால் அவன் சகோதரர் அவனிடத்தில் பகையாய் இருந்தார்கள்.
யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது யாக்கோபின் மறுமனையாட்டிகளின் குமாரர்கள் துன்மார்க்கமாக நடக்கிறதை யோசேப்பு தன் தகப்பனிடத்தில் அறிவிக்கிறதை பார்க்கிறோம். அதனால் யோசேப்பின் சகோதரர் அவனிடத்தில் பட்சமாய் பேசாமல் இன்னும் அதிகமாய் பகைத்தார்கள்.
ஆனால் யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு,அதை தன் சகோதரருக்கு அறிவித்தான். அதினிமித்தம் யோசேப்பை இன்னும் அதிகமாய் பகைத்தார்கள். யாக்கோபு என்னும் சந்ததி என்று சொல்லுவது கிறிஸ்துவின் சபைக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார். மேலும் தேவன் யாக்கோபுக்கு யோசேப்பை கனிதரும் செடியாக காட்டுகிறார்.இது சபைக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார். தேவன் யோசேப்புக்கு கொடுத்த சொப்பனத்தை தன் சகோதரரிடத்தில் சொல்கிறான்.நாம் வயலில் அறுத்த அரிகளை கட்டிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது.
உங்கள் அரிகட்டுகள் என் அரிக்கட்டை சுற்றி வணங்கி நின்றது என்றான்.
யோசேப்பு கண்ட சொப்பனம் சபையின் ஆத்துமாக்களை காட்டுகிறது.அவன் சகோதரர்கள் அரிகட்டுகள் விழுந்து கிடக்கிறவர்களாகவும் யோசேப்பின் கோத்திரம் நிலைநிற்கிறதாகவும் காட்டுகிறார்.
ஆதியாகமம் 37: 8
அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
இங்கு பார்க்கும்போது பொறாமையை காட்டுகிறது. சபைக்கு சபை பொறாமை
நீதிமொழிகள் 14:30
சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.
இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டால் அது எலும்புருக்கியாகயிருக்கும் நம்முடைய ஆத்துமாவின் வளர்ச்சி குன்றி போகும் ஆனால் நமக்கு சொஸ்தமனம் உண்டானால் அது நம்முடைய ஆத்துமாவுக்கு ஜீவன். அந்த ஜீவன் நமக்கு வெளிச்சமாயிருக்கும் அந்த வெளிச்சத்தின் பிரகாசத்திலேயே நாம் நடப்போம்.அப்படி நடப்போமானால் கிறிஸ்துவின் பாதையை தெரிந்து கொள்வோம். நாம் இடறி விழ மாட்டோம் ஆனால் யோசேப்பின் சகோதரர்கள் இடறி விழுந்து கிடக்கிறார்கள் என்பதை தேவன் யோசேப்புக்கு சொப்பனத்தில் திருஷ்டாந்தபடுத்துகிறார்.
மேலும் யோசேப்பு ஒரு சொப்பனம் காண்கிறான்
ஆதியாகமம் 37:9
அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
இதை அவன் தன் தகப்பனுக்கு சொன்னவுடனே,அவன் தகப்பன் நானும் உன் தாயும் உன்னை வணங்க வேண்டுமோ என்று சொல்லி கடிந்து கொண்டான்.
ஆதியாகமம் 37:11
அவன் சகோதரர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
1 கொரிந்தியர் 3:3
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
இதிலிருந்து நாம் தேவனுக்குள் நடந்து கொள்வோமானால் பொறாமை,வாக்குவாதம், பெரியவன்,சிறியவன் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரும் சகோதரர்களாக நடந்துகொள்ள வேண்டும். இங்கும் சபைக்கும், சகோதரர்களுக்கும் பொறாமை இருக்கிறதே பார்க்கிறோம்.
தேவசபையின் சந்ததிகள் ஆத்துமாவின் வளர்ச்சியில் சபையின் மூப்பர்கள் பொறாமை கொள்ளுகிறதை
பார்க்கிறோம். யாக்கோபு தன் சந்ததியாகிய யோசேப்பு பதினேழாவது வயதில் கண்ட சொப்பனத்தால் தேவன் அவனை ஆவியில் வளர செய்கிறார் என்ற கருத்தை கொண்டு இதயம் சரியில்லாமல் இருந்ததால் அதுவரையில் நேசித்து வந்த தன் மகனை சீகேமுக்கு மற்ற குமார் ஆடு மேய்க்கிற இடங்களுக்கு அனுப்பி விடுகிறான்.அதற்கு யோசேப்பு கீழ்ப்படிந்து நான் போகிறேன் என்கிறான்.
ஆதியாகமம் 37:14
அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேம ம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
அங்கிருந்து தோத்தானிலே போனான் தோத்தானில் வைத்து அவன் சகோதரர் ஆடுகளை மேய்கிறதை கண்டு பிடித்தான்.அவன் தூரத்தில் வருகிறதை சகோதரர்கண்டு அவனை கொலை செய்யும்படி யோசனை பண்ணி இதோ சொப்பனக்காரன் வருகிறான்.
ஆதியாகமம் 37:20
நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.
ஆனால் யோசேப்பின் சகோதரர் சொப்பனம் நிவிர்த்தி செய்யக்கூடாத படி யோசனை பண்ணுகிறதை பார்க்கிறோம். ஆனால் தேவன் நினைத்ததை நடப்பிக்கிறவர். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.